சமீபகாலமாக 'ஒரு ரூபாய் மற்றும் 10 பைசா போன்ற பழைய நாணயங்கள் லட்சங்களில் விலை போகின்றன' என்று சில வலைதளங்கள், சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த தகவல்கள் உண்மையானதா என்பதை தெளிவுபடுத்தவும், பழைய நாணயங்கள் சேமிப்பு மற்றும் அதன் நன்மை பற்றியும் சென்னை நாணயவியல் அமைப்பின் தலைவர் மற்றும் வாழ்வியல் பயிற்சியாளரான சென்னை மணிகண்டனிடம் விரிவாகப் பேசினோம்.
கல்லூரி முடித்ததில் இருந்து கிட்டத்தட்ட 20 வருடங்களாக நாணயங்கள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அவரிடம் இது தொடர்பான கேள்விகளை முன்வைத்தபோது, "நாணயங்கள் சேகரிப்பு போல் தபால் சேகரிப்பு, ரேடியோ சேகரிப்பு உள்ளிட்ட பல சேகரிப்புகள் உள்ளன. ஆனால், மற்ற சேகரிப்பு போல் நாணயங்கள் சேகரிப்பு கிடையாது. நாணயங்கள் சேகரிப்பை 'பொழுதாக்கத்தின் அரசன்' (King of the Hobby) என வர்ணிக்கப்படுவதும் உண்டு. நாணய சேகரிப்பு பொழுதுபோக்காகவும் இருந்து நம்முடைய கலை - இலக்கியம் சார்ந்த வரலாற்று தகவல்களை பேணி பாதுகாக்கவும் உதவுகிறது என்பதால்தான் இப்படி வர்ணிக்கப்படுகிறது.
ஆகச் சிறந்த வரலாற்றுச் சான்று: ஒரு நாட்டின் 'மெட்டாலிக் எவிடன்ஸ்' (Metallic evidence) என்று சொல்லக்கூடிய நாணயங்களை பாதுகாக்கவும், அழிவில் இருந்து மீட்டெடுக்கவும் இந்த நாணய சேகரிப்பு உதவுகிறது. நாட்டின் மற்ற புராதன சின்னங்களான கோவில் கோபுரங்கள், செப்பேடுகள், நடுகற்கள், கல்வெட்டுகள் போன்றவற்றில் இருந்து வரலாற்று சம்பவங்களை நினைவுகூரலாம். ஆனால், ஆகச் சிறந்த வரலாற்று சான்று, உலோகச் சான்று என்றால், அது நாணயங்கள் தான். ஒரு சின்ன நாணயத்தில் ஒரு வரலாற்று சம்பவத்தின் முழு பின்னணியை தெரிந்துகொள்ள முடியும்.
இந்த நாணய சேகரிப்பால் என்ன பயன் என்றால், வகைப்படுத்தும் திறன், வரிசைப்படுத்தும் திறன், உற்றுநோக்கும் திறன், பகுத்தறியும் பண்பு போன்றவற்றை வளர்த்துக்கொள்ள முடியும். நாணய சேகரிப்பு மூலம் ஒருவரின் கவனிப்பு திறன் மேம்படுத்த முடியும். மேலும், ஒரு நாணயத்தை வைத்துக்கொண்டு ஒரு நாட்டின் பல தகவல்களை, வரலாற்று ரீதியாக தெரிந்துகொள்ளும் பணப்பை நாணய சேகரிப்பு வழங்குகிறது. ஒரு நபரின் அறிவை பெருக்கக்கூடிய மிகப்பெரிய பங்களிப்பை, நாணய சேகரிப்பு செய்கிறது. எனவே, இது சாதாரண பொழுதுபோக்கு கலை என்பது மட்டுமில்லாமல், நம்முடைய வரலாற்றைப் பேணிக் காக்கக்கூடிய பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது.
