தஷ்வந்த்! இந்தப் பெயருக்குப் பெரிய புராணம் படிக்கத் தேவையில்லை. அந்தளவுக்கு ஒட்டுமொத்த தமிழகத்தையையே தாக்கியது இவரது கொடூரச் செயல். 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அவர் இப்போது சிறையில் இருக்கிறார். அவர் ஒரு தூக்குத் தண்டனைக் கைதி. 23 வயதே நிரம்பிய இளைஞர் தஷ்வந்த், அவரது குடியிருப்பின் அருகிலேயே இருந்த குழந்தையை தன் இச்சைக்கு இரையாக்கிக் கொண்டார். ஆகவே, குற்றம் நிரூபிக்கப்பட்டு தூக்குத் தண்டனையுடன் கூடிய 46 ஆண்டுகள் சிறை தண்டனையும் அவர் அனுபவித்தாக வேண்டும் என 2018 ஆண்டு நீதிமன்றம் அவருக்கு தீர்ப்பளித்தது.
அதாவது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது. இது தவிர, 363 பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் பிரிவு 366ன் கீழ் 10 ஆண்டுகளும் 354-பி பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் பிரிவு 201ன் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான போஸ்கோ சட்டத்தின் 6வது பிரிவின் கீழ் 10 ஆண்டுகளும் 8வது பிரிவின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 46 ஆண்டுகள் சிறை தண்டனை தஷ்வந்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தீர்ப்பு வெளியான அன்று, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தின் வளாகத்திலேயே ஹாசினியின் தந்தை கதறி அழுதார். எந்த மொழியில் பேசுவது எனத் தெரியாமல் தவித்தார். அவர் கன்னடத்தில் பாதி, ஆங்கிலத்தில் மீதி எனத் தரப்பு ஆதங்கத்தை அள்ளிக் கொட்டினார். வார்த்தைகளை மீறி அவரது வலி, பார்த்த அனைவரையும் பாதித்தது.
2017 பிப்ரவரி மாதம் கொலை சம்பவம் நடந்த நிலையில், அடுத்த ஓராண்டிற்குள் வழக்கின் விசாரணை முடிவடைந்து, 2018 பிப்ரவரி மாதத்தில் தஷ்வந்திற்கு தண்டனைக் கிடைத்தது. தஷ்வந்த், விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து வந்தபோது அவர் மீது பெண்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். காவல்துறையினர் அவரை பிடித்து தள்ளியதாகக் கூறி கோபத்தை வெளிப்படுத்தினார் தஷ்வந்த். புகைப்படக் கலைஞர்கள் அவரை படம் எடுக்க முற்பட்டபோது, ‘இங்கு என்ன நடக்கிறதுனு தெரியாம படம் எடுக்க வந்துட்டீங்களா?’எனப் பாய்ந்து வந்து பேசினார்.
இந்தத் தண்டனை வழங்கப்பட்டப் பின்பு அவர் சிறையில் என்ன செய்கிறார் என்றும் சில செய்திகள் வெளிவந்தன. சிறையில் தன் வழக்கமான வாழ்க்கையை நகர்த்தி வருவதாகவும், இரவில் அதிக நேரங்களை சட்டப் புத்தகங்களை படிக்க செலவழிப்பதாகவும் சிறைத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் தஷ்வந்த், தன் தரப்பு வாதத்தை எடுத்து வைக்க வழக்கறிஞரே வேண்டாம் என்றும் உடனடியாக என்னை தண்டித்துவிடுங்கள் என்றும் அவர் முறையிட்டார். பிறகு அரசு அவருக்கு ஒரு வழக்கறிஞரை வைத்து வாதாட அறிவுரை வழங்கியது. அன்று தனக்கு வழக்கறிஞரே வேண்டாம் எனச் சொன்ன தஷ்வந்த், சிறையில் சட்டப் புத்தகங்களை படித்து வருவது ஒரு முரணாகவே பேசப்படுகிறது. அவர் ஏன் சட்டம் பற்றி படிக்க வேண்டும்? அப்போது இந்த வழக்கில் ஏதாவது சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதா எனப் பல கேள்விகளை அவரது நடவடிக்கை முன்வைக்க முற்படுகிறது என்கிறனர் சிலர்.
