சிறப்புக் களம்

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு: அ.தி.மு.க Vs பா.ஜ.க விரிசல் தீவிரமாகிறதா?

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு: அ.தி.மு.க Vs பா.ஜ.க விரிசல் தீவிரமாகிறதா?

webteam

தமிழக மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் வகையில், பாஜக ஏற்பாடு செய்த 'வேல் யாத்திரை' இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசால் அனுமதி மறுக்கப்பட்டிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

இந்த அனுமதி மறுப்புக்குப் பின்னால், தாங்கள் பாஜகவின் கைப்பாவை அல்ல என்று அதிமுக நிரூபிக்க முயற்சிப்பதாகவும், இவ்விரு கட்சிகளிடையே விரிசல் தீவிரமடைந்து வருவதன் ஒரு பகுதியாகவும் அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, 7.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான பிரச்னைகளிலும் கடுமையைக் காட்டிய அதிமுக அரசு, வேல் யாத்திரை விவகாரத்திலும் கோரோனா பரவல் பிரச்னையை முன்வைத்து, பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தியுள்ளது.

வேல் யாத்திரை ஏன்?

'இந்து மக்களுக்காக நாங்கள் இருக்கிறோம்' என்ற நம்பிக்கையை விதைப்பதே முதன்மை நோக்கம் என்று சமீபத்தில் புதிய தலைமுறை இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், தமிழக பாஜகவின் துணைத் தலைவரும், 'வேல் யாத்திரை'யின் பொறுப்பாளருமான கே.எஸ்.நரேந்திரன் கூறியிருந்தார்.

அதேவேளையில், 'பாஜக யாத்திரை என்றாலே, அது கலவரம் செய்யத்தான்' எனக் கூறி, வேல் யாத்திரைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்ததும் கவனிக்கத்தக்கது.

தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் நோக்கில், கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய அரசியலில் யாத்திரை என்பது பாஜகவின் மிக முக்கியமான பிரச்சார வியூகம் என்பதால், தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருந்த வேல் யாத்திரை கவனம் ஈர்த்தது.

இந்த யாத்திரையை நாளை (நவ.6) திருத்தணியில் தொடங்கி, டிசம்பர் 6 ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு செய்ய பாஜக திட்டமிட்டது. இந்த யாத்திரை சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு வித்திடும் என அரசியல் கட்சிகள் கூறிவந்த நிலையில், இதற்குத் தடைவிதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் இருவர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வேல் யாத்திரையை நடத்த அனுமதி இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. தமிழகத்தில் 2-வது மற்றும் 3-வது கொரோனா அலைகள் தொடர்பான அச்சுறுத்தல் இருப்பதால் யாத்திரைக்கு அனுமதியளிக்க முடியாது என்று நீதிமன்றத்திடம் தமிழக அரசு விளக்கமும் அளித்தது.

இதனைத்தொடர்ந்து, வேல் யாத்திரைக்கு தடை கோரிய வழக்குகளை முடித்து வைத்த உயர் நீதிமன்றம், வேல் யாத்திரைக்கு அனுமதி கோரும் பாஜக மனு மீது தமிழக அரசு எடுக்கும் முடிவை பொறுத்து வழக்குகளை தொடரலாம் என தெரிவித்தது.

ஊர்வலங்களை சமூக இடைவெளியுடன் நடத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது என்றும், பள்ளிக் கல்லூரிகளை திறக்க அனுமதியளித்துள்ள மாநில அரசு யாத்திரையை நடத்த அனுமதி கொடுக்க மறுப்பது சரியானது அல்ல என்றும் எதிர் வாதம் செய்யும் தமிழக பாஜக, இந்த விவகாரத்தில் சட்டப்போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.

அதிமுக - பாஜக கருத்து மோதல்கள்:

இந்த விவகாரம் குறித்து பேசிய தமிழக பாஜகவின் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், "அரசின் நிலைப்பாடு தவறான ஒரு விஷயம். கொரோனாக் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்படும். இது மிகப் பெரிய கூட்டத்தைக் கூட்டக்கூடிய யாத்திரை அல்ல. மக்களுக்கு பல்வேறு விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான யாத்திரை. ஆகையால், இதற்கு அரசு அனுமதியளிக்கும் என நம்புகிறேன்" என்றார்.

அதேவேளையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரிடம் கேட்டபோது, "கொரோனா தொற்றின் 2-வது மற்றும் 3-வது அலைகள் பரவும் அபாயம் உள்ளது. மக்களைக் காப்பற்ற வேண்டியது அரசின் கடமை. ஆகையால் இந்த யாத்திரையை அவர்களது கட்சியும் சரி, அவர்களும் சரி கை விடுவதுதான் நல்லது. ஒருவேளை அவர்கள் தடையை மீறி யாத்திரையை நடத்தும் பட்சத்தில் சட்டம் தனது கடமையை செய்யும். பாஜகவிற்கு மட்டுமல்ல; வேறு எந்த கட்சிக்கும் இது பொருந்தும்" என்று தெரிவித்தார்.

'சட்டம் தனது கடமையை செய்யும்' என்று அமைச்சர் ஜெயகுமார் அழுத்தமாக கூறிய நிலையில், அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தோழமையுடன் பிரச்னையை சுட்டிக்காட்டினார். அவர், "பாஜக தலைவர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் வெவ்வேறு பெயரில் யாத்திரைகளை நடத்துவது அக்கட்சியின் வழக்கம். ஆனால், கொரோனா தொற்றின் அடுத்த அலைகளுக்கு தமிழகத்தில் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் இந்தச் சூழ்நிலையை அறிந்து தக்கவிதத்தில் பாஜக புரிந்துகொள்ள வேண்டும் என்பதே அதிமுக கருத்து" என்றார்.

கூட்டணி இருக்கும் கட்சியில் தோழமையுடன் பேசுவதற்கான வாய்ப்பு இல்லையா எனக் கேட்டபோது, "நிச்சயமாக இருக்கிறது. இருப்பினும் அவரவர் நிலைப்பாடுகளை அவரவர் ரீதியில் தொடர்ந்து வைத்து வருகிறோம். இந்த விஷயத்தில் தொற்று பரவி விடக்கூடாது என்ற காரணத்திற்காக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது" என்றார் வைகைச்செல்வன்.

வேல் யாத்திரைக்கு முதலில் எதிர்ப்பைப் பதிவு செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், "இந்தப் பிரச்னையின் மூலம் அதிமுக - பாஜக உறவு இணக்கமாக இல்லை என்பது தெரிகிறது. விவசாயிகளுக்காக காங்கிரஸ் யாத்திரை நடத்துகிறது. வெறுப்பு அரசியலை பரப்ப பாஜக யாத்திரை நடத்த முயற்சிக்கிறது" என்றார்.

இந்தச் சூழலில், நீதிமன்றத்திடம் முறையிடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் வேல் யாத்திரை விவகாரத்தில் உறுதியுடன் இருக்கும் தமிழக பாஜகவின் அடுத்தகட்ட நகர்வுகளும், அதை அதிமுக எதிர்கொள்ளும் அணுமுறையும்தான் இனி இவ்விரு கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள விரிசலின் தன்மையை வெளிப்படுத்தும் எனத் தெரிகிறது.

கல்யாணிபாண்டியன்