சிறப்புக் களம்

பிறந்த 3-ம் நாளில் பறிக்கப்பட்ட குழந்தை: ஒரு வருடம் கழித்து கேரளத்தையே அதிரவைத்த தாய்!

பிறந்த 3-ம் நாளில் பறிக்கப்பட்ட குழந்தை: ஒரு வருடம் கழித்து கேரளத்தையே அதிரவைத்த தாய்!

PT WEB

கேரளத்தில் பிறந்த மூன்றாவது நாளிலேயே தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தையொன்று, ஒரு வருடமாகியும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. தன் குழந்தையை தான் இன்னமும் தேடி அலைந்து வருவதாக அந்தத் தாய் சமீபத்தில் வெளியே வந்து பேசியுள்ளார். இந்தப் பெண், கேரள சிபிஎம் தலைவரொருவரின் மகள். இவரும் சிபிஎம் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்தாம். தன் தாய் தந்தைதான் குழந்தையை தன்னிடமிருந்து பறித்ததாக கூறும் இவர், குழந்தை கிடைக்கும் வரை உண்ணாவிரதமிருக்கப்போவதாக கூறி கேரள தலைமைச்செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சம்பவம், கேரளாவில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள பேரூர் கடைபகுதியில் ஆளும் கட்சியான சி.பி.எம்.-ன் ஏரியா கமிட்டி உறுப்பினராக இருக்கும் பி.எஸ்.ஜெயச்சந்திரன் என்பவரின் மகள் அனுபமா. இவர் அப்பகுதியில் சி.பி.எம் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ தலைவராக இருந்தவர். ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்து அனுபமாவும் அவரின் கட்சியின் சக உறுப்பினரான அஜித் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். அஜித், பட்டியலினத்தவரை சேர்ந்த நபராக இருந்திருக்கிறார். மேலும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்துக்கும் அவர் விண்ணப்பித்திருந்திருக்கிறார்.

இதனால் அனுபமா வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பையும் மீறி அஜித்துடன் பழகிய அனுபமா கர்ப்பமாகி இருக்கிறார். இதன்பின் அஜித்தை திருமணம் செய்து வைக்கவும் குழந்தைக்கு பாதுகாப்பு கொடுக்கவும் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் சம்மதிப்பதாக கூறி அனுபமாவை தங்களுடனே தங்க வைத்துள்ளனர். பெற்றோர் வீட்டில் வசித்து வந்த அனுபமாவுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த மூன்றாவது நாளே அனுபமாவிடம் இருந்து குழந்தை பிரிக்கப்பட்டிருந்தது. ஜெயச்சந்திரன் குடும்பத்தினர் மற்றொருவருக்கு குழந்தையை தத்து கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

முதலில் இதுபற்றி அறியாத அனுபமாவுக்கு, ஆறு மாதங்களுக்குப் பிறகே அனைத்தும் தெரிந்துள்ளது. இதைத்தொடர்ந்து, தனது குழந்தையைத் தேடி தான் ஆறு மாதங்களாக அலைவதாக கூறி கேரளத்தை தற்போது பரபரப்பில் ஆழ்த்தியிருக்கிறார் அனுபமா. இது தொடர்பாக அவர் பேசுகையில், ``நான் எட்டு மாத கர்ப்பமாக இருந்தபோது, அதாவது கடந்த ஆண்டு செப்டம்பரில், அஜித்தும் நானும் ஒன்றாக வாழ ஆரம்பித்தோம். எங்கள் உறவை எதிர்த்த எனது பெற்றோர்கள், சில மாதங்கள் கழித்து எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாகவும், எனது குழந்தையைப் பாதுகாப்பதாகவும் உறுதியளித்தனர். அதை நம்பி எனது வீட்டுக்கு திரும்பினேன். ஆனால், என்னை சிறைப்படுத்தினர். அஜித்துடன் எந்த தொடர்பையும் மேற்கொள்ள அவர்கள் அனுமதிக்கவில்லை. ஆரம்பத்திலேயே குழந்தையின் கருவை கலைக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் நான் அதை கடுமையாக எதிர்த்தேன். குழந்தை பிறந்த மூன்றாவது நாளில் வலுக்கட்டாயமாக என்னிடம் இருந்து குழந்தையை எடுத்துச் சென்றனர்.

