என்னதான் நடக்கிறது பொதுப் போக்குவரத்து துறையில் ? அமைச்சரும் அரசும் ஏன் பேச மறுக்கிறார்கள்? எப்போதுதான் இந்தப் பிரச்சனை தீரும்? அரசுப் பேருந்தை நம்பி பயணம் செய்யும் பயணிகளின் பிரதானக் கேள்விகளில் இவை. போக்குவரத்து துறையில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் செய்வது வழக்கம். இந்த நடைமுறையை 1977-ம் ஆண்டில் இருந்து பின்பற்றி வருகிறது தமிழக அரசு. தமிழ்நாடு அரசுத்துறையில் பணியாற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு இப்படிதான் ஊதிய உயர்வு செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்படுகிறது.
13வது ஊதிய ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு விரோதமாக இருப்பதே தற்போதைய வேலைநிறுத்தத்துக்கு காரணம் என போராட்டத்தில் இருக்கும் தொ.மு.ச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் முன் வைக்கின்றன. அதாவது 12 வது ஊதிய ஒப்பந்தம் 2016 ஆகஸ்ட் மாதமே முடிந்து விட்டது. புதிய ஊதிய ஒப்பந்தம் நடைமுறை 2016 செப்டம்பரில் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இதனால் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தைக்கு வேகம் காட்டாமல் அமைதி காத்தனர். பின்னர் அரசிடம் பேசினர், பல முறை போக்குவரத்து துறைக்கு நோட்டீஸ் கொடுத்து கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் இவை எதிலும் முடிவு கிடைக்கததால் 2017 பிப்ரவரி மாதம் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்தனர். நோட்டீஸ் கொடுத்தவர்களில் 10 தொழிற்சங்க கூட்டமைப்பினர் கடந்த மே மாதம் வேலை நிறுத்தம் செய்தனர். 2 நாள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் பழனிச்சாமி உத்தரவின்படி அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று, வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது.
வேலை நிறுத்தம் கைவிடப்பட்டதால் அரசு உறுதியளித்த தொகையை 2 தவணையாக 1250 கோடி ரூபாய் வழங்கியது. ஆனால் 7 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை தொகை இருப்பதை வழங்க என்ன வழி என எங்கும் கூறப்படவில்லை. அதேபோல் தொழிலாளர் பிடித்தம் செய்யும் பி.எப்., சேமிப்பு பணம்,உள்ளிட்டவை தொழிலாளர் வங்கி கணக்கில் 2017 செப்டம்பர் முதல் செலுத்தப்படும் என்றும் நிலுவை தீர்க்கப்படும் என்று அரசு அளித்த வாக்குறுதியில் முன்னேற்றமும் இல்லை என்கின்றனர் தொழிற்சங்கத்தினர்.
தொடர்ந்து அமைச்சர் முன்னிலையில் தொழிற்சங்கங்களோடு நடைபெற்று வந்த ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை 13 கட்டங்களாக எட்டினாலும், தீர்வு மட்டும் கிடைக்கவேயில்லை. ஏற்கனவே நடைமுறைப்படுத்த வேண்டிய ஒப்பந்தம் 1 அரை ஆண்டுகள் காலதாமதமாகும் நிலையில் ,அரசுதுறையில் ஒட்டுனர்களாக இருக்கும் ஊழியர் பெறும் 19,500 ரூபாய்க்கு இணையான ஊதியம் இருக்க வேண்டும் என்பதும் கோரிக்கையாகவே நீடிக்கிறது.
இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் 2003க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளிக்கும் ஓய்வூதியம் என்ற நடைமுறை இருக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் எதிர் பார்த்தனர். ஆனால் ஒப்பந்தம் செய்யும் சரத்தில் அது இல்லாதக் காரணத்தால் ஜனவரி 4-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நேரத்திலேயே சென்னை உட்பட பல இடங்களில் அறிவிக்கப்படாத வேலை நிறுத்தம் மாலை 5 மணியளவில் தொடங்கியது. ஏற்கனவே 2017செப்டம்பர் மாதம் ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுத்து தயாராக இருந்த சங்கங்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டனர்.
