சிறப்புக் களம்

பிரைவசி சிக்கல்கள், அத்துமீறல்கள்... ஆனாலும், 'கிளப்ஹவுஸ்' சேவையில் அலைமோதுவது ஏன்?

பிரைவசி சிக்கல்கள், அத்துமீறல்கள்... ஆனாலும், 'கிளப்ஹவுஸ்' சேவையில் அலைமோதுவது ஏன்?

நிவேதா ஜெகராஜா

கிளப்ஹவுசிலும் விவாதம் தூள் பறக்கிறது. 'கிளப்ஹவுஸ்' தொடர்பான விவாதமும் அனல் பறக்கிறது. இன்னொரு பக்கம் கிளப்ஹவுஸ் பெயரின் தமிழாக்கம் தொடர்பான விவாதமும் தீவிரமாக நடைபெறுகிறது. ஆக, இந்தியர்கள் மத்தியில் இந்த செயலி அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. இந்தளவுக்கு இது பிரபலமடைந்ததன் பின்னணியை நாம் யோசிக்க வேண்டியது அவசியம்.

'கிளப்ஹவுசில் இணைந்திருக்கிறீர்களா?' என கேட்பது அல்லது 'கிளப்ஹவுசில் சந்திப்போம்' என்று சொல்வதோதான் சமூக ஊடக உரையாடலில் பலரும் சொல்லும் விஷயமாக இருக்கிறது. இந்த பரபரப்பு காரணமாக, இதுவரை கிளப்ஹவுஸை அறியாதவர்களும் அதில் இணைய ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவில் அறிமுகமான வேகத்தில் 'கிளப்ஹவுஸ்' இந்த அளவு அமோக வரவேற்பை பெற என்ன காரணம்?

கிளப்ஹவுஸில் ஒலி அறைகளை உருவாக்கிக் கொண்டு உரையாடலில் ஈடுபட வாய்ப்பிருப்பதும், எல்லைகள் இல்லாத அரட்டை அரங்கின் எண்ணற்றை அறைகளில் விரும்பியவற்றில் நுழைந்து விவாதத்தில் பங்கேற்க வாய்ப்பிருப்பதும் 'கிளப்ஹவுஸ்' சேவையின் ஈர்ப்புடைய அம்சமாக இருக்கின்றன.

எனினும், 'கிளப்ஹவுஸ்' வெற்றிக்கான காரணங்களை அலசி ஆராய்வதை விட, இந்த சேவை மீது நம்மவர்கள் ஏன் இத்தனை தீவிர ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதை விவாதத்திற்குள்ளாக்குவதே பொருத்தமாக இருக்கும்.

ஏனெனில், மேற்குலகில் 'கிளப்ஹவுஸ்' ஏற்படுத்திய பரபரப்பு அலை அடங்கிவிட்ட நிலையில், அந்த சேவையின் தொடர் வளர்ச்சிக்கான சாத்தியங்கள் குறித்த கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்த நிலையில்தான் இந்தியா உள்ளிட்ட கீழை நாடுகளில் 'கிளப்ஹவுஸ்' அலை வீசத் துவங்கியிருக்கிறது.

'கிளப்ஹவுஸ்' சேவையில் ஆரம்ப அறிமுகத்திற்கு பிறகு எந்த புதுமையும் சாத்தியமாகவில்லை என்றும், அறிமுக நிலையிலேயே கூட அது இயல்பான வளர்ச்சியை பெறாமல் ஊதிப் பெரிதாக்கப்பட்ட பலூனாக வியூகபூர்வமான வளர்ச்சியை பெற்றதாகவும் விமர்சனங்கள் உள்ளன.

'கிளப்ஹவுஸ்' ஐபோன்களுக்கான செயலியாக, அழைப்பின் பேரில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய செயலியாக அறிமுகமானது, அதற்கு ஒரு பிரத்யேக தன்மையை ஏற்படுத்தி கவனத்தை ஈர்த்ததாக சொல்லப்படுகிறது.

