சிறப்புக் களம்

டிமார்ட் உத்திகள் - உலகின் டாப் 100 பணக்காரர் பட்டியலில் ராதாகிருஷணன் தமானி வந்தது எப்படி?

டிமார்ட் உத்திகள் - உலகின் டாப் 100 பணக்காரர் பட்டியலில் ராதாகிருஷணன் தமானி வந்தது எப்படி?

நிவேதா ஜெகராஜா

உலகின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறார், ராதாகிருஷணன் தமானி. இந்தியாவின் முக்கியமான் ரீடெய்ல் நிறுவனமான 'டிமார்ட்' பங்கு கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவுக்கு வளர்ச்சி அடைந்துவருவதால், இவரின் சொத்து மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போதைய சொத்து மதிப்பு 19.2 பில்லியன் டாலர்கள். கொரோனா பேரிடருக்கு முன்பாக 12 பில்லியன் டாலராக இவரது சொத்து மதிப்பு இருந்தது. கடந்த 18 மாதங்களில் அவென்யூ சூப்பர்மார்ட் (டிமார்ட்) பங்கு 64 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

மும்பையில் பிறந்தவர். இளங்கலை பட்டத்தை பாதியில் நிறுத்திவிட்டு தந்தையின் பால்பேரிங் தொழிலில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கினார். 1992-களில் இந்தியாவின் முக்கியமான முதலீட்டாளராக இருந்தார். தற்போதும்கூட இந்தியா சிமெண்ட்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் கணிசமான முதலீட்டை இவர் வைத்திருக்கிறார்.

தன்னுடைய 45-வது சூப்பர் மார்க்கெட்டை தொடங்கலாம் என திட்டமிடும் தமானி, 2002-ம் ஆண்டு முதல் கடையை மும்பை அருகே உள்ள தானேவில் தொடங்குகிறார். தற்போது இந்த நிறுவனத்துக்கு 238 ஸ்டோர்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.35 லட்சம் கோடி ரூபாய். இதுதவிர, பல நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார். பொதுவெளிக்கு பெரிதாக இவர் வருவதிலை. டிமார்ட் எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்தே இவரின் வெற்றியை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

சொந்த இடம்: ரீடெய்ல் நிறுவனம் பலவும் லாபத்துக்காக போராடிவரும் சூழலில், மெதுவான வளர்ச்சியின் மூலமே சாதித்திருக்கிறார் ராதாகிருஷணன் தமானி. இவருடைய பெரும்பாலான கடைகள் சொந்தக் கடைகளே. வாடகை இடத்தில் டிமார்ட் இயங்குவது குறைவே. மால்கள் மற்றும் நகரின் முக்கியமான இடங்களில் கடை வைப்பதில்லை. இங்கு வைக்கும்போது வருமானத்தில் 30 சதவீதம் வாடகைக்கு செலுத்த வேண்டி இருப்பதால் சொந்த இடத்தையே கடைகளை வைக்க விரும்புகிறார்.

இதனால் முதலீடு அதிகமானாலும் வாடகை மீதமாகும். நீண்ட காலத்தில் அந்த இடத்தின் மதிப்பும் உயரும். இத்தனை ஆண்டுகளில் குறைவான கடைகள் இருப்பதுபோல தோற்றம் அளித்தாலும், மெதுவான வளர்ச்சிக்கு நீண்ட கால இலக்கே காரணம். தவிர, கடந்த ஐந்து ஆண்டுகளில்தான் பெரும்பாலான ஸ்டோர்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.

இன்வென்ட்ரி: கடையில் எவ்வளவு பொருட்கள் இருக்கிறது என்பது முக்கியம். கடையில் போதுமான பொருட்கள் இருக்கும். ஆனால் அனைத்து பிராண்டுகளும் இருக்காது. தேவையான பிராண்டுகளை மட்டுமே வைத்திருப்பார்கள். அதேபோல கடையில் ஒரு பொருளை 30 நாட்கள் வரை மட்டுமே இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். அதாவது, தேவைக்கு ஏற்ப பொருட்களை வரவைப்பார்கள். Auto-Replenishment System மூலம் ஒரு பொருள் குறிப்பிட்ட எல்லைக்கு கீழே சென்றுவிட்டால் உடனடியாக சப்ளையருக்கு தகவல் சென்று, அந்தப் பொருள் உடனே கடைக்கு வரும். ஒரே பிரிவில் அதிக பொருள்களை வைத்திருந்தால் இடப்பற்றாக்குறை ஏற்படும். தேவைக்கு ஏற்ப கொண்டுவருவதன் மூலம் இடப்பற்றாக்குறையை குறைக்க முடியும், எந்தப் பொருளும் தங்காது.

தேவைப்படும் நேரத்தில் பொருள்கள் வரவேண்டும் என்றால் சப்ளையர்களுக்கு சரியான நேரத்தில் பணம் கொடுக்க வேண்டும். சப்ளையர்களுக்கு ஒரு வாரத்தில் பணம் வழங்கப்படும். போட்டி நிறுவனங்கள் 30 நாள் கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் ஏழு நாட்களில் பணம் கிடைத்துவிடுவதால், கேட்கும் நேரத்தில் சப்ளை இருக்கும். அதனால் மற்றவர்களை விட குறைந்த விலைக்கு பொருள் கிடைக்கும். அதனால் மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலைக்கு பொருள்களை விற்க முடியும் என்பதால் வாடிக்கையாளர்கள் வருவதில் எந்தச் சிக்கலும் இல்லை.

ஆனால், இந்தக் குழுமத்தின் இ-காமர்ஸ் பிரிவான டிமார்ட் ரெடி, சோதனை அடிபப்டையில் சில நகரங்களில் செயல்பட்டு வந்தாலும் பெரிய வெற்றியை இன்னும் பெறவில்லை.

முதலீடுகள்: டிமார்ட் நிறுவனத்தில் (அவென்யூ சூப்பர் மார்ட்ஸ்) 65.2 சதவீத பங்குகள் தமானிக்கு உள்ளது. இவருக்கு மட்டுமல்லாமல் இவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் பங்குகள் உள்ளது. இதுதவிர சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தில் 2.4 சதவீத பங்குகள் உள்ளன. டாடா குழுமத்தை சேர்ந்த ட்ரெண்ட் நிறுவனத்தில் 1.52 சதவீத பங்குகள் உள்ளன. புளூடார்ட் நிறுவனத்தில் 1.7 சதவீத பங்குகள் உள்ளன. இது தவிர பல நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார்.

ஒருபுறம் ரீடெய்ல் துறையில் உள்ள ஃப்யூச்சர் குழுமம் தடுமாறி வரும் சூழலில், அதே துறையில் உள்ள மற்றொரு நிறுவனமான டிமார்ட் வெற்றிகரமாக செயல்படுவது தற்செயல் நிகழ்வு அல்ல.

- வாசு கார்த்தி