சிறப்புக் களம்

'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி தேவையா, இல்லையா? - WHO தலைமை விஞ்ஞானியின் பார்வை

'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி தேவையா, இல்லையா? - WHO தலைமை விஞ்ஞானியின் பார்வை

நிவேதா ஜெகராஜா

ஒவ்வொரு தடுப்பூசிக்கும், அதன் செயல்திறனை பொறுத்து அது எத்தனை டோஸ்களாக உடலில் செலுத்தப்படவேண்டுமென்ற வழிமுறை நிர்ணயிக்கப்படும். அந்த அடிப்படையில்தான், கோவிஷீல்டு – கோவேக்சின் தடுப்பூசிகளுக்கு இரு டோஸ்களும்; ஸ்புட்னிக் வி – மாடர்னா தடுப்பூசிகளுக்கு ஒரு டோஸூம் நிர்ணயிக்கப்பட்டது. ஒன்றுக்கும் மேற்பட்ட டோஸ்கள் என்றால், அவையும் எத்தனை மாதம் / நாள் இடைவெளிக்குள் தரப்பட வேண்டுமென்பதும் நிர்ணயிக்கப்படும்.

இதேபோல ஒவ்வொரு தடுப்பூசிக்கும், அதன் செயல்திறனை நிர்ணயிக்கும் கால அளவென்று ஒன்று இருக்கும். அந்த காலத்துக்கு பிறகு, அதற்கு உடலில் செயல்திறன் இருக்காது என்பது பொருள். கொரோனா தடுப்பூசிக்கு, இது இன்னமும் தெரியவில்லை. அனைத்தும் ஆய்வுநிலையிலேயே இருக்கிறது. ஒருவேளை அது தெரியவந்தால், குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட தடுப்பூசியை போட்டுக்கொள்ள பரிந்துரைக்கப்படும். ஒருவேளை ஏதாவதொரு கொரோனா தடுப்பூசிக்கு வாழ்நாள் செய்லதிறன் இருந்தால் மட்டும், அது மீண்டுமொரு முறை போட பரிந்துரைக்கப்படாது.

இப்போதைக்கு எந்தவொரு கொரோனா தடுப்பூசிக்கும், அதன் செயல்திறன் எவ்வளவு காலம் இருக்குமென்பது தெரியவில்லை என்பதால் ஏற்கெனவே போடப்பட்டிருக்கும் ஒன்று / இரண்டு டோஸ் தடுப்பூசிகளின் செயல்திறனை நீட்டிப்பதற்காக 'பூஸ்டர் டோஸ்' என்றொரு டோஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், குறிப்பிட்ட தடுப்பூசியின் செயல்திறன், அடுத்து சில மாத நீட்டிக்கப்படும்.

ஆனால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியமானதுதானா என்பது பற்றி கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதுபற்றி, இங்கு விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள்.

இங்கிலாந்தில் இதுபற்றி ஆய்வுகள் நடந்துக்கொண்டிருப்பதாக பொது சுகாதாரத்துறை செயலர் கடந்த மாதம் அறிவுறுத்தியிருந்தார். மே மாத இறுதியில், பூஸ்டர் தடுப்பூசி குறித்த ஆய்வுகள் நடந்து வருவதாகவும், எந்த தடுப்பூசியும் 100 சதவீதம் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்காது என்பதால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்றும் நிதிஆயோக் சுகாதாரக் குழு உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் தெரிவித்தார்.

எனினும், இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, கட்டாயத்தேவையா என்பது பற்றி பல விவாதங்கள் எழுந்து வருகிறது. இதுபற்றி பேசியிருக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், ‘இது அவசியமா என்பது பற்றி சொல்ல, பெரியளவில் தகவல்கள் கிடைக்கவில்லை. இப்போதே இதுபற்றி பேசுவது, மிகவும் முன்கூட்டி எடுக்கப்படும் முடிவாக இருக்கும். ஏனெனில், இன்னும் நிறைய பேர் முதல் டோஸ் தடுப்பூசியே எடுக்காமல் இருக்கிறார்கள். அதற்குள் நாம் அடுத்தடுத்த டோஸ் பற்றி கவலைப்பட்டு வருவது, சரியாக இருக்காது’ எனக் கூறியிருக்கிறார்.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போலவே விவாதத்துக்கு உள்ளாகியிருக்கும் மற்றொரு விஷயம், இருவேறு தடுப்பூசிகளை – இரு டோஸாக எடுத்துக்கொள்வது. இருவேறு தடுப்பூசிகளை இரு டோஸ்களில் எடுக்கும் வழிமுறையை, ‘மிக்ஸ்ட் வேக்சின்’ அல்லது ‘கலப்பு தடுப்பூசி’ என குறிப்பிடுகின்றனர் அறிவியலாளர்கள்.

இதுபற்றி பேசியிருக்கும் சௌமியா சுவாமிநாதன், “இது நல்ல பலனை தருமென்றுதான் தெரிகிறது. இதன்மூலம், தடுப்பூசி பற்றாக்குறையை பெரியளவில் தடுக்க முடியும். வலுவான தடுப்புத்திறனை இது உடலில் ஏற்படுத்துவதாக தெரிகிறது” எனக் கூறியுள்ளார்.

ஆனால் இப்படி மிக்ஸ்ட் வேக்சின் எடுத்துக்கொள்பவர்களுக்கு, ஒரே தடுப்பூசியை எடுத்துக்கொள்பவர்களை விடவும் கூடுதலாக வலி, காய்ச்சலின் தீவிரம், மேலும் சில சிறு சிறு பக்கவிளைவுகள் ஏற்படுவதாக சில ஆய்வுகள் தெரிகிறது.

பூஸ்டர் டோஸ் மற்றும் மிக்ஸ்ட் வேக்சின் ஆகிய இரண்டு ஐடியாக்களுமே இப்போதைக்கு ஆய்வுநிலையிலேயேதான் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.