ஒமைக்ரான் காரணமாக, கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது கொரோனா தொற்று. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் கொரோனா அதிவேகமாக அதிகரித்து வருகின்றது. இந்தியாவிலும் பல மாநிலங்களில் மும்மடங்காக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் எப்படியாவது கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், தடுப்பூசி பணிகள் யாவும் மும்மரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதனொரு பலனாக நேற்றைய தினம் நாடு முழுவதும் குழந்தைகளுக்கான தடுப்பூசி விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. உடன், அதுசார்ந்த விழிப்புணர்வும் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றது. பெரியவர்கள் மத்தியிலான கொரோனா தடுப்பூசி விநியோகமே தற்போதுவரை அரசுக்கு மிகவும் சவாலாக உள்ளதால், குழந்தைகள் மத்தியிலான தடுப்பூசி விநியோகம் இன்னும் கூடுதல் சவாலாக உள்ளது. இந்த சவால்களை நோக்கியே, நம் தொடரின் இந்த அத்தியாயம் அமையவுள்ளது.
இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், 15 முதல் 18 வயதினருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 25ஆம் தேதி அறிவித்திருந்தார். இதற்காக நாடு முழுவதும் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த 32,000-த்துக்கும் அதிகமான மையங்கள் அமைக்கப்பட்டன. அதன்படி சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டில் இப்பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
தொடர்புடைய செய்தி: கொரோனா கால மாணவர் நலன் 14: விரைவில் குழந்தைகளுக்கும் கிடைக்கப்போகிறது கோவிட்-19 தடுப்பூசி!
தமிழ்நாட்டில் சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதியானவர்களாக சுமார் 33,46,000 பேர் உள்ளனர். வரும் 20ஆம் தேதிக்குள் இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் வகுப்பு அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டையை கொண்டு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது.
முதல் நாளான நேற்று, தமிழ்நாட்டில் 3,32,000க்கும் அதிகமான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 22,310 சிறார்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். சென்னையில் 4,601 சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை கூறியுள்ளது. தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள சிறார்களில், சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர்தான் பள்ளிகளில் படிக்கின்றனர். மீதமுள்ள பள்ளிக்கு வராத 15 வயதுக்கு மேற்பட்ட சிறார்களையும் கணக்கெடுத்து அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளாதக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
குழந்தைகளை தடுப்பூசி போடவைப்பதில் மருத்துவத்துறைக்கு உள்ள முக்கியமான சவாலாக இருப்பது, பெற்றோர்களை சமாளிப்பதுதான். பெற்றோர் மத்தியில் இதுகுறித்த அச்சமும், நிறைய கேள்விகளும் உள்ளது. ஏற்கெனவே இன்னமும் இந்தியாவில் பல பெரியவர்கள் தங்களின் தடுப்பூசியை பெறாமல்தான் உள்ளனர் என்பதால், பெரியவர்கள் மத்தியிலான விழிப்புணர்வை அதிகப்படுத்தும் பணி, அரசுக்கு சவாலாகவும் சுமையாகவும் மாறியுள்ளது. தடுப்பூசி விநியோகம் தொடங்கிய முதல் நாளான நேற்றைய தினமேவும், இது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நேற்றைய தினம் 15 – 18 வயதிலுள்ள சிறாரொருவரின் தாயொருவர், காலாவதியான கொரோனா தடுப்பூசிகளே பிள்ளைகளுக்கு போடப்படுவதாக ட்விட்டரில் குற்றஞ்சாட்டியிருந்தார். தனது அப்பதிவில் அவர், “எனது மகனுக்கான முதல் டோஸ் தடுப்பூசியை பெற சென்றபோது, அந்தத் தடுப்பூசிகள் நவம்பர் 2020-லேயே காலாவதியாகிவிட்டது என்பதை உணர்ந்தோம். அதைபற்றி அதிகாரிகளிடம் கேட்ட போது, அந்தத் தடுப்பூசிகளின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டதாக ஒரு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை காண்பித்தார்கள். ஏன், எப்படி, எந்த அடிப்படையில் இந்த கால நீட்டிப்பு செய்யப்பட்டது என தெரியவில்லை. தடுப்பூசி கையிருப்பை அழிக்க, குழந்தைகளை வைத்து தடுப்பூசி பரிசோதனையை செய்து பார்க்கிறீர்களா இவர்கள்?” என கடுமையாக சாடியிருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு, “இது முழுக்க முழுக்க தவறான தகவல். இந்தியாவில், எந்த இடங்களிலும் காலாவதியான தடுப்பூசி விநியோகிக்கப்படவில்லை. கடந்த அக்டோபர் 24, 2021-ல், மத்திய மருந்துகள் நிலையான கட்டுப்பாட்டு அமைப்பு சார்பிலிருந்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று கோவாக்சின் தடுப்பூசிக்கான காலாவதி தேதிக்கான கால நீட்டிப்பு 9 மாதம் என்பதிலிருந்து 12 மாதம் என மாற்றப்பட்டது. இதேபோல கோவாக்சின் தடுப்பூசியின் அளவும், 6 மாதம் என்பதிலிருந்து 9 மாதமாக மாற்றப்பட்டது. கோவாக்சின் தடுப்பூசிக்கான இந்த கால அளவு நீட்டிப்பு, பிப்ரவரி 2021-லேயே செய்யப்பட்டு விட்டது.
