சிறப்புக் களம்

ஜெயலலிதா டெபாசிட் இழந்தாரா? .. அண்ணாமலை சொன்னது பொய்யா? 1996 தேர்தலில் நடந்தது என்ன?

ஜெயலலிதா டெபாசிட் இழந்தாரா? .. அண்ணாமலை சொன்னது பொய்யா? 1996 தேர்தலில் நடந்தது என்ன?

webteam

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் டெபாசிட் இழந்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தவறாகச் சொல்லியிருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசலா?

சமீபகாலமாக அதிமுக - பாஜக கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதற்கு உதாரணமாய் இருதரப்பிலும் வார்த்தை மோதல்கள் வெடித்து வருகின்றன. மேலும் கட்சித் தலைவர்களின் உருவப் படங்களும் எரிக்கப்பட்டு வருகின்றன. என்றாலும், கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என்றே இருதரப்பிலும் கூறப்படுகிறது.

ஜெயலலிதா தேர்தலில் டெபாசிட் இழப்பா?

இந்த சூழலில் சமீபத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் தன் குடும்பத்தை ஒப்பிட்டுப் பேசியிருந்தார், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அதிலும் ஜெயலலிதா தேர்தலில் டெபாசிட் இழந்ததாக குறிப்பிட்டு பேசியிருப்பதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேச்சு

இதுகுறித்து பேசிய அண்ணாமலை, ”ஜெயலலிதா அம்மையாருக்கு டெபாசிட் போச்சு. துணிஞ்சு நின்னாங்க. அடுத்த எலக்‌ஷன்ல ஜெயிச்சாங்க. ஏனா அவர் தலைவர். டெபாசிட் போச்சுங்கறதுக்காக பின்வாங்கல” எனப் பேசியிருந்தார். இப்படி, அண்ணாமலை பேசியதால், ஜெயலலிதா எந்த தேர்தலில் டெபாசிட் இழந்தார் எனக் கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இங்கு விவரமாகப் பார்க்கலாம். ஜெயலலிதா, 1984ல் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு சட்டமன்ற தேர்தல்களில் மட்டுமே போட்டியிட்டார்.

ஜெயலலிதா சந்தித்த தேர்தல்கள்

ஜெயலலிதா இருந்தவரை 8 சட்டமன்றத் தேர்தல்களைச் சந்தித்தார். அதன்படி, முதன்முறையாக 1989ஆம் ஆண்டு போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 1991இல் பர்கூர் (தர்மபுரி மாவட்டம்) மற்றும் காங்கேயம் தொகுதிகளில் வென்றார். இதில் காங்கேயம் தொகுதி வெற்றியை ராஜினாமா செய்தார். 1996ஆம் ஆண்டு மீண்டும் போட்டியிட்ட பர்கூரில் (தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம்) திமுக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். அடுத்து, 2002ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

அதுபோல், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆண்டிபட்டி தொகுதியில் ஜெயலலிதா வெற்றிபெற்றார். 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஸ்ரீரங்கத்திலும், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் ஜெயலலிதா வெற்றிபெற்றிருந்தார். 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றிபெற்றிருந்தார்.

1996இல் சுகவனத்திடம் தோல்வி கண்ட ஜெயலலிதா

1989ல் தொடங்கி 2016 வரை 8 தேர்தல்களைச் சந்தித்த ஜெயலலிதா, 7 தேர்தல்களில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாகி இருக்கிறார். இதில் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பர்கூர் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் சுகவனத்திடம் தோல்வியை தழுவினார். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் 59,148 (50.71 சதவீதம்). இரண்டாமிடம் பிடித்த அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா பெற்ற வாக்குகள் 50,782 (43.54 சதவீதம்). 8,366 வாக்குகள் வித்தியாசத்தில் நூலிழையில்தான் தோல்வி அடைந்தார். அப்போது சுகவனம் வெற்றிபெற்றது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, 'யானை காதில் புகுந்த எறும்பு' எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா டெபாசிட் இழக்கவில்லை

ஒரு தேர்தலில் டெபாசிட் வாங்க வேண்டுமெனில் பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கிற்கும் அதிகமான வாக்குகளை பெறுவது அவசியம். இல்லையெனில் டெபாசிட் பறிபோய் விடும். அதாவது, தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டிய பணம் திரும்ப கிடைக்காது. அது அரசிடம் ஒப்படைக்கப்படும். அப்படி பார்த்தால் ஜெயலலிதா தோல்வியை தழுவிய பர்கூர் தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 50,782. அப்போது பதிவான மொத்த வாக்குகள் 1,80,024 ஆகும்.

இதில் ஆறில் ஒரு பங்கு என்பது 30,004. இந்த எண்ணிக்கையைவிட ஜெயலலிதா 20 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார். எனவே அவர் டெபாசிட் இழந்தார் என்று சொல்ல முடியாது. உண்மையில் அவர் டெபாசிட்டும் இழக்கவில்லை. எனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பேட்டியின் போது தவறான தகவலை பதிவு செய்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- ஜெ.பிரகாஷ்