சிறப்புக் களம்

சென்டிமெண்ட் பாதி.. மாஸ் பாதி..: தவிர்க்க முடியாத கமர்ஷியல் இயக்குநர் சிறுத்தை சிவா!!

சென்டிமெண்ட் பாதி.. மாஸ் பாதி..: தவிர்க்க முடியாத கமர்ஷியல் இயக்குநர் சிறுத்தை சிவா!!

webteam

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் இயக்குநர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாள் இன்று.

தமிழ் சினிமாவில் சென்டிமெண்ட் படங்கள் என்றால் நினைவுக்கு வருபவர் விக்ரமன். சென்டிமெண்ட் காட்சிகளை அள்ளித்தூவி குடும்ப ரசிகர்களை கவரும் வித்தையை சரியாக கையாள்வார் அவர். இடையிடையே மாஸ் சீன்கள், குடும்ப பின்னணி கதை, சென்டிமெண்ட் காட்சிகள் என பக்காவான கமர்ஷியல் திரைப்படங்களை கொடுத்து வெற்றி காண்பார். அதே பார்முலாவில் தற்போது வெற்றி வாகை சூடும் இயக்குநர் தான் சிறுத்தை சிவா. சிறுத்தை திரைப்படம் மூலம் தமிழில் கால்பதித்த சிவா அதன் பிறகு சிறுத்தை சிவா என அறியப்பட்டார். ஆனால் சிறுத்தை சிவா என்றதும் சட்டென நினைவுக்கு வருவது அஜித் - சிவா கூட்டணி தான்.

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அஜித்தை வைத்து தொடர்ந்து 4 படங்கள் கொடுத்து வெற்றி பெற்றார். கோட்சூட்டிலேயே அஜித் நடித்துக் கொண்டு இருக்கிறார் என பிம்பம் உருவான போது கிராமம், விவசாயம், வேட்டி சட்டை என வீரத்தில் மாஸ் காட்ட வைத்தது சிவாவின் மந்திரம். புதுவகை கெட்டப்பில் வேதாளம் இருந்தது. தொழில்நுட்பங்களை அதிகம் பேசிய விவேகம், மீண்டும் கிராமத்து பிண்ணனி, வேட்டி சட்டை என அஜித்தை மாற்ற்றியது விஸ்வாசம். இப்படி ஒவ்வொரு படத்திற்கும் தனக்கான ஸ்டைலை மாற்றிக் காண்பித்த சிவா. ஒவ்வொரு படத்திலும் சென்டிமெண்ட் என்பதை மட்டுமே கருவாக கொண்டிருப்பார்.

சிறுத்தையில் தந்தை-மகள் பாசம், வீரத்தில் அண்ணன் - தம்பி பாசம், வேதாளத்தில் அண்ணன் -தங்கை பாசம், விவேகத்தில் கணவன் - மனைவி பாசம், விஸ்வாசத்தில் அப்பா-மகள் பாசம் என குறிப்பிட்ட உறவின் பாசத்தை மையமாக வைத்து குடும்ப ரசிகர்களை கட்டிப்போட்டு விடுகிறார் சிவா. அதுவும் ஒரு பெரிய நடிகரின் சென்டிமெண்ட் படங்கள் என்பது தமிழ் சினிமா ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. அது வெற்றிப்படமாகவும் மாறிவிடுகிறது. இந்த கமர்ஷியல் பார்முலா தான் சிவாவை ரஜினி வரை செல்ல வைத்திருக்கிறது. தற்போது பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து ரஜினி நடிப்பில் அண்ணாத்த படத்தை சிவா இயக்கி வருகிறார். இந்தப்படம் பக்காவான குடும்பப் படமாக சென்டிமெண்ட் காட்சிகளுடன் நிறைந்திருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

பல வருடங்களுக்கு பிறகு குடும்ப, சென்டிமெண்ட் கமர்ஷியல் திரைப்படத்தில் ரஜினி வரப் போகிறார் என்பதையும் அவர் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர். சென்டிமெண்ட் காட்சிகளுக்கு பெயர்போன சிவா, மாஸ் சீன்களை வைப்பதிலும் கெத்து காட்டுவார். சிறுத்தையில் பல இடங்கள் கார்த்திக்கிற்கு சிறந்த மாஸ் சீன்களாக இருக்கும். அடுத்து வந்த அனைத்து படங்களிலும், அஜித் போன்ற மாஸ் நடிகரை சரியாக பயன்படுத்தி இருப்பார் சிவா. செண்டிமெண்டாக சென்றுகொண்டிருக்கும் படம் ஒரு மாஸ் சீன் மூலம் மீண்டும் பரபரப்பாகும்.

சரியான பிஜிஎம் உடன் சிவா வைக்கும் மாஸ் சீன்கள் எல்லாம் அந்த நடிகரின் எவர்கிரீன் சீன்களாகவே மாறும். இந்த மாஸ் இயக்குநர் ரஜினியை வைத்து கொடுக்கப்போகும் காட்சியில் நிச்சயம் திரையரங்கு விசில் சத்தத்தால் அதிரும் என்பதிலும் ஐயமில்லை. பெரிய கருத்துகள், ட்விட்ஸ்கள், உலக சினிமா குறியீடுகள் இப்படி எதும் இல்லை என்றாலும், ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு, வியாபார ரீதியாக வெற்றி என வணிக சினிமாவிற்கு சிவா சரியானவர் என்பதே பொதுவான கருத்தும் கூட.

சிவா இயக்கத்தில் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்கள் எல்லாம் சிவாவின் சென்டிமெண்ட்க்குள் ஒருமுறையாவது வந்து போக வேண்டுமென்பதே சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.