இப்படியாக தடுப்பூசி நிறுவனங்களின் பரிந்துரைகளுக்குப் பிறகு, தேசிய கட்டுப்பாட்டாளர்களின் ஒப்புதலுடனேயே கால அளவு நீட்டிப்பு யாவும் செய்யப்பட்டுள்ளது. அனைத்துக்கும் எங்களிடம் தரவுகள் உள்ளன. எந்த இடத்திலும், எதுவும் தவறாக செய்யப்படவில்லை” என்று கூறியுள்ளது. இதேபோல கோவாக்ஸினை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனமும் “பிரிக்கப்பட்ட கோவாக்ஸின் டோஸ், 2 முதல் 8 செல்சியஸ் டிகிரியில் சேமிக்கப்பட்டால், 28 நாள்களுக்கு பாதுகாப்பானதாகவே இருக்கும். இது, மத்திய மருந்துகள் நிலையான கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலுக்கு பிறகே அமலுக்கு கொண்டுவரப்பட்டது. தடுப்பூசிகள் வீணாவதை தடுப்பதற்காக, இந்த வழிமுறைகள் கொண்டுவரப்பட்டன” என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படியாக மத்திய அரசு தடுப்பூசி குறித்து பரவும் அச்சத்தை ஆதாரபூர்வமாக விளக்கி வருகின்றது. இதேநேரத்தில், மாநில அரசும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இப்போதைக்கு கொரோனா என்னும் கொடுந்தொற்றுக்கு எதிரான பேராயுதமாக பார்க்கப்படுவது தடுப்பூசி மட்டும்தான் என்பதால், மத்திய மாநில அரசுகள் இவ்விஷயத்தில் கூடுதல் விழிப்புணர்வுடனேயே இருக்கிறது.
குழந்தைகள் நல மருத்துவர் அஷ்வத், சிறார்களுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்து புதிய தலைமுறையிடம் தெரிவிக்கையில், “நிச்சயம் குழந்தைகள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் தடுப்பூசி செலுத்திக்கொண்டால்தான் கடந்த கொரோனா அலைகளின்போது குழந்தைகள் மத்தியில் ஏற்பட்ட பாதிப்புகளை, வரும் காலங்களில் தடுக்கவும், குறைக்கவும் முடியும். பல பெற்றோர், 15 – 18 சிறார்கள் மத்தியில் கடந்த கொரோனா அலைகளின்போது மிகப்பெரிய சிக்கலேதும் ஏற்படவில்லையே என நினைத்து, அவர்களுக்கு ஏன் தடுப்பூசி என நினைக்கிறார்கள். கொரோனா ஏன் குழந்தைகள் மத்தியில் பெரியளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை என்பதன் பின்னணியிலுள்ள மருத்துவக் காரணத்தை, இப்படியான பெற்றோர் உணரவேண்டும். அது, பெரியவர்களைப் போல குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் – இதய பாதிப்பு - சிகரெட், புகை பழக்கம் போன்றவையெல்லாம் பெரியளவில் கிடையாது என்பது. அதனால்தான் அவர்களுக்கு சீறிய பாதிப்பு ஏற்படவில்லை. மற்றபடி, குழந்தைகளுக்கும் கொரோனா ஏற்படும் வாய்ப்பு அதிகம்தான். கவனிக்காமல் விடும்பட்சத்தில், அவர்களுக்கும் நுரையீரல், சுவாசப்பாதை போன்றவையெல்லாம் மோசமாக பாதிக்கப்படும்தான். ஆகவே குழந்தைகளுக்கு தடுப்பூசி தேவையில்லை என புரிந்துக் கொள்வது, தவறு.
இந்த இடத்தில் இன்னொரு விஷயமும் உள்ளது. தடுப்பூசிகளின் மூலம், சீறிய பாதிப்புகளை தடுப்பது மட்டுமல்ல… கொரோனா ஏற்படுவதையே நம்மால் தடுக்க முடியும். மேலும், கொரோனா பரவலையும் தடுக்க முடியும். 15 – 18 வயதிலுள்ள சிறார்கள், அதிக நேரம் வெளியில் இருக்க நினைக்கும் எண்ணமுடையவர்களாக இருப்பதால், கொரோனா பரவலில் முக்கிய பங்காற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே அவர்களுக்கு தடுப்பூசி அவசியம் மற்றும் கட்டாயமும் கூட! இந்தத் தேவையை உணர்ந்து, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும்” என்றார்.
இந்தியா மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளும் இந்த விஷயத்தில் தங்களின் முனைப்பை காட்டத் தொடங்கிவிட்டன. அந்தவகையில், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கடந்த ஆண்டு முதல் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பிரான்ஸில், 12-17 வயதுக்குட்பட்ட 66% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது; 52% பேருக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஸ்வீடனில், 12-15 வயதுடையவர்களில் மருத்துவ பிரச்னைகள் உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படுகிறது. பிரிட்டனில் 12 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனை பொறுத்தவரை ஃபைசர், மாடெர்னா, பையோ- என்டெக் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதேபோல 18 வயதுக்குட்பட்டோருக்கு ஃபைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இப்படியாக உலகம் முழுவதும் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும்பணி தீவிரமாகி வருகிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இந்தியப் பெற்றோர் அனைவரும் தங்கள் பிள்ளைகளை கொரோனாவுக்கு எதிராக மாற்ற உதவ வேண்டும் என்பதே, எங்கள் பரிந்துரையும்.
- ஜெ.நிவேதா, விக்னேஷ் முத்து
முந்தைய அத்தியாயம்: கொரோனா கால மாணவர் நலன் 16: ‘திருமண வயது அதிகரிப்பு’ மசோதா உண்மையிலேயே மாற்றம் தருமா?