சிறப்புக் களம்

காவலில் இருக்கும் கைதிகள் இறந்தால் எப்படி விசாரணை நடத்தப்படும் ? சட்ட நடைமுறைகள் என்னென்ன?

காவலில் இருக்கும் கைதிகள் இறந்தால் எப்படி விசாரணை நடத்தப்படும் ? சட்ட நடைமுறைகள் என்னென்ன?

webteam

சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு தொடர்பான பல்வேறு ஆதாரங்களும் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் லைவ் லா என்ற ஆங்கில இணையதளம் விசாரணை கைதிகளை கைது செய்யும் காவலர்கள் மற்றும் நீதிபதிகள் என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்த விளக்கங்களை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு:

2005-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மறுசீரமைக்கப்பட்ட சட்டம் 176 (1) crpc-யின் படி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி காவலில் மரணமடையும் பட்சத்தில் அதனை சம்பந்தப்பட்ட தாலுகாவின் தாசில்தார் அல்லது நீதித்துறை நடுவர் விசாரிக்கலாம். அந்த விசாரணையில் கைதி இறந்ததற்கான காரணம் அலசப்படும். மேலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியிடமும் விசாரணை நடத்தப்படும்.

அதே போல 176(1A) சட்ட விதியின் படி காவலில் இருக்கும் கைதி இறந்து போனாலோ, காணாமல் போனாலோ அல்லது வன்கொடுமை சம்பவத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தாலோ அதனை நீதிதுறை நடுவர் அல்லது பெருநகர மாவட்ட நீதிபதி விசாரிக்கலாம்.

ஆனால், அந்த விசாரணையானது கீழ்கண்ட விதிமுறைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

1. விசாரணையானது காவல்துறை விசாரணைக்கு இணையானதாக இருக்க வேண்டும்.

2 விசாரணை தாசில்தாரால் நடத்தப்பட இயலாது. நிச்சயமாக இந்த விசாரணை நீதித்துறை நடுவரால் நடத்தப்பட வேண்டும்.

3. மேற்குறிப்பிட்ட தவறுகளின் மூலமாக கைதி இறக்கும் பட்சத்தில் இந்த விசாரணை கட்டாயமாக நடத்தப்பட வேண்டும்.

சட்ட விதி 176 (5) படி இந்த விசாரணையை சம்பந்தப்பட்ட நீதிபதி கைதி இறந்த 24 மணி நேரத்திற்குள் செயல்படுத்த வேண்டும். இறந்தவரின் உடலை அருகில் உள்ள மருத்துவ அதிகாரியைக் கொண்டு பகுப்பாய்வு செய்திருக்க வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் எழுத்துப்பூர்வமாக மட்டுமேயாவது விவரங்களை சேகரித்திருக்க வேண்டும்.

இப்படி விசாரணை நடத்தும் நீதிபதி மனித உரிமைகள் ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அவை பின் வருமாறு

1. இறப்பு நடந்த சுற்றுப்புறம் உள்ளிட்டவற்றை ஆராய்தல்

2. இறப்பு நடந்ததற்கான முக்கியமான சம்பவங்கள் குறித்து ஆராய்தல்

3. இறப்புக்கான காரணம் குறித்து ஆராய்தல்

4. இறப்புக்கான குற்றத்தை யாராவது ஏற்க முன்வருகிறார்களா என்பதை ஆராய்தல்.

(கோப்பு புகைப்படம்)

5. அரசு ஊழியர்களின் தலையீடு இருக்கிறதா என்பதை ஆராய்தல்

6. இறப்பதற்கு முன்னால் இறந்தவருக்கு போதுமான அளவு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய்தல்.

அதே போல இந்த விசாரணையை சம்பந்தப்பட்ட நீதிபதி 2 மாதங்களுக்குள் முடித்திருக்க வேண்டும்.

2020 ஜனவரி மாதம் மனித உரிமை ஆர்வலர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் மூலம் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை 827 நபர்கள் காவலில் இறந்ததும், காணாமால் போயிருப்பதும் அதில் 166 கைதிகளுக்கு மட்டுமே மேற்சொன்ன விசாரணைகள் முறைப்படி நடத்தப்பட்டிருப்பதும் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது.

சாத்தான்குளம் வழக்கில் கூட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்ட பிறகுதான் கோவில்பட்டி மாவட்ட நீதிபதி 176 (1A)சட்டத்தின் படி விசாரணையை தொடர்ந்ததாக சொல்லப்படுகிறது.

இறப்பு சம்பவம் நடக்கும் விசாரணைக்கு முதல் தகவல் அறிக்கை கட்டாயமாகும்.

1993-ஆம் ஆண்டு மனித உரிமைகள் ஆணையம் கொண்டு வந்த விதிகளின் படி, இறப்புச் சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில், சம்பவம் குறித்த தகவலை பதிவு செய்திருக்க வேண்டும்.

இரண்டு மாதத்திற்குள் பிரேத பரிசோதனை(அதன் வீடியோ பதிவுடன்)அறிக்கை, விசாரணை நடத்திய நீதிபதி அறிக்கையை சமர்பித்திருக்க வேண்டும்.

வீடியோ பதிவு ஆதாரங்கள் கீழ்கண்ட விதிமுறைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

1. காவலில் இறந்த கைதியின் பிரேத பரிசோதனையை வீடியோ சம்பந்தப்பட்ட உபகரணங்களை சமர்பிக்க வேண்டும்.

2. பிரேத பரிசோதனையை தீவிரமாக கண்காணித்து, உடலில் தாக்குதலின் காரணமாக தழும்புகள் ஏற்பட்டுள்ளனவா மற்றும் காவலில் சித்ரவதை செய்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா முதலியவற்றை ஆராய்தல் வேண்டும்.

3. அந்த வீடியோ ஆதாரங்களில் தனிநபர் அதிகாரத்தின் மூலமாகவோ அல்லது செல்வாக்கின் மூலமாக மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கக் கூடாது.

4. தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட தனிநபர் அதிகாரி பிரேத பரிசோதனையின் பிந்தைய நிலையில் ஆய்வு செய்யலாம்.

அதே போல சித்ரவதை மற்றும் பொய்யான துப்பாக்கிச்சூடு நடத்தும் காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய எந்த அனுமதியும் தேவையில்லை எனவும் சொல்லப்படுகிறது.