நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளில் வசூலிக்கப்படும் பசுமை நுழைவு வரி மற்றும் சுங்க நுழைவு வரியில் முறைகேடு செய்திருப்பது புதிய தலைமுறையின் கள ஆய்வில் ஆதாரங்களோடு தெரிய வந்திருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியராக இன்னசென்ட் திவ்யா இருந்தபோது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளில் முன்னாள் படைவீரர்களை கொண்டு பசுமை நுழைவு வரி மற்றும் சுங்க நுழைவு வரி வசூலிக்கும் பணிகள் துவங்கியன. அதன்படி மாவட்டத்தில் உள்ள பர்லியாறு மற்றும் கக்கநல்லா சோதனை சாவடிகளில் பசுமை நுழைவு வரி வசூலிக்கபட்டு வருகிறது, குஞ்சப்பண்ணை, நாடுகாணி, சோலாடி, பாட்டவயல், தாளூர் உள்ளிட்ட சோதனை சாவடிகளில் சுங்க நுழைவு வரி வசூலிக்கபடுகிறது.
முன்னாள் ராணுவத்தினர் இந்த சோதனை சாவடிகளில் பணியமர்த்தப்பட்டு வரி வசூல் செய்து மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து வருகின்றனர். பசுமை நுழைவு வரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வங்கிக் கணக்கிலும், சுங்க நுழைவு வரி அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடம் ஒப்படைக்கபட்டு வருகிறது. வரி தொகையை வசூலிக்கும் முன்னாள் படை வீரர்களே அதனை சம்பந்தப்பட்ட இடங்களில் முறையாக செலுத்த வேண்டும்.
முறைகேட்டின் மீது நடவடிக்கை இல்லை:
இந்நிலையில் வரி வசூலில் பல முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் கடந்த 18.06.2022 அன்று புதிய தலைமுறை கள ஆய்வு மேற்கொண்டு பிரத்யேக செய்தி தொகுப்பை வெளியிட்டது. அதில் கக்கநல்லா சோதனைச் சாவடியில் அரசின் முத்திரை இல்லாமல் போலியாக ரசீது கொடுக்கப்படாமல் நாள்தோறும் பல ஆயிரம் ரூபாய் முறைகேடாக வசூலிக்கப்படுவது அம்பலப்படுத்தப்பட்டது. இதே போல மற்ற சோதனை சாவடிகளிலும் மோசடி நடத்தப்பட்டு நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் அரசுக்கு செலுத்தாமல் வசூல் செய்பவர்களே எடுத்து செல்வதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த மோசடி குறித்து நாம் அன்றைய தினம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் இடம் விளக்கமும் கேட்டிருந்தோம். இந்த முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அவரும் உறுதி அளித்து இருந்தார். அதன்படி பிரத்தேயக செய்தி தொகுப்பு வெளியான அடுத்த தினமே சோதனை சாவடிகளில் வரி வசூல் செய்து வரும் அனைத்து முன்னாள் படை வீரர்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பிறகு அனைவரும் எச்சரித்து அனுப்பப்பட்டிருந்தனர். ஆனால் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் படை வீரர்கள் ஒருவர் மீது கூட எந்த நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்படவில்லை.
தொடர்ந்து துணிச்சலுடன் நடைபெற்ற வசூல் வேட்டை:
அதன் பிறகும் வசூலிக்கப்படும் வரி தொகையில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தது. இந்த முறை கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் புதிய தலைமுறை களம் இறங்கியது. நாம் தொடர்ச்சியாக மேற்கொண்ட கள ஆய்வில் நாடுகாணி மற்றும் கக்கநல்லா சோதனை சாவடிகளில் மோசடி நடத்தப்பட்டு பல லட்சம் ரூபாய் திருடப்பட்டதற்கான ஆதாரங்கள் நமக்கு கிடைத்தது. குறிப்பிட்ட 3 தினங்களில் நாடுகாணி சோதனை சாவடியில் வரி வசூல் செய்யப்பட்டதில் பல ஆயிரம் ரூபாய் அரசிற்கு செலுத்தாமல், பணியில் இருந்த முன்னாள் படை வீரர்களால் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சோதனைச் சாவடியில் மக்களிடம் வசூலித்த மொத்தத் தொகை ரூ. 28,080:
அதாவது கடந்த 12.01.2022 அன்று நாடுகாணி சோதனை சாவடியில் வசூலிக்கப்பட்ட மொத்த தொகையின் விவரங்கள் நமக்கு கிடைத்தது. அதன்படி அன்றைய தினம் காலையில் இருந்து மாலை 4.42 மணி வரை அந்த சோதனை சாவடியில் பயன்படுத்தப்பட்ட ரசீது கொடுக்கும் இயந்திரத்தில் இருந்து பெறப்பட்ட Summary-இல் 14350 ( 14 ஆயிரத்து 350 ரூபாய் ) ரூபாய் வசூலிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதே நேரம், அதே இயந்திரத்தில் இருந்து இரவு 7.16 மணிக்கு எடுக்கப்பட்ட மற்றொரு Summary இல் 13730 ( 13 ஆயிரத்து 730 ரூபாய்) ரூபாய் வசூலிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. அதாவது அன்றைய ஒரே நாளில் மட்டும் ரூ. 28080 ( 28 ஆயிரத்து 80 ரூபாய் ) வசூலிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் அன்றைய தினம் வசூலிக்கப்பட்ட மொத்த தொகையும் அரசிடம் செலுத்தப்படவில்லை என நமக்கு நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து புகார்களும் வந்தது.