மருத்துவ ரீதியாக தஷ்வந்தை பலர் சோதித்துள்ளனர். மனரீதியாக அவருக்கு கவுன்சிலிங், சிகிச்சை எனப் பல கட்டங்கள் அவரது வாழ்வில் உண்டு. மருத்துவ துறையில், குழந்தைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொலை செய்பவர்களை Infanticide என்கிறார்கள். அதே போல தாயை கொலை செய்பவர்களை Matricide என்கிறார்கள். பெற்ற தகப்பனையே கொலை செய்பவர்களை Patricide என்கிறார்கள். இதில் தஷ்வந்த், Infanticide, Matricide என்று இரண்டு கொடூரங்களை செய்துவிட்டார் என முடிவு செய்துவிட்டது நீதிமன்றம்.
அதுசரி, எப்போதோ நடந்த தஷ்வந்த் விவகாரத்தை இப்போது தோண்டி எடுத்து பேச வேண்டும் எனப் பலருக்கு தோன்றலாம். காரணம் இருக்கிறது. இவரை ஜாமீனில் எடுக்க அவரது தந்தை முயற்சிப்பதாக ஒரு தகவல் கசிந்து வந்தது. அதையொட்டி இந்த வாரம் வெளியாகியுள்ள ‘ஆனந்த விகடனில்’ தஷ்வந்தின் தாய் சரளாவின் உறவினர் ஒருவர் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார். அதாவது தஷ்வந்த், கொலை குற்றத்திற்காக முதல் முறை சிறைக்குச் சென்ற பிறகு அவரது தந்தை அவரை மீண்டும் ஜாமீனில் வெளியே எடுத்தார். அப்போது வீடு திரும்பிய தஷ்வந்த், வீட்டில் ஒரு அந்நியரை போல வாழ்ந்து வந்துள்ளார். அவரது தாய், தினமும் அவரை, ‘ஒரு சின்னக் குழந்தையை இப்படி பண்ண உனக்கு எப்படிடா மனம் வந்தது’ என வார்த்தைகளால் துளைத்துள்ளார். அந்தக் கேள்விகள் கோபமாக மாறி இறுதியில் அவர், தனது தாயையே கொலை செய்ய முடிவெடுத்து அதனை நிறைவேற்றியும் இருக்கிறார் எனப் பல விஷங்களை பேட்டியில் பேசியிருக்கிறார் சரளாவின் உறவினர்.
இதில் என்னக் கொடுமை என்றால், தஷ்வந்த்தான் குற்றவாளி என உறுதியான பிறகு உடைந்துபோய் உள்ளார் அவரது தாய். ஆகவே அவர் பித்ருகளுக்கு செய்யும் கர்ம காரியங்களை போல பல சடங்குகளை செய்து வந்துள்ளார். காகத்திற்கு உணவு வைப்பது, புறாவிற்கு இரை இடுவது, கோயில் குளமாக போய் தன் முழுநேரத்தையும் செலவிடுவது என அவர் ஒரு புதிய மன அழுத்தத்தில் தத்தளித்திருக்கிறார். இந்த உண்மைகளை எல்லாம் முதன்முறையாக தஷ்வந்த் உறவினர்கள் பேச முன்வந்துள்ளனர்.
அவரது தந்தை சேகர், இந்த விவகாரம் குறித்து பேசவே மறுத்திருக்கிறார். இறுதியில் ஒரு தகப்பனாக அவனைத் தூக்கில் போடாதீர்கள்.. வாழ்நாள் முழுக்க அவன் சிறையிலேயே கிடக்கட்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். ஏறக்குறையை இரண்டு உயிர்கள் பலியாகிவிட்டன. மீண்டும் ஒரு உயிர்ப்போவதை அவர் மனம் சம்மதிக்கவில்லை என்றே அவர் பேட்டி நமக்குச் சொல்கிறது.
