சிறப்புக் களம்

கீட்டோ டயட் முறையை பின்பற்றுபவரா நீங்கள்? - இந்த தவறுகளை நிச்சயம் தவிர்த்துவிடுங்கள்!

கீட்டோ டயட் முறையை பின்பற்றுபவரா நீங்கள்? - இந்த தவறுகளை நிச்சயம் தவிர்த்துவிடுங்கள்!

Sinekadhara

கீட்டோ டயட்டை தற்போது பெரும்பாலானவர்கள் பின்பற்றுகின்றனர். குறைந்த கார்போஹைட்ரேட், மீடியம் புரதம் மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளை முறையான அளவில் சரியான நேரத்தில் சாப்பிட்டு உடல் எடையைக் குறைப்பதே இந்த டயட். அதாவது கொழுப்புச்சத்து அதிமுள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொண்டு கார்போஹைட்ரேட் உணவை அதிகளவில் தவிர்ப்பதே இந்த டயட்டின் கான்செப்ட். இதில் சற்று தவறினாலும் மொத்த டயட்டே தவறாகிவிடும். ஆனால் நிபுணரின் உதவியின்றி இந்த டயட்டை பின்பற்ற நினைப்பவர்களுக்கு பல நேரங்களில் தவறாகப் போவதுண்டு. கீட்டோ டயட்டை பின்பற்றுபவரக்ள் செய்யும் சில பொதுவான தவறுகளை தெரிந்துகொள்ளலாம்.

உணவுமுறையில் திடீர் மாற்றம்

எந்தவொரு டயட் முறையையும் மெல்ல மெல்ல பழக்கப்படுத்தவேண்டும். ஒரே இரவில் உணவுமுறை முழுக்க மாற்றியமைக்கும்போது அதனை உடலால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே எந்த உணவு மற்றும் பழக்கவழக்கமானாலும் கொஞ்சம் கொஞ்சமாக பழக்கப்படுத்துவது நல்லது. இதனால் நீண்ட நாட்களுக்கு டயட் முறையை பின்பற்றி டார்கெட் செய்த உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம். ஒரேயடியாக கார்போஹைட்ரேட்டை உணவிலிருந்து நீக்குவதை உடல் ஏற்றுக்கொள்ளாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கீட்டோ காய்ச்சலுக்கு தயாரா?

கீட்டோ காய்ச்சல் என்பது கீட்டோ டயட்டுக்குள் செல்வதன் முதல் அறிகுறி. உடல் இயங்க கார்போஹைட்டுக்கு பதிலாக கொழுப்புகள் கரைக்க ஆரம்பித்துவிட்டால் கீட்டோ டயட்டுக்குள் செல்ல ஆரம்பித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். ஆனால் இந்த டயட் ஆரம்பித்த முதல் வாரத்தில் தசை பிடிப்பு, மயக்கம், உடல்வலி மற்றும் தலைசுற்றல் போன்ற பொதுவான அறிகுறிகள் தென்படும். எனவே டயட்டை ஆரம்பிப்பதற்கு முன்பே இதுபோன்ற சூழ்நிலைகளை கையாள தயார்செய்து கொள்வது அவசியம். இவற்றை கையாள முடியாவிட்டால் டயட்டை முறையாக பின்பற்ற முடியாது என்பது கருத்தில்கொள்ளவும். இந்த நிலையை சமாளிக்க பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் சோடியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

போதுமான தண்ணீர் குடிக்காமை

அதிக கொழுப்பு மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட்டை எடுத்துக்கொள்ளும்போது உடல் தானாகவே வறட்சியாகிவிடும். உடலுக்கு போதிய தண்ணீர் கிடைக்காவிட்டால் அதிக பசி மற்றும் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படும். எனவே தினசரி 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.

தவறான ஊட்டச்சத்து முறை

கீட்டோ டயட்டை பின்பற்றுபவர்கள் தினசரி 5-10% கார்போஹைட்ரேட்டையும், 10-20% புரதத்தையும், 70-80% கொழுப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விகிதம் தவறாக அமைந்துவிட்டால் உடலானது கார்போஹைட்ரேட்டை எரிப்பதற்கு பதிலாக தினசரி எடுத்துக்கொள்ளும் கொழுப்பை எரிக்க ஆரம்பித்துவிடும். கீட்டோசிஸ் நிலையை அடைய உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் எரிக்கப்படுவது அவசியம். புரதத்தை அதிகளவில் சேர்த்துக்கொண்டு கொழுப்பு உணவுகளை எடுத்துக்கொள்ள தயங்கினால் கீட்டோ டயட் முறையாக இருக்காது.

போதிய தூக்கமின்மை

உடலின் இயக்கத்தை சீராக வைக்கவும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் தூக்கம் மிகமிக அவசியம். டயட் மற்றும் போதிய உறக்கம் இரண்டுமே சரியாக இருந்தால்தான் எடைகுறைப்பு சாத்தியமாகும் என்பதை மறக்கவேண்டாம். போதிய உறக்கமின்மையால் உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்படும். உடல் சோர்வால் அதிக உணவு சாப்பிட தூண்டப்படுவதோடு, மன குழப்பமும் ஏற்படும். எனவே எந்த டயட் முறையை பின்பற்றினாலும் தினமும் குறைந்தது 7 - 8 மணிநேரம் தூங்குவது ஆரோக்கியமான எடைகுறைப்புக்கு வழிவகுக்கும்.