சிறப்புக் களம்

உருமாறிய கொரோனா Vs சாதாரண கொரோனா... என்ன வித்தியாசம்? - மருத்துவர் விளக்கம்

உருமாறிய கொரோனா Vs சாதாரண கொரோனா... என்ன வித்தியாசம்? - மருத்துவர் விளக்கம்

JustinDurai

உருமாறிய கொரோனா நோய்த்தொற்று, முன்பை விட தீவிர நோயை உண்டாக்குவதாகத் தகவல் இல்லை. அதேபோல தடுப்பூசிகளிலும் இந்த மாறுபாடு எந்தப் பிரச்னையையும் உண்டாக்காது என கண்டறியப்பட்டுள்ளது.

இப்புதுவருடத்தில் கொரோனாவின் பிரச்னைகள் சரியாகிவிடும் என்று அனைவரும் நம்பிக்கையோடு இருந்த நிலையில் புதுவருடத்திற்கு சற்று முன்னர் பரவிய செய்தி பலரையும் பீதிக்கு ஆளாக்கியது. பிரிட்டனில் பரவும் உருமாறிய கொரோனா வைரஸ் பற்றிய பயத்தால் பல நாடுகள் மீண்டும் விமானச் சேவையை நிறுத்தின, பயணக் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தின. ‘மறுபடியும் முதலிருந்தா’ என கேட்பதுபோல் உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பூஜ்ஜியத்திலிருந்து கணக்கிடப்பட்டு வருகிறது.

சரி, இந்த உருமாறிய கொரோனாவுக்கும்  சாதாரண கொரோனாவுக்கும் என்ன வித்தியாசம்? உருமாறிய கொரோனா வைரஸ் ஆபத்தானதா? தற்போதைய தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியுமா? என்பது குறித்து நம்மிடம் விளக்குகிறார் மருத்துவர் சென்பாலன்.  

‘’சார்ஸ் கோவிட் 2 எனப்படும் கோவிட்-19 கொரோனா வைரஸின் மரபணுக்களில் மாற்றம் ஏற்படுவது அடிக்கடி நிகழும் ஒரு இயல்பான நிகழ்வாகும். இம்முறையும் அதேபோல ஒரு மாற்றம் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது. இந்த மரபணு மாற்றம், வைரஸ் மனித செல்லில் ஒட்டிக் கொள்ளப் பயன்படுத்தும் முட்கள் போன்ற ஸ்பைக் புரதத்தின் 501ம் இடத்தில் அஸ்பராஜின் (N) எனும் அமினோ அமிலத்திற்கு பதிலாக டைரோசினை (Y) பதிலீடு செய்துள்ளது. இதனால் N501Y என அழைக்கப்படுகிறது.  சிலநேரங்களில் B.1.1.7 மாற்றம் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த மாறுபாட்டின் பண்புகள் முழுமையாகக் கண்டறியப்படாத நிலையில் “விசாரணையில் உள்ள மாறுபாடு - Variant Under Investigation -VUI” என முதலில் அழைக்கப்பட்டது. இங்கிலாந்தில் அதிக அளவு பரவல் நிகழும் நிலையில் இம்மாற்றம் கண்டறியப்பட்டதால், ஒருவேளை மரபணு மாற்றத்தால் அதிகம் பரவுகிறதோ எனும் சந்தேகத்தில் “பொருட்படுத்தத்தக்க மாறுபாடு - Variant of Concern - VOC” என அழைக்கப்படுகிறது. பொதுவாக ஊடகங்களில்  “யுகே வேரியண்ட்” எனவும் அழைக்கப்படுகிறது. இத்தனை பெயரும் குறிப்பது ஒரே மாறுபாட்டைத்தான்.

யுகே மாறுபாட்டைப்போல தென் ஆப்ரிக்க மாறுபாடு (501YV2), நைஜீரிய மாறுபாடு (B.1.207) போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன.

எதனால் இந்த மாறுபாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன?

* மாறுபாடுகள் சில நேரங்களில் அதிக பரவும் தன்மையை கொண்டுவரலாம்.

* அதிக இறப்பை உண்டாக்கும் நோயாக மாற்றலாம்

* நோய் கண்டறியும் பரிசோதனைகளில் தெரியாமல் போகும் அளவு உருமாற்றம் அடையலாம்.

* தடுப்பூசி, சிகிச்சை முறைகள் பயனளிக்காமல் போகலாம்.

இக்காரணங்களால் மாறுபாடுகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.

ஆனால் நல்வாய்ப்பாக இதுவரை இந்த மாறுபாடு முன்பை விட தீவிர நோயை உண்டாக்குவதாகத் தகவல் இல்லை. அதேபோல தடுப்பூசிகளிலும் இந்த மாறுபாடு எந்தப் பிரச்னையையும் உண்டாக்காது என கண்டறியப்பட்டுள்ளது.

வைரஸ் மனித செல்லில் ஒட்டிக் கொள்ள உதவும் ஸ்பைக் புரதத்தில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதாலும், யுகேவில் அதிக அளவில் தற்போது புதிய நோயாளிகள் கண்டறியப்படுவதாலும் “அதிகம் பரவும் தன்மை” கொண்டவையாக இருக்க வாய்ப்புள்ளது என்று கருதப்படுகிறது. இருந்தாலும் உறுதியாக கூறமுடியாததால் இது பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளன. இந்த மாறுபாடு இல்லாத மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் அதிக எண்ணிக்கையில் புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இப்போது யு.கேவில் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு முழுவீச்சில் தடுப்பூசி வழங்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதன் மூலம் வருங்காலத்தில் நோயின் தாக்கம் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த முடிவுகளால் பலநாடுகளும் மீண்டும் விமானச் சேவையை தொடர ஆரம்பித்துள்ளன. கோவிட் உறுபிணியின் போக்கில் இம்மாறுபாடுகள் இதுவரை பெரிய தாக்கத்தை உண்டாக்கவில்லை. இருந்தாலும் மாறுபாடுகளைத் தொடர்ந்து கவனித்து அதற்கேற்ப தயார் செய்து கொள்வது தற்போதைய சூழ்நிலையில் மிக அவசியமாகும்.”என்றார்.