சிறப்புக் களம்

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனித்து போட்டி ? - பிரஷாந்த் கிஷோர் வியூகம்

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனித்து போட்டி ? - பிரஷாந்த் கிஷோர் வியூகம்

webteam

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின் ஆட்சிக்காலம் வரும் 2021ஆம் ஆண்டுடன் நிறைவு பெறுகிறது. இதனால் தமிழக மற்றும் தேசிய அரசியல் கட்சிகள் தற்போதே தங்கள் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைகளையும், கூட்டணி வியூகங்களையும் வகுக்கத் தொடங்கிவிட்டன. கூட்டணி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன.

தமிழகத்தின் பிரதான கட்சிகளுள் ஒன்றான திமுக 2021 தேர்தலில் வியூகத்தை வகுக்க தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோரை நியமித்திருக்கிறது. அவர் பல்வேறு ஆலோசனைகளையும், வியூகங்களையும் திமுகவிற்கு அறிவுறுத்தி வருகிறார். குறிப்பாக 2021ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தனித்து தேர்தலை சந்திக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினிடம் அவர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் கடந்த தேர்தல்களின் முடிவுகளைக் கொண்டும், தற்போதைய அரசியல் களம் குறித்தும் இந்த வியூகத்தை வகுப்பதாக தெரிகிறது. அவரது வியூகத்தை பார்ப்பதற்கு முன்பு 2016 சட்டப்பேரவை மற்றும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுக மற்றும் திமுகவின் நிலையை காண்போம்.

2016ஆம் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் ஆறு முனை போட்டி நிலவியது. அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நலக்கூட்டணி, பாஜக கூட்டணி, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் இடையே தேர்தல் போர் நடந்தது. இதில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியை தவிர மற்ற கட்சிகள் ஒரு தொகுதியை கூட வெல்ல முடியவில்லை. தமிழகத்தின் 234 தொகுதிகளில் அதிமுக 227 இடங்களிலும், கூட்டணி கட்சிகளுக்கு 7 இடங்களையும் ஒதுக்கியது. அதில் மனித நேய மக்கள் கட்சிக்கு 2, இந்திய குடியரசுக் கட்சிக்கு, சமத்துவ மக்கள் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தமிழ் மாநில முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு சீட்டு வழங்கப்பட்டன.

அதேசமயம் திமுக 176 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸுக்கு 41 இடங்களையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 இடங்களையும் வழங்கியது. அத்துடன் மனித நேய மக்கள் கட்சிக்கு 4, புதிய தமிழகம் கட்சிக்கு 3, பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி, சமூக சமத்துவப்படை ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு சீட்டு ஒதுக்கப்பட்டன.

அதேசமயம் மற்றொரு புறம் மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக 104, மதிமுக 28, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 25, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 25, தமிழ்மாநில காங்கிரஸ் 26 மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 26 இடங்களில் போட்டியிட்டன. இதுதவிர பாஜக கூட்டணி, பாமக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் களம் கண்டன.

தேர்தல் முடிவில் அதிமுக தனித்து 134 இடங்களை வென்றது. திமுக 89 இடங்களையும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 8 இடங்களையும் கைப்பற்றியது. இதுதவிர அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் ஒரு சில இடங்களை வென்றன. தமிழகத்தில் மொத்தம் பதிவான 4.29 கோடி வாக்குகளில் அதிமுக 41.06% வாக்குகளை பெற்றது. திமுக தனித்து 31.86% வாக்குகளை பெற்றது. காங்கிரஸ் 6.47% வாக்குகளை எட்டியது. 41 இடங்களில் போட்டியிட்டி அதில் பாதி இடங்களை கூட காங்கிரசினால் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தனித்து போட்டியிட்ட பாமக 5.36% வாக்குகளை பெற்றிருந்தது. மக்கள் நலக் கூட்டணி அனைத்து இடங்களில் தோல்வி அடைந்தது. இதைதொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் கூட்டணிகள் மாறின.

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி இல்லாமல் போனது. அதேசமயம் 2016ல் பிரதான கட்சிகளின் துணை இன்றி போட்டியிட்ட அதிமுக நாடாளுமன்றத்தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ்மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கைகோர்த்தது. மறுபுறம் காங்கிரஸ், இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிக் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மதிமுக ஆகியவற்றுடன் இணைந்து திமுக பெரும் கூட்டணியை அமைத்தது. தமிழகத்தின் 21 இடங்களில் திமுகவும், 20 இடங்களில் அதிமுகவும் போட்டியிட்டன. மற்றவை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது.

தேர்தல் முடிவில் புதுச்சேரி உட்பட 38 இடங்களை திமுக வென்றது. தேனியில் மட்டும் அதிமுக வென்றது. இதற்கிடையே வேலூர் தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டு, பின்னர் நடந்த இடைத்தேர்தலில் திமுக வென்றது தனிக்கதை. ஜெயலலிதாவின் மறைவு அதிமுகவின் பின்னடைவாக அமைந்தது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் திமுகவிற்கு வியூகம் வகுக்கும் பிரஷாந்த் கிஷோர் 2016ஆம் ஆண்டு போல் இந்த முறை திமுக கூட்டணி அமைக்க வேண்டாம் எனக் கூறியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அவ்வாறு செய்தால் மூன்றில் ஒரு பங்கு சட்டமன்ற சீட்டுகளை இழக்க நேரிடும் எனவும் அவர் கூறியதாக தெரிகிறது. அத்துடன் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்கலாம் என்றும், மாவட்டத்தில் ஒரு தொகுதியை இளைஞர் அணிக்கு அளிக்கலாம் என்றும் பிரஷாந்த் வியூகம் வகுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், குற்றப்பின்னணி இல்லாதவர்களுக்கு 2021 தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும் என ஸ்டாலினிடம் பிரஷாந்த் கிஷோர் கேட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க தமிழகத்தின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தலைமையில் ஒரு கூட்டணி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், அதில் பிரதான மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளில் ஒன்றும் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதையெல்லாம் கணித்தே கிஷோர் தனது வியூகங்களை வகுத்திருப்பதாகவும் தெரிகிறது.