முடி உதிர்தல் என்பது இன்றைய காலகட்டத்தில் பொதுவான பிரச்னையாக மாறிவிட்டது. பெரும்பாலும் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகள், கெமிக்கல் நிறைந்த பொருட்களின் பயன்பாடு, காலநிலை போன்றவை முடி உதிர்தலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. முடி முழுமையாக வளர்ந்தபிறகு பெண்களுக்கு கிட்டத்தட்ட 100 மயிரிழைகளும், அதுவே ஆண்களுக்கு கிட்டத்தட்ட 50லிருந்து 70 மயிரிழைகளும் உதிர்கிறது. ஆனால் முடி உதிர்தலின் எண்ணிக்கை இதைவிட அதிகரிக்கும்போது அதை முடிகொட்டுதல் பிரச்னை என அழைக்கிறோம் என்கிறார் சரும நிபுணர், மருத்துவர் ஜாஸ்ப்ரீத் ரஜானி. மேலும் பொதுவான முடி உதிர்தல் வகைகள் மற்றும் அதற்கான காரணங்களையும் அவர் விளக்குகிறார்.
ஆண்ட்ரோஜெனிக் அலோபேசியா(Androgenic Alopecia)
இதை முறையான முடிகொட்டுதல் என்றும் கூறுவர். அதாவது, மரபணு மற்றும் மயிர்க்கால்களின் டிஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (DHT) உணர்திறனால் ஏற்படுகிறது. இந்த முடிகொட்டுதலில் 7 நிலைகள் இருக்கிறது. அதவாது முடி உதிர்தலில் ஆரம்பித்து வேர்க்கால்களின் நுண்ணறைகள் சுருங்கி அவை முற்றிலுமாக மூடி வழுக்கையாகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வேக்கள் கூறுகிறது. இது பெரும்பாலும் பரம்பரை பிரச்னை என்றாலும், செரிமான பிரச்னை, தூக்கமின்மை, வாழ்க்கைமுறை, மன அழுத்தம் மற்றும் பிற உடலநலப் பிரச்னைகளும் முடி உதிர்தலுக்கு காரணமாகிறது. மேலும் தண்ணீர் மற்றும் மாசு போன்ற சுற்றுச்சூழல் பிரச்னைகளும் முடி உதிர்தலுக்கு முக்கியக் காரணிகளாக இருக்கிறது.
முதல் 4 நிலைகளுக்குள் கவனம் செலுத்தினால் முடி கொட்டுதலை குறைத்து வழுக்கை விழுவதை தடுத்துவிடமுடியும். இல்லாவிட்டால் ஆண்களுக்கு தலையின் மேல் மத்திய பகுதி மற்றும் வாகு எடுக்கும் பகுதியில் மயிரிழைகள் மெலிந்து அகன்றுபோதல் மற்றும் முடி உதிர்வு அதிகமாகி வழுக்கையாதல் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
டெலோஜென் எஃப்ளூவியம் (Telogen Effluvium)
மிகுந்த உடல்நலக் குறைபாடு மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பிறகு உடல் மற்றும் மனநிலையில் பாதிப்பு உண்டாகும்போது ஏற்படும் முடிகொட்டுதலைத்தான் டெலோஜென் எஃப்ளூவியம் என்கின்றனர். குறிப்பாக குழந்தைப்பேறுக்கு பிறகு, டைஃபாய்டு, காசநோய் மற்றும் வைரஸ் காய்ச்சல்களுக்கு பிறகு இந்த முடி கொட்டுதல் பிரச்னை உருவாகும். தற்போது குறிப்பாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைபெற்றவர்களுக்கு முடி கொட்டுதல் பிரச்னை அதிகமாக காணப்படுகிறது. அதாவது முடி வளரும் காலகட்டத்தை அனாஜென் காலகட்டம்(anagen phase) என்றும், முடிவளர்ந்து முடிந்தபின் உதிரும் காலத்தை டெலோஜென் காலகட்டம்( telogen phase) குறிப்பிடுவர். உடல்நலப் பிரச்னை ஏற்படும்போது சீராக உள்ள இந்த அனாஜென் மற்றும் டெலோஜென்னுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மாற்றம் உருவாகி முடி நேரடியாக டெலோஜென் நிலைக்கு சென்றுவிடும். இதனால்தான் அளவுக்கு அதிகமாக முடி உதிர்ந்து முடிகொட்டுதல் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதாவது சராசரியாக 300-400 மயிரிழைகள் ஒருவாரத்தில் உதிர்ந்துவிடும்.
அலோபீசியா அரியா( Alopecia Areata)
இது அவரவர் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஏற்படும் மாற்றத்தால் உருவாகும் பிரச்னை. பொதுவான ஆண்களுக்கு தலையில் ஒரு நாணய அளவிலான வழுக்கை ஏற்படும். இந்த பிரச்னை அதிகரிக்கும்போது புருவம் மற்றும் தாடி போன்ற இடங்களிலும் இந்த பிரச்னை உருவாகும். இந்த பிரச்னையை கார்டிகோஸ்டீராய்டுகள் எனப்படும் மருந்துகள் மூலம் மருத்துவர் ஆலோசனையுடன் மட்டுமே சரிசெய்ய முடியும். பெரும்பாலும் இந்த பிரச்னைக்கு மன அழுத்தமே காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
அலோபீசியா யுனிவர்சலிஸ் ( Alopecia Universalis)
இது அலோபீசியா அரியாவின் முற்றியநிலை. இந்த பிரச்னையால் உடலிலுள்ள மொத்த முடியும் உதிர்ந்துவிடும். இந்த பிரச்னைக்கும் அலோபீசியா அரியாவிற்கும் ஒரேமாதிரியான சிகிச்சைதான் அளிக்கப்படுகிறது.
முடி உதிர்தல் மற்றும் முடி கொட்டுதல் பிரச்னைகளை ஆராய்ந்து பார்க்கும்போது இவை உடலின் வெளிப்புற பிரச்னை அல்ல. உட்புற காரணிகளே பெரும்பாலான முடி உதிர்தல் பிரச்னைகளுக்கு காரணமாக அமைகிறது. அதே சமயம் உடலின் உட்புற பிரச்னைகளுக்கு இதை ஒரு அறிகுறியாக எடுத்துக்கொண்டு மருத்துவரை அணுகி தீர்வுகாண்பது சிறந்தது. பெரும்பாலானவர்களுக்கு முடி உதிர்தல் பிரச்னையை வைத்தே அனீமியா, தைராய்டு, பிசிஓஎஸ் மற்றும் வைட்டமின் குறைபாடுகள் கண்டறியப்படுகிறது. எனவே முடி உதிர்தல் பிரச்னை அதிகரிக்கும்போது மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே சிறந்தது.