சிறப்புக் களம்

சம்பளதாரர்களுக்கு அடுத்த ஆண்டு ஊதிய உயர்வு எவ்வளவு? - ஆய்வு சொல்லும் ஆறுதல்கள்

சம்பளதாரர்களுக்கு அடுத்த ஆண்டு ஊதிய உயர்வு எவ்வளவு? - ஆய்வு சொல்லும் ஆறுதல்கள்

webteam

இந்தியாவில் மாதச் சம்பளம் வாங்குவோருக்கு அடுத்த ஆண்டு சராசரியாக 8.6 சதவீத அளவுக்கு சம்பள உயர்வு இருக்ககூடும் என்றும், 25 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இரட்டை இலக்க சம்பள உயர்வு இருக்கும் என்றும் கருத்துக்கணிப்பு ஆய்வு ஒன்று ஆறுதல் தகவல் வழங்கியிருக்கிறது.

கொரோனா பேரிடரின் எதிரொலியாக, இந்தியாவில் மாதச் சம்பளம் வாங்குபவர்களைப் பொறுத்தவரை கடந்த இரு ஆண்டுகள் என்பது மிகவும் கொடுமையானது. இந்த அவலச் சூழலையும் மீம்களாக பதிவிட்டு நெட்டிசன்கள் பலரும் தங்களைத் தாங்களே தேற்றி வருவதையும் கவனிக்க முடிகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த இரு ஆண்டுகளில் சம்பளம் என்பது முக்கியமான விவாதப் பொருளாக மாறியது.

2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா லாக்டவுன் தொடங்கியது. அதாவது 2020-ம் ஆண்டுக்கான சம்பள உயர்வு நிறுத்தப்பட்டது. அதைவிட நிறுவனங்களுக்கு ஏற்ப துறைகளுக்கு ஏற்ப 20% முதல் 30% வரை சம்பளம் பிடிக்கப்பட்டது. தோராயமாக பெரும்பாலான பணியாளர்கள் 2017-ம் ஆண்டு சம்பளத்துக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலைமையில் வேலையை தக்க வைப்பதே பெரும்பாடாக இருக்கும்போது சம்பள உயர்வு என்பதை நினைத்து பார்க்க முடியாத நிலைமையில்தான் முதல் ஆண்டு இருந்தது.

தற்போதுதான் சில நிறுவனங்கள் பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தை வழங்கத் தொடங்கி இருக்கின்றன. கடந்த ஏப்ரலில் சிறிதளவு சம்பளத்தை உயர்த்தி இருக்கின்றன. இந்த நிலையில், அடுத்த ஆண்டு சம்பள உயர்வு என்பது கொரோனா பேரிடருக்கு முன்பு இருந்த அளவுக்கு இருக்கும் என டெலாய்ட் (Deloitte) நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

டெலாய்ட் சர்வே: கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் உள்ள 25-க்கும் மேற்பட்ட துறைகளில் உள்ள 450 முக்கிய நிறுவனங்களின் மனிதவள பிரிவின் தலைவர்களுடன் டெலாய்ட் நிறுவனம் உரையாடியது. இதில் சம்பளம் தொடர்பாக பல முக்கியத் தகவல்களை மனிதவள துறை தலைவர்கள் பகிர்ந்துள்ளனர்.

மனிதவள துறையினர் தெரிவித்ததன் அடிப்படையில், அடுத்த ஆண்டு (2022) சராசரியாக 8.6 சதவீத அளவுக்கு சம்பள உயர்வு இருக்கக் கூடும் என டெலாய்ட் தெரிவித்துள்ளது. மேலும், 25 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இரட்டை இலக்கத்தில் சம்பள உயர்வு வழங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

சர்வே நடத்தப்பட்ட நிறுவனங்களில் 2020-ம் ஆண்டு சராசரியாக 4 சதவீதம் அளவுக்கு சம்பள உயர்வு இருந்தது. 2021-ம் ஆண்டு 8 சதவீதம் அளவுக்கு இருந்தது. அடுத்த ஆண்டு கொரோனா பேரிடருக்கு முந்தைய அளவில் 8.6 சதவீதம் அளவுக்கு சம்பள உயர்வு இருக்கும் என தெரியவந்திருக்கிறது.

எந்தத் துறையில் எவ்வளவு? - வழக்கம் போல தகவல் தொழில்நுட்ப துறையில் 10 சதவீத அளவுக்கு சம்பள உயர்வு இருக்கும் என தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து லைஃப் சயின்ஸ் துறையில் 9.30 சதவீதம் சம்பள உயர்வும், ஐடிஇஎஸ் துறையில் 9 சதவீத சம்பள உயர்வும் இருக்கும். இதற்கு அடுத்து கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் துறையில் 8.7%, உற்பத்தி துறையில் 8.4, நிதிச்சேவைகள் துறையில் 8.3 சதவீத சம்பள உயர்வும் இருக்கும் என சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

சில நிறுவனங்கள் தற்போதுதான் சம்பள உயர்வு பணியை முடித்திருக்கிறார்கள். அதனால், அடுத்த ஆண்டு சம்பள உயர்வு என்பது மிக நீண்ட தூரத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். வேறு சிலர் தற்போதைய சூழலில், இந்த ஊதிய உயர்வு கொடுக்க முடியும். நிலைமை மேம்படும்பட்சத்தில் இந்த அளவு உயர்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் பிஸினஸ் எப்படி இருக்கும் என்பதை பொறுத்தே சதவீதம் மாறுபடும் என மனிதவளத் துறையினர் தெரிவித்ததாக டெலாய்ட் கூறியிருக்கிறது.

இதர மாற்றங்கள்: சர்வேயில் கலந்துகொண்ட நிறுவனங்களில் 12 சதவிதத்தினர் மாறும் சம்பளம் மற்றும் போனஸ் விதிமுறைகளில் மாற்றம் செய்திருக்கிறது. அதேபோல 60 சதவீத நிறுவனங்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி வரம்பினை உயர்த்தி இருக்கின்றன. மூன்றில் இரண்டு நிறுவனங்கள் விடுமுறை பாலிசியை மாற்றி இருக்கின்றன. சிறப்பு விடுமுறையை (14-21 நாட்கள்) புதிதாக கொண்டு வந்திருக்கின்றன. பெரும்பாலான நிறுவனங்களில் பணியாளர்கள் ஹைபிரிட் (அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்து வேலை செய்வது உள்ளிட்ட இரண்டையும்) மாடலை விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்பு டெலாய்ட் நிறுவனம் நடந்திய ஆய்வு, இந்தியாவுக்கு சாதகமான செய்தியை கூறியிருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் சிங்கப்பூரில் செயல்படும் 1200 சர்வதேச நிறுவனங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 44 சதவீத தலைவர்கள் இந்தியாவில் முதல் முறை முதலீடு அல்லது கூடுதல் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

சம்பள உயர்வு கிடைக்கிறதோ இல்லையே இதுபோன்ற செய்திகள் சற்றே ஆறுதலாக இருக்கின்றன.