நாணய சேகரிப்பில் தங்கம் தென்னரசு: மன்னர்கள் காலத்தில் இருந்தே நாணய சேகரிப்பு பழக்கம் இருக்கிறது. தற்போது, இந்தப் பழக்கம் சாமானிய மக்களில் இருந்து அதிகாரிகள் வரை பலரிடம் இருக்கிறது. தமிழக தொழில்துறை மற்றும் தொல்பொருள் துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு, தமிழகத்தில் இருக்கும் நாணய சேகரிப்பாளர்கள் வரிசையில் ஒரு சீனியர் என்பது பலருக்கும் தெரியாது. என்னுடைய நாணய சேகரிப்புக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன். இந்த துறையில் அதிக நாட்டம் கொண்டவராக அறியப்படுகிறார். இவர் போன்றவர்களை பின்பற்றியே 20 ஆண்டுகளாக இந்த சேகரிப்பில் ஈடுபட்டுள்ளேன். நிறைய கண்காட்சிகளில் நாணயங்களை காட்சிப்படுத்தியுள்ளேன்" என்றார்.
மோசடிகள்... உஷார்: நாணயம் சேகரிப்பு தொடர்பாக தற்போது அதிகரித்து வரும் மோசடி குறித்த கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு பதிலளித்த சென்னை மணிகண்டன், "ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் பழைய நாணயங்கள், டிராக்டர் படம் போட்ட 5 ரூபாய், 786 என முடியும் ரூபாய் நோட்டுகள், மாதா வைஷ்ணவி தேவி உருவம் பொறிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் போன்றவை பல லட்சங்களுக்கு விலை போகின்றன என தகவல்கள் வலைத்தளங்களில் விளம்பரங்களாக வந்துகொண்டு இருப்பதை நானும் கவனித்துள்ளேன். இதனைப் பார்த்து சாமானிய மக்கள், தங்களிடம் பழைய நாணயங்களை வைத்துக் கொண்டு ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. 1950-ம் ஆண்டு தொடக்கத்தில்தான் இந்தியா நாணயங்களை அச்சடிக்க தொடங்கியது. 1964-ல் இருந்துதான் நினைவார்த்த நாணயங்களை அச்சடிக்க தொடங்கியது.
நினைவார்த்த நாணயங்கள் என்பது தலைவர்களின் உருவங்கள் அல்லது வரலாற்றுச் சம்பவங்களை நினைவுகூரும் வகையில் அடையாளம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் ஆகும். இதுபோன்ற நாணயங்களைதான் விலையுயர்ந்தவை என்ற போலித் தகவல்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதுபோன்றவை நம்மிடம் அன்றாடம் புழங்கக்கூடிய எளிதில் கிடைக்க கூடியவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
786 போன்ற லக்கி எண் கொண்ட ரூபாய் நோட்டுகள் கிடைப்பது அரிதானவை என வதந்தி பரப்புகிறார்கள். 786 எனும் சீரியல் கொண்ட ஒரு ரிம்மில் 1000 ரூபாய் நோட்டுகளும் 786 என்ற எண்ணிலே தொடங்கும். எனவே, இது எப்படி அரிதானவை ஆகும். இதேபோல், மாதா வைஷ்ணவி தேவி உருவம் பொறிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயம் குறித்தும் இதுபோல் வதந்தி பரப்பப்படுகிறது. கடவுளின் உருவத்தை நாணயத்தில் வெளியிட்டு வந்த முதல் நாணயம் இது மட்டுமே. ஆனால், இதுபோன்ற பலகோடி மதிப்புள்ள மாதா வைஷ்ணவி தேவி உருவம் பொறிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயத்தை ஆர்பிஐ அச்சடித்து வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு இந்தியர்களின் மத்தியிலும் மிக மிக சாதாரணமாக புழங்கப்பட்டு வரும் இந்த 10 ரூபாய் நாணயம் எப்படி ரூ.10 லட்சம் விலை போகும். 2012-ல் கடவுளின் உருவம் பொறித்த 25 ரூபாய் வெள்ளி நாணயத்தை ஆர்பிஐ வெளியிட்டது. முழுக்க முழுக்க வெள்ளியால் ஆன இந்த நாணயத்தின் மொத்த மதிப்பே 3600 ரூபாய் மட்டுமே. அப்படி இருக்கையில் எப்படி அந்த நாணயம் ரூ.10 லட்சம் விலை போகும். எனவே, இதுபோன்று வரும் தகவல்கள் திட்டமிட்ட மோசடியே. நாணய சேகரிப்பு என்றால் என்ன என்பதை ஒவ்வொருவரும் தெரிந்துகொண்டால், மோசடி செயல்களிலிருந்து தப்பிக்கலாம்" என்று விரிவாக பேசியிருக்கிறார்.
- மலையரசு