சிறப்புக் களம்

மரம் ஏறும் தேங்காய் நண்டு பற்றி தெரியுமா ?

மரம் ஏறும் தேங்காய் நண்டு பற்றி தெரியுமா ?

jagadeesh

நண்டு என்றால் அசைவப் பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான். ஆனால் உலகில் பலவகையான நண்டு வகைகள் இருக்கிறது. அதில் சிலவற்றை மட்டும்தான் மனிதர்களால் சாப்பிடக் கூடியவை என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் ஒரு சில முக்கியமானது தேங்காய் நண்டு எனப்படும் ஒரு வகையாகும்.

இந்த அரிய வகையான தேங்காய் நண்டுகள் அதிகமாக வேட்டையாடப்படுவதாலும் சூழலியல் மாற்றங்களாலும் முற்றிலும் அழியும் ஆபத்தில் உள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மரம் ஏறும் குணம் கொண்ட தேங்காய் நண்டுகள், இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில் அதிகம் காணப்படுகின்றன. தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் அதிகம் தென்படும் இந்நண்டுகள் கணுக்காலிகள் உயிரினத்தை சேர்ந்தவை. இவற்றில் பல வகை இருந்தாலும், நாம் அறிந்திராத, பார்த்திராத நண்டு வகையைச் சேர்ந்தது தேங்காய் நண்டு.

10 கால்களுடன் ஓட்டினால் ஆன உடலமைப்பைக் கொண்ட இவற்றை மக்கள் உணவாக உட்கொள்கின்றனரா என்பது இதுவரை தெரியவில்லை. ஏனென்றால் இவை பூச்சியைப் போன்று உள்ளதால், இதை நண்டு என்று பலரும் ஏற்பதில்லை. இவ்வகை நண்டுகள் கடலின் கழிவுகளையும், மரங்களில் வாழும் பூச்சிகளையும் உட்கொள்ளும். தென்னை மரங்களில் பதுங்கி வாழும் இவற்றின் பழக்கமே, பிற நண்டு வகைகளிலிருந்து இவற்றை வேறுபடுத்துகிறது. இதனால்தான், தேங்காய் நண்டு என இவ்வகை நண்டுகளுக்கு பெயர் ஏற்பட்டது.

தேங்காய் நண்டுகளைப் பொறுத்தவரை பல வண்ணங்களில் காட்சியளிக்கும். சில இடங்களில் வண்ணத்தை வைத்து அவற்றின் வகையைப் பிரிக்கின்றனர். ஆனால், இவை நிற பாகுபாடின்றி ஒன்றோடு ஒன்று கூடி, இன விருத்தி செய்கின்றன. மரங்களில் இனப் பெருக்கம் செய்யும் தேங்காய் நண்டுகள் கடலில் முட்டையிடும். சில நாள்களுக்குப் பின்னர் முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகள், சிப்பி மற்றும் சங்குகளில் ஒட்டிக் கொண்டு வாழத் தொடங்கும். ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்த பின்னர், நிலத்தில் குழிகளைத் தோண்டி, அதில் தேங்காய் நார்களைப் பரப்பி வாழும்.

நிலத்தில் காணப்படும் முதுகெலும்பற்ற உயிரினங்களிலேயே இந்த நண்டுதான் பெரியது. அதிகபட்சமாக, இரண்டு அடி வரை வளரும். மூன்று கிலோ எடை இருக்கும். மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பகத்தில் தனுஷ்கோடியில் இருந்து தூத்துக்குடி வரையிலும் குருசடைத் தீவு, முயல் தீவு, அப்பா தீவு, நல்ல தண்ணி தீவு உள்ளிட்ட 21 தீவுகள் உள்ளன. இந்த தீவுக்கூட்டங்களில் மரம் ஏறும் குணம் கொண்ட தேங்காய் நண்டுகள் அதிகம் வாழ்கின்றன.

அதுபோன்று, அந்தமான் நிகோபர் தீவுக்கூட்டங்களிலும், இந்தியப் பெருங்கடல் தீவுகளிலும் தேங்காய் நண்டுகள் காணப்படுகின்றன. தேங்காய் பறிக்க மரம் ஏறுவோர், மரத்தில் நண்டைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவற்றைக் கொல்வதாலும், இந்த நண்டுகளின் இறைச்சியில் மருத்துவக் குணம் உண்டு என நம்பப்படுவதாலும் அதிகம் வேட்டையாடப்பட்டு வருகின்றன. இப்போது இந்தியாவைப் பொருத்தவரை ஒட்டுமொத்தமாக 200 தேங்காய் நண்டுகள் மட்டுமே இருப்பதாக இயற்கை பாதுகாப்பு அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.