மூன்று மாதங்களுக்கு முன்பாக தஷ்வந்த், பற்றிய ஒரு செய்தி படத்தை ‘பிஹைண்ட்வுட்’ தளத்திற்காக பத்திரிகையாளர் அப்சரா ரெட்டி எடுத்திருந்தார். அதில் முதன்முறையாக தனி பேட்டி ஒன்றை தஷ்வந்த் கொடுத்திருந்தார். அதில் அவர், ‘சம்பவம் நடந்த அன்று நான் உறவினர் திருமணத்திற்குச் செல்லவில்லை என்கின்றனர். ஆனால் நான் போனேன். பெற்றோருடன் 5.30 மணிக்குப் போகவில்லை. 8.30 மணிக்கு தனியாகப் போனேன். நேராக விளையாட்டு மைதானத்திலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டு, பிறகு தனியாக போனேன்’ என்று ஒரு புது விளக்கம் தந்துள்ளார். அப்படி என்றால் திருமண மண்டபத்தில் பதிவாகி இருந்த வீடியோ காட்சி இருக்கும் இல்லையா என்றால், அதற்கு நான் பின் வாசல் வழியாக போனேன் என்கிறார். அது உண்மை என்றால் அவரது உறவினர்கள் யாரேனும் ஒருவராவது சாட்சியம் சொல்லி இருக்க முடியும். அல்லது திருமணத்தில் எடுத்த ஒரு புகைப்படத்தையாவது கோர்ட்டில் காட்டி இருக்க முடியும். அதை அனைத்தையும் மறுக்கிறார் தஷ்வந்த்.
யாரோ தனக்கு எதிராக ஈகோ காரணத்தால் இந்த வழக்கில் தன்னை மாட்டி விட்டுவிட்டார்கள் என்கிறார். அப்சரா அது யார் என்று கேட்டதற்கு தெரியவில்லை என்கிறார். சிறுமியை கொன்றவர்கள்தான் உங்கள் தாயையும் கொன்றார்களா என்றால் ‘மே பி’ என்கிறார். மும்பையில் நீங்கள் பாலியல் தொழில் செய்யும் விடுதியில் இருந்ததாக காவல்துறை சொன்னதே என்றதற்கு, அது பொய். நான் தனியாக ஒரு விடுதியில் தங்கி இருந்தேன். மாலை 3 மணிக்கு என்னை கைது செய்தார்கள். ஆனால் இரவுதான் பிடித்ததாக காவல்துறை செய்தி சொன்னது. அதில் உண்மை இல்லை என்கிறார்.
‘எனது விந்தணுக்கள் சிறுமியின் உடையில் படிந்திருந்ததாக காவல்துறை கூறுகிறது. அதை வைத்தே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த விந்தணு என்னுடையதுதான். அதை பாட்டிலில் என்னிடம் இருந்து சோதனைக்காக காவல்துறை வாங்கியது. அதை அவர்கள் அந்த உடையில் தடவி இருக்கலாம் இல்லையா? உடை முழுவதும் எரிக்கப்பட்டதாக கூறிய காவல்துறை, அந்த விந்தணு மட்டும் எப்படி உடையில் எரியாமல் இருந்தது’ என எதிர்க்கேள்வி எழுப்பி இருக்கிறார். ஏறக்குறைய 35 சாட்சியங்கள் மேல் விசாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பு தவறானது என அந்தப் பேட்டியில் தஷ்வந்த் கூறுகிறார். ஆனால் இந்த விவகாரத்தை விசாரணை செய்து எழுதிய பத்திரிகையாளர் ஒருவர், முழு உடலும், உடையும் எரியவில்லை என்று கூறி இருக்கிறார்.
அதேபோல வீட்டின் அருகில் இருந்த பெட்ரோல் பேங்கில் இருந்து கேனில் தஷ்வந்த் பெட்ரோல் வாங்கியதாக சாட்சியம் பதிவாகியுள்ளது. அதற்கான தொகை அவரது ஆக்சிஸ் வங்கிக் கணக்கில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது. ‘உங்கள் அம்மா இறந்த போது நீங்கள் ஏன் அவர் அருகில் இல்லாமல் மும்பை போனீர்கள்’ என அந்த ஆவணப்படத்தில் அப்சரா கேட்ட கேள்விக்கு, “பயம்தான் காரணம். காவல்துறை அடி தாங்க முடியாது, அதுவும் காரணம். எனது துக்கத்தை நான் வெளிப்படையாக காட்டவில்லை. அது என் சுபாவம்” என்கிறார். இந்தச் சுபாவம்தான் இவரை தூக்குத் தண்டனை வரை அழைத்து சென்றுள்ளது.