பிரதான ஊதிய உயர்வு மற்றும் அரசு ஒட்டுனர் அடிப்படை ஊதியம் 5200+2400 ஆகியவற்றோடு சேர்த்து 2.57 காரணி கொடுத்ததால் 19532 ஊதியமாக கொடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால் அரசோ, போக்குவரத்து தொழிலாளர் அடிப்படை ஊதியம் மற்றும் ஊதிய உயர்வு 5200+1700 ஆகியவற்றோடு 2.44 காரணி சேர்த்து 16836 தருகிறோம் என்கிறது. தற்போது உறுதியளிக்கும் இந்தத் தொகை 16 மாத காலத்திற்கு முன்பே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியிருக்க எப்போதோ அமலில் வந்திருக்க வேண்டிய ஊதிய உயர்வை 16 மாத நிலுவை தொகை கூட இல்லாமல் வழங்குவதை எப்படி ஏற்க முடியும் என கேட்கின்றனர் ஊழியர்கள். அரசோ தனது கணக்கை விட்டுத்தராமல் அடம்பிடிக்கிறது. அதற்கு அரசுத் தரப்பில் நிதிச்சுமை, பற்றாக்குறை, காலியான கருவூலம் என பல காரணங்கள் அடுக்கப்படுகின்றன. ஆனால் எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் சட்ட மசோதாவும் மறுபக்கம் தாக்கலாகிறது. ”நிலுவைத் தொகையை கடந்த 15 ஆண்டுகளாக தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்காமல் நிர்வாக செலவுக்காக போக்குவரத்து கழகம் எடுத்துக் கொண்டது. ஓய்வுபெற்ற 60 ஆயிரம் நபர்களுக்கு 2 ஆயிரம் கோடியும், பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு 5ஆயிரம் கோடியும் நிலுவை உள்ளது. அதே நேரத்தில் அதிகாரியாக பணியாற்றும் நபர்களுக்கு மட்டும் கூடுதல் சம்பளமா என ஆதங்கப்படுகின்றனர் தொழிற்சங்கத்தினர்.
அரசு ஊழியர்களாக பணியாற்றுவோர் கடந்த ஒப்பந்தத்திற்கு பிறகு 2800 ரூபாய் முதல் 11400 ரூபாய் வரை ஊதிய உயர்வை பெற்று வருகின்றனர். அரசின் நிதி நிலமை மோசமாக இருக்கும் காரணத்தால், தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை படிப்படியாக வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் கூறுகிறார்.அதேபோல் 90 சதம் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் இருப்பதால் பேருந்துகளை இயக்க முடியும் எனவும் தெரிவித்தார். ஆனால் தற்போது 8வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. குடும்பத்துடன் போராட்டம், தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன்பாக போராட்டம் என நீண்டு கொண்டு செல்கிறது.
இப்படி அரசுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே நடந்து வந்த பேச்சு வார்த்தை கடைசியில் நீதிமன்றத்தை அடைந்திருக்கிறது. மக்களே முக்கியம் என கருத மாட்டீர்களா என நீதிமன்றம் கேட்க, அரசுக்கே அக்கறை இல்லாத போது எங்களுக்கு என்ன என தொழிற்சங்கங்கள் எதிர்க்கேள்வி கேட்கின்றனர். மத்தியஸ்தர் மூலம் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வந்தால் உடனடியாக வேலை நிறுத்தத்தை கைவிட தயார் என தொழிற்சங்கங்கள் கூற, ஒவ்வொரு பதிலுக்கு கால அவகாசம் கேட்டு நீதிமன்றத்தையும் காக்க வைக்கிறது தமிழக அரசு. இப்படி நீதிமன்றத்திலும் பேசுவார்த்தை நடைபெற்றும் வரும் சூழலில், பொங்கல் விழா கொண்டாட போகி அன்றும் விடுமுறை விட்டு மக்களை குஷிப்படுத்தியிருக்கிறது அரசு. ஆனால் பொங்கலை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வதெப்படி என மக்கள் புலம்புகின்றனர்.
பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 13 வரை 11983 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் முன்பதிவு விழா கூட நடத்த முடியாமல் தவிர்த்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். கடந்தாண்டு சுமார் 6 லட்சம் பேர் அரசுப் பேருந்தில் பயணம் செய்ததாக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை சொல்கிறது. ஆனால் தற்போது எந்த ஏற்பாடும் இல்லை. குறைந்த தூரத்திற்கு அரசுப் பேருந்தை இயக்கி தற்காலிக ஓட்டுநர்களால் உயிழப்பும், பேருந்து சேதமுமே மிச்சம் என்பதை பார்க்க முடிகிறது. பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு என்று தெரிந்தும், நீதிமன்றம் பல முறை அறிவுறுத்தியும் அரசு சரிவர இதனை கையாள முடியாததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவதும் தொடர்கிறது. போக்குவரத்து ஊழியர்கள் எப்போது வேலை நிறுத்தத்தை முடிப்பார்கள், எப்போது முழுமையாக பேருந்துகள் ஓடும் என்பதே சாமானியனின் கேள்வி.