‘சினிமாவில் திரைமொழியை வலிமையாவும் சரியாவும் பயன்படுத்திய இயக்குனர் மகேந்திரன்தான்’ என்கிறார், இயக்குனர் வசந்தபாலன். மகேந்திரனின் தீவிர ரசிகரான இவர், நாவல்களை மீள் வாசிப்பு செய்வது போல, மகேந்திரன் படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து வருபவர்.
‘’நாடகங்கள்ல இருந்துதான் சினிமா வந்தது. அதனாலேயே அப்ப எடுக்கப்பட்ட படங்கள்ல வசனங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். மகேந் திரன் சார் எழுதிய ’தங்கப்பதக்கம்’ படமே வசனத்துக்காகப் பேசப்பட்டதுதான். ரெக்கார்ட்டுகள்ல வசனங்களைக் கேட்ட காலத்துல தங்கப் பதக்கத்துக்கு கிராமங்கள்ல பெரும் வரவேற்பு.
அவர் வசனங்களைப் பார்த்துதான் மகேந்திரன் சாருக்கு ’முள்ளும் மலரும்’ படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் தயாரிப்பாளர் ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார். ஷூட்டிங் முடிஞ்சு படத்தைப் போட்டுப் பார்த்த தயாரிப்பாளருக்கு கோபம். ஏன்னா, படத்துல அதிகமான வசனங் கள் இல்லை. குறைவான வசனங்களோட, நல்ல திரைமொழியோட எடுக்கப்பட்ட படம் அது. தயாரிப்பாளர், உன் வசனத்தைப் பார்த்துதான் படத்தை இயக்க சொன்னேன், இப்படி பண்ணிட்டியேன்னு சண்டைப் போட்டாராம். அதுக்குப் பிறகு போராடி படம் ரிலீஸ் ஆச்சு. ஹிட். அதோட அதிகமா பேசப்பட்ட படமாவும் அது அமைஞ்சது.
பாரதிராஜா காட்டுற கிராமங்கள்ல பிரமாண்டமான பின்னணி இசை, பாடல்கள்னு பெரிய கொண்டாட்டம் இருக்கும். ஆனா, மகேந்திரன் சார் படங்கள்ல ஆர்ப்பாட்டம் இல்லாத கிராமம் காட்டப்பட்டிருக்கும். இவரோட கிராமங்கள்ல அமைதி அதிகமா இருக்கு. முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் படங்களைப் பார்த்து இன்னும் அந்த அமைதியை ரசிச்சுகிட்டு இருக்கலாம்.
மகேந்திரன் சாரோட, காளி கேரக்டர் இன்னைக்கு வரைக்கும் பேசப்பட்டுக்கிட்டு இருக்குன்னா, எத்தனை வலிமையான கேரக்டரை அவர் படைச்சிருக்கான்னு புரியும். படம் ரிலீஸ் ஆகி எத்தனை வருஷமாச்சு. இன்னைக்கும் அந்த கேரக்டர் உச்சரிக்கப்படுதுன்னா, அதோட
வீரியத்தைப் புரிஞ்சிக்கணும்.
’உதிரி பூக்கள்’ படத்துல அவர் காட்டிய வில்லன் கூட மென்மையா பேசற ஆளாதான் இருப்பார். உச்சஸ்தாயில கூச்சல் போடுற மாதிரி காட்டி யிருக்க மாட்டார். அவர் காட்டியிருக்கிற கேரக்டர்கள் நெருக்கமானவங்களா இருப்பாங்க. அதீதம் இல்லாத, எளிமையா அவர் படங்கள் இயக் கப்பட்டிருக்கு.
தன்னோட திரைப்படங்களைத் தாண்டி, அவர் எதையும் பேசியதே இல்லை. இவ்வளவு பெரிய சாதனையா பார்க்கப்படுற படங்களை படைச் சுட்டு அவர் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம, அமைதியா வாழ்ந்தார். இன்னைக்கு ஒரே ஒரு படம் பண்ணிட்டு, இந்த உலகத்தையே தூக்கி நிறுத் தற ஐடியாக்களை வச்சிருக்கிற மாதிரி பேசறவங்க மத்தியில, இந்த தமிழ்ச் சமூகம் தனக்குச் சரியான அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கா, கொண்டாடுதா, கொண்டாடலையா?ன்னு எந்த கவலையும் இல்லாம தன் படைப்புகளோடு வாழ்ந்தவர் மகேந்திரன் சார்.
அவரது படங்கள் அலங்காரம் பண்ணப்பட்ட தேர் போல உயரமா இருக்கு. அது, நிறைவான, அழுத்தமானத் தடங்களை தமிழ் சினிமாவுல பதிச்சிருக்கு அப்படிங்கறது பெருமையான விஷயம்’’ என்கிறார் வசந்தபாலன்.