சிறப்புக் களம்

'லவ் ஜிஹாத்', 'போதை ஜிஹாத்' வரிசையில் 'மார்க்ஸ் ஜிஹாத்'... பேராசிரியரின் சர்ச்சைப் பதிவு

'லவ் ஜிஹாத்', 'போதை ஜிஹாத்' வரிசையில் 'மார்க்ஸ் ஜிஹாத்'... பேராசிரியரின் சர்ச்சைப் பதிவு

PT WEB

'லவ் ஜிஹாத்', 'போதைப்பொருள் ஜிஹாத்', 'லேண்ட் ஜிஹாத்' வரிசையில் 'மார்க்ஸ் ஜிஹாத்' எனப் பேசி பேராசிரியர் ஒருவர் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார்.

இந்தியா இப்போது 'ஜிஹாத்' விவாதத்தில் சிக்கியிருக்கிறது போல. 'லவ் ஜிஹாத்', 'போதைப்பொருள் ஜிஹாத்', 'லேண்ட் ஜிஹாத்', 'யுபிஎஸ்சி ஜிஹாத்' என எழுந்த சர்ச்சைகளின் பட்டியலில் நீண்டுகொண்டே செல்கிறது. ஏற்கெனவே 'லவ் ஜிஹாத்' சர்ச்சை முடியாமல் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் கேரள மாநில கிறிஸ்துவ பிஷப் ஒருவர் ''கத்தோலிக்க பெண்கள் லவ் ஜிகாத் மூலமாகவும், இளைஞர்கள் 'நார்க்கோட்டிக் ஜிஹாத்' (போதைப்பொருள் ஜிஹாத்) மூலமாகவும் மதமாற்ற வலையில் வீழ்த்தப்படுகிறார்கள்" என்று பேசியது நாடு முழுவதும் பெரும் புயலைக் கிளப்பியது.

இப்போது பேராசிரியர் ஒருவர் 'மார்க்ஸ் ஜிஹாத்' (மதிப்பெண் ஜிஹாத்) என்று பேசியிருப்பது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. அவர் பெயர் ராகேஷ் குமார் பாண்டே. டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான இவர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆசிரியர் சங்கமான தேசிய ஜனநாயக ஆசிரியர் முன்னணியின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் கேரள மாணவர்களின் அதிகமான சேர்க்கையை குறிப்பிட்டு, ''அதிகமான மதிப்பெண்களுடன் கேரள மாணவர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தை நோக்கி படையெடுப்பதை, சாதாரணமாக கருத முடியாது. இதனை சாதாரணமாக ஏற்றுக்கொள்ள வழி இல்லை. இது விசாரிக்கப்பட வேண்டிய ஒன்றைக் குறிக்கிறது.

கல்லூரியில் பெரும்பான்மையாக இருக்கும் இந்த மாணவர்கள் இந்தியில் அல்லது ஆங்கில மொழிகளில் திறம்பட இல்லை. அதேபோல், இந்த மாணவர்கள் அனைவரும் 11-ஆம் வகுப்பில் 100 சதவீத மதிப்பெண்களைப் பெறவில்லை. அப்படிப்பட்ட நிலையில் அவர்களை வைத்து அதிக சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது சதியின் ஒரு பகுதியாகும். இது ஒரு 'மார்க்ஸ் ஜிஹாத்'. இதுகுறித்து விசாரிக்க வேண்டும். மேலும், டெல்லி பல்கலைக்கழக சேர்க்கையில் நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

இவரின் பதிவு சர்ச்சையாக வெடித்தது. பலரும் எதிர்ப்பு குரல் தெரிவித்துள்ள நிலையில், தனது பதிவு குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசியிருக்கும் ராகேஷ் குமார் பாண்டே, ''ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் இடதுசாரி அமைப்புகளுடன் இணைந்திருப்பவர்கள் திட்டமிட்டே, இதுபோன்ற செயல்களை செய்கிறார்கள். தங்களின் ஆதிக்கத்தை இப்போது டெல்லி பல்கலைக்கழகத்திற்கும் அவர்கள் பரப்ப விரும்புகிறார்கள்" என்றுள்ளார்.

இது இப்போது விவாத பொருளாக மாறியிருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த பலரும் பேராசிரியர் ராகேஷ் குமாருக்கு எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

- மலையரசு