ஆனால் அரசுக்கு செலுத்தியதோ வெறும் ரூ.13,030 மட்டுமே!
இதனை உறுதி செய்வதற்காக நாம் கூடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை கேட்டு இருந்தோம். அதன்படி குறிப்பிட்ட 12.01.2022 அன்று கிராம நிர்வாக அலுவலரிடம், செலுத்தப்பட்ட தொகையின் விவரம் குறித்து நாம் கேட்டிருந்தோம். அதன்படி கூடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நமக்கு உரிய பதிலும் அளிக்கப்பட்டிருந்தது. அதில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டிருந்தது போல 12.01.2022 அன்றைய தினம் 13030 ( 13 ஆயிரத்து 30 ரூபாய் ) ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டிருக்கிறது.
அதாவது நாம் மேலே குறிப்பிட்டது போல அன்றைய தினம் எடுக்கப்பட்ட இரண்டாவது Summary இல் குறிப்பிடப்பட்டிருந்த 13 ஆயிரத்து 730 ரூபாயில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ததற்கான அபராதம் 700 ரூபாய் கழிக்கபட்டு 13 ஆயிரத்து 30 ரூபாயை கிராம நிர்வாக அலுவலரிடம் செலுத்தியுள்ளனர்.
12.01.2022 அன்று காலையிலிருந்து மாலை 4.42 மணி வரை எடுக்கப்பட்டிருந்த Summary இல் குறிப்பிடப்பட்டுள்ள 14 ஆயிரத்து 350 ரூபாயை அரசிற்க்கு செலுத்தாமல் மோசடி நடந்திருக்கிறது. குறிப்பிட்ட அந்த ஒரு நாளில் மட்டும் 14 ஆயிரத்து 350 ரூபாய் பணியில் இருந்த முன்னாள் படை வீரர்கள் முறைகேடாக திருடி உள்ளனர்.
அடுத்த மோசடி: வசூலானது ரூ.31,412; அரசுக்கு செலுத்தியது ரூ.29,860:
அதேபோல 25.12.2021 அன்றைய தினம் நாடுகாணி சோதனை சாவடியில் எடுக்கப்பட்ட இரண்டு Summaryகள் நமக்கு கிடைத்தது. அன்றைய தினம் சோதனைச் சாவடியில் இருந்த முன்னாள் படை வீரர்கள் இரண்டு ரசீது கொடுக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி உள்ளனர். ஒரு இயந்திரத்தில் இருந்து மாலை 6.15 மணிக்கு எடுக்கப்பட்ட Summary யில் 30312 ( 30 ஆயிரத்து 312 ரூபாய்) ரூபாய் வசூலிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இரண்டாவதாக அன்றைய தினம் பயன்படுத்தப்பட்ட மற்றொரு ரசீது வழங்கும் இயந்திரத்தில் மாலை 5.29 மணிக்கு எடுக்கபட்ட Summary-யில் 1100 ( ஆயிரத்து நூறு ரூபாய் ) ரூபாய் வசூலிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. 25.12.2021 அன்றைய தினம் மட்டும் மொத்தம் 31412 ( 31 ஆயிரத்து 412 ரூபாய் ) ரூபாய் வசூலிக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் அன்றைய தினம் முதல் Summary யில் குறிப்பிடபட்ட 30312 ரூபாயில் இருந்து 1552 ரூபாய் பிளாஸ்டிக் அபராதம் கழிக்கபட்டு 29860 ( 29 ஆயிரத்து 860 ரூபாய் ) மட்டுமே கிராம நிர்வாக அலுவலரிடம் செலுத்தப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் இரண்டாவது ரசீது வழங்கும் இயந்திரத்தில் வசூலிக்கப்பட்ட 1100 ரூபாயை அரசிற்க்கு செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர்.
எப்படி நடக்கிறது இந்த மோசடி?