பேச்சு வடிவில் மட்டும் உரையாட வாய்ப்பளிக்கும் சமூக ஆடியோ சேவை எனும் புதுமையான அம்சத்தோடு, டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் மற்றும் பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க், இதன் அறைகளில் தோன்றி விவாதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த அம்சங்களை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு முதலீட்டாளர்கள் பணத்தை இறைத்து, இதை அவசரமாக வளர்த்தெடுத்ததகாவும் விமர்சனம் இருக்கிறது.

பிரைவஸி பாலிஸி எப்படி?

இவைத் தவிர, இந்த செயலி பயனாளிகளின் தனியுரிமையையும், தரவுகளையும் கையாளும் விதம் தொடர்பான விமர்சனங்கள்தான் முக்கியமாக கவனிக்க வேண்டியவை. அறிமுகமானதுபோது இந்த செயலி தனியுரிமைக் கொள்கை இல்லாமலே வெளியானதாக கூறப்படுவது அதிர்ச்சி அளிக்கலாம்.

அதுமட்டும் அல்லாமல், இந்த செயலி புத்திசாலித்தனமான வடிவமைப்பு உத்திகளை (இவை டார்க் பேட்டர்ன் என அழைக்கப்படுகின்றன), கையாண்டு பயனாளிகளை மயக்கியதாகவும் சொல்கின்றனர். மேலும், அல்காரிதம் மூலமும் வலை விரித்து பயனாளிகளை இந்த சேவையை விரும்பச் செய்துள்ளனர்.

ஆக, 'கிளப்ஹவுஸ்' சேவையை பயனாளிகள் இயல்பாக விரும்பவில்லை. அந்த நிலைக்கு அவர்களை அறியாமல் உட்படுத்தப்பட்டதாக ஒரு கருத்து இருக்கிறது.

பின்னர் 'கிளப்ஹவுஸ்' தனியிரிமைக் கொள்கையை வெளியிட்டாலும், அதில் பயனாளிகளின் தரவுகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை என்கின்றனர். முதலில் அதில் நடைபெறும் உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்றனவே தவிர, அதற்கு 'என்கிரிப்ஷன்' காப்பு இல்லை. மேலும், இந்த உரையாடல்கள் சீனாவில் உள்ள நிறுவனத்திற்கு சேமிக்க அனுப்பி வைக்கபடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'கிளப்ஹவுஸ்' பயனாளிகளின் செல்போன் தொடர்புகளை அணுகும் விதமும் அத்துமீறலாக இருப்பதகாவே குற்றம்சாட்டுகின்றனர். பயனாளிகள் தொடர்புகளை அழைக்க விரும்பாத நிலையிலும், அவர்கள் தொடர்புகளுக்கு தகவல் அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஆரம்ப புகாருக்கு பிறகு தொடர்புகளை அணுகும் விதம் சற்று கட்டுப்படுத்தப்பட்டாலும், இன்னமும் பயனாளிகளின் தனியுரிமை என்பது கவலைக்குறியதுதான். பயனாளிகள் கையில் முழு கட்டுப்பாடு இல்லை என்பதுதான் உண்மை.

'கிளப்ஹவுஸ்' அறைகளில் நடைபெறும் இடையூறுகள் மற்றும் அத்துமீறல்களை கையாளவும் போதிய கட்டுப்பாடுகள் அளிக்கப்படவில்லை என்கின்றனர். அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்னரே இந்த விமர்சனங்கள் எல்லாம் எழுந்தாலும், நிறுவனம் இவை குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் விரிவாக்க வளர்ச்சியில் கவனம் செலுத்தி இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வந்திருக்கிறது.

ஆரத்தழுவிக்கொண்டிருப்பது ஏன்?

ஆண்டராய்டு போன்களில் அறிமுகம் செய்யப்பட்டு, 'கிளப்ஹவுஸ்' இந்திய அளவில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கிளப்ஹவுசை பலரும் புதுமையாக பயன்படுத்தி வந்தாலும், தனியுரிமை மீறல்கள் தொடர்பான புகார்கள் உள்ள நிலையில், ஒரு செயலியை இத்தனை தீவிரமாக இந்தியர்கள் ஆரத்தழுவிக்கொண்டிருப்பது ஏன்?

