சிறப்புக் களம்

'மணி ஹெய்ஸ்ட்' மாந்தர்கள் 2 - மாஸ்கோ: சூப்பர் ஹீ்ரோ அல்ல, தேவதூதன் அல்ல; அதுக்கும் மேல!

'மணி ஹெய்ஸ்ட்' மாந்தர்கள் 2 - மாஸ்கோ: சூப்பர் ஹீ்ரோ அல்ல, தேவதூதன் அல்ல; அதுக்கும் மேல!

கலிலுல்லா

சுற்றியிருக்கும் அனைவரும் மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருப்பார்கள். பணயக் கைதிகளுக்குள்ளும் பதற்றம் தொற்றிக்கொண்டிருக்கும். நம் ஹீரோக்களின் கைகளில் இருக்கும் துப்பாக்கிகள் ஆர்த்ரோவை குறிபார்த்து நிற்கும். ஆனால், ஆர்த்ரோ கையிலிருக்கும் துப்பாக்கியோ டென்வர் நெற்றியில் இருக்கும். 'ஒழுங்கா கதவ திற; இல்லன்னா டென்வர போட்ருவேன்' என ஆர்த்ரோ மிரட்டுவார். சுற்றியிருப்பவர்களின் துப்பாக்கி நிலைமாறாமல் நிற்க, ஒருவரின் துப்பாக்கி மட்டும் தானாகவே தடுமாறும். 'எதுவும் பண்ணிடாத' என பதறுவார். அங்கிருப்பவர்களைவிட கூடுதல் பயமும், பதற்றமும், வேகமான இதயத் துடிப்பும் அவருக்கு மட்டுமே இருக்கும். ஏன்? அப்படி. கேள்விக்கான பதில் ரொம்ப சிம்பிள். அவர்தான் அப்பா. உறவுகளின் ஊற்றுக்கண்.

மாஸ்கோ எனும் மகத்தான தந்தை அவன். உண்மையில் 'மணி ஹெய்ஸ்ட்'டின் அன்பன் மாஸ்கோ. சகாக்கள் அனைவர் மீதும் அன்பு கொண்டிருக்கும் ஒரு கேரக்டர். டென்வருக்கு மட்டும் மாஸ்கோ அப்பாவாக இருக்கமாட்டார். மாறாக ரியோவுக்கும், டோக்யோவுக்கும் கூட அவர்தான் அங்கே தந்தை.

மாஸ்கோவை பொறுத்தவரை, அவர் சூப்பர் ஹீரோவெல்லாம் இல்லை. தேவதூதனும் இல்லை. ஆனால் உன்னதமானவர். மாஸ்கோக்களை தந்தைகளாக வாய்க்கப் பெற்றவர்கள் வரம்பெற்றவர்கள். ஆம்! டென்வர் பாக்கியசாலித்தான். தன் மகனுக்காகவே வாழும் ஒரு மாஸ்கோவை விட சிறந்த தந்தை யாராக இருக்கமுடியும்?

ஆரம்பத்தில், ஸ்பெனில் உள்ள அஸ்துரியாஸில் சுரங்கத் தொழிலாளியாக வேலைபார்த்து வந்த மாஸ்கோ பின், வங்கிகளில் பணத்தை கொள்ளையடிப்பதை தொழிலாக்கிக் கொள்கிறார். பொறுத்து பொறுத்து பார்த்து ஒருகட்டத்தில் போதைக்கு அடிமையான மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் அவரிடமிருந்து பிரிந்து மகன் டென்வரை வளர்க்கிறார். தாயின்றி தந்தையுடனே டென்வர் வளர்க்கப்படுகிறான். 'அம்மா நம்மள விட்டு போயிட்டாங்க' என்ற பொய்யை நம்பியே டென்வர் வளர்கிறான். உண்மை தெரியவரும்போது தன் தந்தையை நோக்கி, 'என் அம்மாவ நீ திருத்தியிருக்கணும். அவள தனியா விட்டு வந்துட்ட. இங்கிருந்து வெளியே போனதுக்கு அப்றம் நீ யாரோ. நான் யாரோ' என மாஸ்கோவின் சட்டையை பிடித்து டென்வர் கேள்வி கேட்கிறான். 'எல்லாமே உனக்காகத்தான்டா' என்ற தந்தையின் வார்த்தைகள் அவனது காதில் விழுவதேயில்லை. டென்வர் அங்கிருந்து சென்றபிறகு மாஸ்கோவுக்கு வைக்கப்படும் க்ளோஸ்ஷாட் எல்லாவற்றையும் பேசுகிறது.

இத்தனைக்கும் மகனின் கடனை அடைக்கத்தான் கொள்ளையடிக்கவே ஒப்புக்கொள்வார் மாஸ்கோ. எல்லாமே மகனுக்காக என்று வாழ்ந்தவனின் சட்டையைப் பிடித்து கேட்கப்படும் கேள்விகள் நம்மை உலுக்குகின்றன. அதுவும், டென்வர் தலையில் ஆர்த்ரோ துப்பாக்கி வைக்கும்போது ஒரு தந்தையாக உருகிவிடுகிறார்.

"மோனிகா படித்தவள், உனக்கு பொருத்தமாக இருக்கமாட்டாள்" என டென்வருக்கான இணையாக மோனிகாவை தவிர்த்தே வருவார். இறுதியில், தனது மரண தருவாயில், 'இவன் கொஞ்சம் லூசு... நல்லா பாத்துக்கோ' என மோனிகாவிடம் மகனை ஒப்படைத்து விடுவார். குண்டடிப்பட்டு மாஸ்கோவின் உயிர் பிரியும் நேரத்தில் டென்வருக்கு எல்லாம் புரிந்திருக்கும். நமக்காக வாழ்ந்த ஜீவன் பிரியப்போகிறது என்பது டென்வருக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கும். நமக்கும் கூட. 'நான் நல்ல அப்பா இல்ல; பையன அவன் அம்மாவிடம் இருந்து பிரிச்சுட்டேன்' என மாஸ்கோ கூறும்போது, 'நீங்க கண்டிப்பா நல்ல தந்தைதான்' என பார்வையாளர்களின் குரல் அன்னிச்சையாக எழுகிறது.

மாஸ்கோவை பொறுத்தவரை நல்ல அப்பா மட்டுமல்ல. சுற்றியிருக்கும் அனைவரையும் நேசிக்கும் அன்பன். தேவைப்படும் நேரங்களில் எந்த தயக்கமுமின்றி தன் மனதில் தோன்றும் உண்மையை உடைத்து பேசும் ஜாலியான கேரக்டர். டோக்யோவின் ரிலேஷன்ஷிப் குறித்து கடுமையாக பேசும் மாஸ்கோ, இறுதியில் அதே டோக்யோவை அழவும் வைத்துவிடுவார். அதட்டி பேசாதவர்; தப்பு என்றால் அதை சொல்ல தயங்காதவர். குறிப்பாக விஸ்வாசி. தான் நம்பியவர் மீது உறுதியாக இருப்பவர். இடையில் புரோஃபசர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, 'அவர் திரும்பவும் கால் பண்ணுவார்' என புரோஃபசருக்கு ஆதரவாக குரல் கொடுப்பார். தன்னை நம்பியவரையும், தான் நம்பியவரையும் எளிதில் விட்டுக்கொடுக்க துணியாத ஜீவன்.

எல்லாராலும் விரும்பப்படுவதும், எல்லாரையும் விரும்புவதுமான ஒருவராக இருப்பது ஒரு வரம். மாஸ்கோ அந்த வகையறாத்தான்!