இந்த மோசடி எவ்வாறு நடக்கிறது என அதில் பணியாற்றும் ஒரு சிலரிடம் நாம் கேட்டோம். அவர்கள் கூறிய தகவல்கள் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது அனைத்து சோதனை சாவடிகளிலும் வரி வசூல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், ஒரு நாளைக்கு இரண்டு முறை இயந்திரத்தில் இருந்து Summary எடுப்பார்கள். அந்த தினங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் ஆய்விற்கு வரவில்லை என்றால் ஒரு Summary இல் உள்ள தொகையை மட்டுமே அரசிற்கு செலுத்துவார்கள். ஒருவேளை ஆய்விற்கு அதிகாரிகள் யாராவது வந்து ஏன் இரண்டு Summary கள் எடுக்கப்பட்டிருக்கிறது என கேள்வி கேட்டால், இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் இரண்டு Summary களை எடுத்தோம் என கூறுவார்கள். அன்றைய தினம் மட்டும் இரண்டு Summary களில் உள்ள மொத்த பணத்தையும் அரசுக்கு செலுத்தி விடுவார்கள். இதுதான் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் தினம்தோறும் நடப்பதாக அவர்கள் கூறினர்.
சிப்பை கழற்றிவைத்து “சீப்பான” வேலை பார்க்கும் ஊழியர்கள்?
அதேபோல ரசீது வழங்கும் இயந்திரத்தில் சிப் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இந்த சிப்பில் தான் வரி வசூல் தொடர்பான அனைத்து தகவல்களும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால் வரி வசூல் பணியில் ஈடுபடும் ஒரு சில முன்னாள் படை வீரர்கள் அந்த சிப்பை கழற்றி வைத்துவிட்டு முறைகேடாக அதனை பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல நாடுகாணி மற்றும் கக்கன் எல்லாம் சோதனை சாவடிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட ரசீது கொடுக்கும் இயந்திரங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. வாகனங்கள் அதிகமாக வரக்கூடிய நாட்களில் அனைத்து இயந்திரங்களையும் பயன்படுத்தி வரி வசூல் செய்து விட்டு, ஒரு இயந்திரத்தில் வசூல் செய்யப்பட்ட பணத்தை மட்டுமே இவர்கள் அரசிடம் ஒப்படைக்கிறார்கள். மீதமுள்ள இயந்திரங்களின் மூலம் வசூலிக்கப்படும் பணத்தை இவர்கள் அரசுக்கு கணக்கு காட்டுவதில்லை.
இந்த மோசடிகளால் அரசுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்!?
அதேபோல கேரள எல்லையில் உள்ள நாடுகாணி சோதனை சாவடியில் கிறிஸ்துமஸ், ரம்ஜான், ஓணம், விஷு மற்றும் பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீலகிரி மாவட்டத்திற்குள் வரும். அது போன்ற நேரங்களில் நாளொன்றிற்கு 1 லட்சம் முதல் 1.5 லட்சங்கள் வரை வசூல் ஆகும். அதேபோல கர்நாடக எல்லையில் உள்ள கக்கநல்லா சோதனை சாவடி வழியாக விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வரும். அந்த சோதனை சாவடியிலும் 1.5 லட்சம் ரூபாய் வரைக்கும் வசூலிக்கப்படும். ஆனால் அவ்வாறு வசூலாக கூடிய மொத்த தொகையில் இருந்து பாதி தொகையை அரசுக்கு செலுத்தாமல் பணியில் இருப்பவர் திருடி விடுவதாக கூறினர்.இப்படி கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 1.5 கோடி ரூபாய் பணம் அரசுக்கு செலுத்தப்படாமல் முறைகேடு செய்யப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவலை நமக்கு தெரிவித்துள்ளனர்.
ஆட்சியர் இம்முறையாவது நடவடிக்கை எடுப்பாரா?
இந்த முறைகேட்டை கண்டுபிடிக்க வேண்டும் என்றால், ரசீது வழங்கும் இயந்திரங்கள் ticket vending machine வழங்கப்பட்ட முதல் நாளிலிருந்து தற்போதைய நாள் வரை வரி வசூலிக்கப்பட்ட மொத்த Summary யை எடுத்துப் பார்த்தாலே எத்தனை கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருக்கிறது என்பதனை எளிதாக தெரிந்து கொள்ள முடியும் எனவும் கூறியுள்ளனர். நீலகிரி மாவட்ட ஆட்சியர் இந்த முறைகேடு விஷயத்தில் தலையிட்டு உரிய விசாரணை மேற்கொண்டு அரசுக்கு சேர வேண்டிய பணத்தை திருடி அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து, திருடிய பணத்தை அவர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் இடம் கேட்ட போது, கிடைக்க பெற்ற ஆதாரங்களை கொண்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்துள்ளார்.
- மகேஷ்வரன், ச.முத்துகிருஷ்ணன்