அரசியல், மதத்துடன் தொடர்புபடுத்தி ‘மெர்சல்’ படத்திற்கு ஏற்படுத்தப்பட்ட சர்ச்சை ஓய்ந்து, பெண்கள் என்றால் இப்படிதானா? என்ற எண்ணத்தை ஏற்படுத்திய ‘லக்ஷ்மி’ குறும்படம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நிலையில், அதன் நீட்சியாக மீண்டுமொரு சர்ச்சையையும், கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்கிறது எதிர்பார்ப்புக்கு உள்ளான ‘நாச்சியார்’ படத்தின் டீஸர்.
‘நாச்சியார்’ ஜோதிகா போலீஸ் அதிகாரியாகவும்… ஜி.வி.பிரகாஷ் கைதி… போலவும் அதில் காட்டப்பட்டிருக்கிறது. ஆக்ரோஷமான காட்சிகளில் தோன்றும் ஜோதிகா, ஒரு இளைஞனை அறைந்துவிட்டு ‘தே… பயலுக…’ என்று பேசும் அதிஉச்ச கெட்ட வார்த்தையுடன் டீஸர் நிறைவடைகிறது. இதுதான் இப்போது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைதளங்களில் கழுவிக் கழுவி ஊற்றும் அளவுக்கு கடுமையான விமர்சனத்தையும் எதிர்கொண்டிருக்கிறது.
கரடு முரடான வாழ்க்கைப் பாதையை கடந்து, இளைய தலைமுறை இயக்குநர்களில் தனி இடம் பிடித்திருக்கும் பாலா, களம், தளம் இரண்டிலுமே பிரம்மிப்பூட்டுகிற அளவிற்கு வித்தியாசத்தை காட்டும் படைப்பாளி என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், நாச்சியார் டீஸரில் ஜோதிகா மூலம் பேச வைத்திருக்கும் தே… பயலுக… என்ற வசனம் ‘இவன்தான் பாலா!’ என்கிற உண்மை முகத்தை வெளிக்காட்டி இருக்கிறது. இப்படியொரு அதிஉச்ச கெட்ட வார்த்தையுடன் டீஸர் வெளிவருகிறது என்றால், ‘சமூக அக்கறை’ பற்றிய வசனங்கள் இன்னும் என்னவெல்லாம் ‘நாச்சியாரிடம்’ இருக்கிறதோ?
தே… பயலுக… என்ற வார்த்தை எந்தளவிற்கு பிரச்னையும், கலவரத்தையும் உண்டுபண்ணும் என்று அறியாதவரா கிராமத்தில் இருந்து வந்த இயக்குநர் பாலா? இதுபோன்ற வார்த்தை உச்சரிப்பால் கிராமங்களில் வெட்டுக் குத்தெல்லாம் நடந்திருப்பதை பார்த்திருக்கிறேன். படித்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். அப்படியான ஒரு கெட்ட வார்த்தையை படத்தின் டீஸரில் வெளியிடும்போது, அதற்கு ஒரு ‘பீப்’ போட வேண்டும் என்று சிந்தித்திருக்க வேண்டாமா? எதையாவது செய்து படத்தை பற்றி பேச வைக்க வேண்டும்… பரபரப்பையும், சர்ச்சையையும், விமர்சனத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற வணிக நோக்கம் எண்ணம்தானே இதற்கு காரணமாக இருக்க முடியும்?
ஒரு முழு நீள பெண்ணிய படத்தில் (மகளிர் மட்டும்) நடித்த ஜோதிகா, இப்படியான வசனத்தை பேசுவதற்கு ஒப்புக் கொண்டது ஏன் என்ற கேள்வியை, பெண்ணியவாதிகள்தான் எழுப்ப வேண்டும். போலீஸ்காரர்கள் என்றாலே அவர்கள் கரடு முரடானவர்கள் என்பது மக்களுக்கு தெரியும். தே… பயலுக… என்ற கெட்ட வார்த்தையை தாண்டி அதிஉச்சமாக பேசும் போலீஸ்காரர்களும் இருக்கிறார்கள்… அவர்கள் களையப்பட வேண்டும் என்று குரல் எழுப்பும் காலத்தில், அப்படியான ஒரு வசனத்துடன் வரும் நாச்சியார் படத்திற்கு நாம் என்ன எதிர்வினையை காட்டப்போகிறோம்?
52 விநாடிகள் ஓடக்கூடிய நாச்சியார் டீசர், சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்க்கும் இளைஞர்கள் தங்களின் நியாயமான கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். “பாலா படம் என்றால் இப்படிதான் என்று தெரியும். ஆனால் ஜோதிகாவும் இப்படியா?” என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள். பணத்திற்காக நடிக்கிறோம் என்பதற்காக, எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற நடிகர்-நடிகைகளின் போக்கு ஆபத்தைதான் விளைவிக்கும் என்று, கவலையுடன் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சமூக அக்கறையுள்ள படங்களும், பாடல்களும், வசனங்களும் வெளிவந்த காலங்கள் மாறி, படம் முழுவதும் இரட்டை அர்த்த வசனங்களுடனும், இப்படியான உச்சப்பட்ச கெட்ட வார்த்தைகளுடன் தொடர்ந்து படங்கள் வெளிவருகின்றன என்றால், இந்த சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டிய நேரமிது!