எனது சகோதரியின் திருமணத்துக்கு பிறகு குழந்தையை ஒப்படைப்பதாக சொன்னார்கள். ஆனால் திருமணத்திற்குப் பிறகும் அவர்கள் குழந்தையை ஒப்படைக்கவில்லை. எனது மகனைப் பற்றி நான் கேட்கும்போதெல்லாம், என் பெற்றோர் என்னை சித்திரவதை செய்யத் தொடங்கினர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வீட்டை விட்டு வெளியேறி அஜித்துடன் வாழ்ந்து வருகிறேன்" எனக் கூறும் அனுபமா, கடந்த ஆறு மாதங்களாக குழந்தையை தேடிவருவதாக சொல்கிறார். இதற்காக காவல்நிலையத்திலும் கட்சி தலைவர்களிடமும் புகார் கொடுத்திருப்பதாகவும் கூறுகிறார்.

``எனது பகுதியான பேரூர்கடை காவல் நிலையம் முதல், டி.ஜி.பி வரை பலரிடமும் புகார்கள் அளித்துவிட்டேன். முதல்வர் பினராயி விஜயன் உட்பட சி.பி.எம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடமும் புகார் கொடுத்துவிட்டேன். இருந்தும் எந்த பலனும் இல்லை. என் தந்தை என் மகனைத் தத்துக்கொடுத்துவிட்டதாகக் கூறுகிறார். ஒரு தாயாக, என் குழந்தை பற்றிய விவரங்களை அறிய எனக்கு முழு உரிமை உண்டு. எனக்கு என் குழந்தை திரும்ப வேண்டும். இதற்காக எந்த சட்டப் போராட்டத்திற்கும் நான் தயாராக இருக்கிறேன்" என்றும் அனுபமா உறுதிபட தெரிவிக்கிறார்.

பல மாத போராட்டத்துக்கு பிறகு அனுபமாவின் புகார் சில நாட்கள் முன் கேரள போலீஸ் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. அதுவம் கேரள அரசே நேரடியாக தலையிட்டு புகாரை வாங்க வைத்துள்ளது. இப்போது அனுபமாவின் புகாரின் அடிப்படையில் அவரின் பிஎஸ் ஜெயச்சந்திரன் மற்றும் தாய் ஸ்மிதா ஜேம்ஸ் ஆகியோருடன் அவரின் சகோதரி மற்றும் மைத்துனர் ஆகியோர் பெயர்களில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக மாநில குழந்தைகள் நலக் குழுவால் நடத்தப்படும் தொட்டிலில் அனுபமாவின் குழந்தை விடப்பட்டதாக கேரள காவல்துறைக்கு தெரிவித்துள்ளது.

``தனது மகனுக்காக அனுபமா குழந்தை நலக் குழுவை அணுக மாட்டார்" என்ற ஒப்புதலுடன் ஒரு ஆவணத்தை உருவாக்கி, குழந்தையை கவனிக்க முடியாது என்று நோட்டரி பப்ளிக் மூலம் அனுமதி வாங்கி ஜெயச்சந்திரன் குழந்தையை காப்பகத்தில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயசந்திரன் ஆளும் கட்சியான சிபிஎம் உறுப்பினர் என்பதால் போலீஸ் நடவடிக்கை எடுப்பதை தாமதப்படுத்தியது என்று குற்றச்சாட்டு எழுந்தது.

``அரசியல் அழுத்தம் காரணமாக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறியதாலே ஊடகங்களில் இந்த விஷயத்தை கொண்டுவந்துள்ளேன்" என்றுள்ள அனுபமா, இப்போது குழந்தையை மீட்கக் கோரி கேரள தலைமைச்செயலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கி இருக்கிறார். `இது கேரளாவுக்கு அவமானம். எனக்கு என் குழந்தை வேண்டும்' என்ற பதாகையுடன் தனது கணவருடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அனுபமாவுடன் பேசி உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தினார். ஆனால் அதனை மறுத்துவிட்ட அனுபமா, ``இது கட்சி அல்லது அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. குழந்தையைத் திரும்பப் பெற ஒரு தாயின் போராட்டம். எந்தத் தாயும் என் அவலத்திற்கு ஆளாகக் கூடாது" என்றுள்ளார். இப்போது இது அரசியல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸும், பா.ஜனதாவும் மட்டுமில்லாமல், சிபிஐ (எம்) பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் உட்பட பலர் குழந்தையை மீட்டு அனுபமாவிடம் ஒப்படைக்க வலியுறுத்தியுள்ளனர்.

- மலையரசு