சிறப்புக் களம்

மனித உயிரைப் பறிக்கும் இருகலப் பாசிகள்.. உடலுக்குள் சென்றால் என்ன ஆகும் தெரியுமா?

மனித உயிரைப் பறிக்கும் இருகலப் பாசிகள்.. உடலுக்குள் சென்றால் என்ன ஆகும் தெரியுமா?

webteam

இருகலப் பாசிகள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? 

இருகலப் பாசிகள் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? குளங்களுக்கு அல்லது ஆற்றுப்படுகைகளுக்குச் செல்கையில் கவனித்தீர்கள் என்றால், அங்கிருக்கும் படிகட்டுகளில் பாசிகள் மிகுந்து காணப்படும். கவனமில்லாமல் நாம் அவற்றின் மேல் பாதங்களை வைத்தால் அவ்வளவுதான் நாம் வழுக்கி விழுவது உறுதி. அத்தகைய அடர்ந்த நிலையில் பாசிகள் படர்ந்து விரிந்திருக்கும். பார்ப்பதற்கு அழகாக பச்சைப் பசேல் என்று கண்ணுக்கு குளிர்சியாக இருந்தாலும், இவை நம் காலை வாரிவிட்டுவிடும். பொதுவாக நல்ல நீரில் மிகுதியாக வளரக்கூடியது என்றாலும், சிலவகை பாசிகள் கடலுக்கு அடியிலும் வளரக்கூடியது. சரி, பாசிகளால் நமக்கு நன்மையா... தீமையா... என்கிறீர்களா? இதைப் பற்றி தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.

சில பாசிகள் உயிரை பறிக்கக் கூடியவைதான்!

பாசிகள் சிலவகை நமக்கு நன்மை செய்தாலும், சிலவகை பாசிகள் மனித உயிரையும் பறிக்கக்கூடியவை. இந்தியாவில் பாசிகளைப் பற்றிய ஆராய்ச்சியை முதலில் தொடங்கியவர், சென்னையைச் சேர்ந்த எம்.ஓ.பி.பார்த்தசாரதி ஐயங்கார். இவர், ’இந்திய பாசியியல் துறையின் தந்தை’ எனவும் அழைக்கப்படுகிறார். பாசிகளைப் பற்றி ஆராய்சியை தொடங்கியபின் ஃபிரிட்சியல்லா, எக்பல்லோசிஸ்டாப்சிஸ், கேராசைஃபான், சிலிண்ட்சோகேப்சோப்சிஸ் போன்ற புதிய பாசி இனங்களைக் கண்டுபிடித்தார்.

அது என்ன ’இருகலப் பாசிகள்’ ? அது உடலில் சென்றால் என்ன ஆகும்?

பாசிகளைப்பற்றி ’வால்வகேல்ஸ்’ என்ற கட்டுரை ஒன்றையும் எழுதியுள்ளார். இவர் அனைத்து வகையான பாசிகளைப் பற்றிய ஆராய்ச்சியை தொடங்கினாலும், ’இருகலப் பாசிகள்’ பற்றிய ஆராய்ச்சி இவரைபற்றி பேச வைத்தது. இவரை தொடர்ந்து டி.வி.தேசிகாச்சாரி, குஜராத்தைச் சேர்ந்த எச்.பி.காந்தி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பி.டி.சரோட் மற்றும் என்.டி.காமத் ஆகியோர் இந்தியாவில் காணப்படும் இருகலப் பாசிகள் பற்றிய ஆராய்ச்சியை தொடர்ந்தார்கள்.

இருகலப் பாசிகள் ஒரு மனிதனின் உயிரையே பறிக்கக்கூடியது எனச் சொல்லப்படுகிறது. இருகலப் பாசிகள் நிறைந்து இருக்கிற கடலிலோ அல்லது ஓடையிலோ எதிர்பாராதவிதமாக மனிதன் ஒருவன் சிக்கிக்கொண்டால், அம்மனிதனின் மூச்சுக்குழாய் வழியாக அப்பாசியானது அவனது நுரையீரலுக்குள் புகுந்து அங்குள்ள காற்றுப்பைகளை வெடிக்கவைத்து விடுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் அவை இரத்தத்தில் கலந்து பல்வேறு திசுக்களை அழித்து அம்மனிதனின் வாழ்க்கையையே முடித்துவிடுவதாகவும் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில், ஏற்கெனவே இறந்த மனித உடலை இருகலப் பாசிகள் நிறைந்து இருக்கும் கடலில் வீசினால், அப்பாசிகள் அந்த உடலில் படிவதில்லை எனவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 

ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

அதாவது, பாசிகள் நிறைந்த கடலுக்குள் உயிருடன் சென்று இறந்த மனிதரின் உடலை, உடற்கூராய்வு செய்தபோது அவனுடைய எலும்புகளின் மஜ்ஜையில் இருகலப்பாசிகள் படிந்து இருந்ததாகவும், அதேநேரத்தில் உயிரற்ற உடலை கடலில் தூக்கி வீசி, அந்த உடலை உடற்கூராய்வு செய்தபோது அதில் இருகலப் பாசிகள் படிந்திருக்கவில்லை எனவும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உயிருள்ள மனிதருக்கு இவ்வகை பாசிகள் உயிரைப் பறிக்கும் அபாயத்தைத் தரக்கூடியது எனச் சொல்லப்படுகிறது.

ஜெயஸ்ரீ அனந்த்