தனியுரிமை மீறல்கள், தரவுகள் சேகரிப்பு தொடர்பான குற்றச்சாட்டுகள் பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி செயலிகள் மீது உள்ளவைதான் என்றாலும், இந்த விவாதங்களில் இருந்து எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளாமல் பழைய தவறுகளை ஒரு புதிய செயலி செய்வதை எப்படி புரிந்துகொள்வது என தொழில்நுட்ப வல்லுனர்கள் கேட்கின்றனர்.

இந்த விமர்சனங்களுக்கு 'கிளப்ஹவுஸ்' என்ன பதில் அளிக்க உள்ளது என்பது தெரியவில்லை. விமர்சனங்களை தொடர்ந்து அலட்சியம் செய்து வளர்ச்சி வலை விரிப்பதில் மட்டும் கவனம் செலுத்துமா என்பதும் தெரியவில்லை.

கிளப்ஹவுசின் உத்தி என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், கேள்விக்கு உட்படுத்தாமல் இந்த செயலியை நம்பகமனதாக ஏற்றுக்கொண்டது ஏன் என்பதே நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.

ஒரு செயலி வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தும்போது, அதன் அடிப்படைத் தன்மை, தனியிரிமை பாதுகாப்பு, பயனாளிகளுக்கான கட்டுப்பாடு அம்சங்கள் போன்றவை பற்றி யோசிக்காமலே அந்த செயலியில் அவசரமாக இணைவது ஏன்?

கிளப்ஹவுசின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் சொல்வது என்ன என எத்தனை பேர் படித்துப் பார்த்துள்ளனர். அந்த செயலியில் இருந்து முழுவதுமாக வெளியேறுவது சாத்தியம் இல்லை என சொல்லப்படுவதை அறிவார்களா? இந்த செயலி சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதை எப்படி புரிந்துகொள்வது?

'கிளப்ஹவுஸ்' சேவை உண்மையில் அளிக்கும் புதுமை என்ன? - பாட்காஸ்டிங் (Podcasting) எனப்படும் இணைய வானொலி சேவையின் சமூக ஊடக நீட்டிப்பாக தானே இது அமைகிறது. பாட்காஸ்டிங் மூலம் நீங்களே உங்களுக்கான வானொலி சேவை மற்றும் உரையாடல் சேவைகளை நடத்திக்கொள்ளலாமே. இந்த வசதியில் இல்லாத ஈர்ப்பு கிளப்ஹவுசில் மட்டும் ஏன்?

மேலும், ஆடியோவுக்கான யூடியூப் என சொல்லப்படும் சவுண்ட்கிளவுட் சேவையிலும், ஆடியோ பதிவேற்றம், உரையாடல் போன்றவற்றை மேற்கொள்ளலாமே. இந்த சேவைகளில் பயனாளிகள் அதிக கட்டுப்பாடு மற்றும் சுதந்திரத்தை பெற்றிருக்கலாம் என்பது கவனத்திற்குரியது.

பாட்காஸ்டிங், சவுண்ட்கிளவுட் போன்ற சேவைகளுக்கு எல்லாம் பாராமுகம் காட்டிய நம்மவர்கள் 'கிளப்ஹவுஸ்' சேவையில் சொக்கிப்போயிருப்பதற்கு என்ன காரணம்?

இவ்வளவு ஏன்... நம் நாட்டிலேயே கூட 'லெஹர்' எனும் செயலி சில ஆண்டுகளாக இதுபோன்ற வசதியை வழங்கி வருகிறதே. அண்மையில் சிங்காரி செயலி, பயர்சைடு எனும் சேவையை அறிமுகம் செய்ததே.

இப்படி பல கேள்விகள் இருந்தும், ஒரு செயலியை சீர்தூக்கிப் பார்க்க கூட முயற்சிக்காமல் அதில் ஐக்கியமாவதை என்னவென சொல்வது. இந்த செயலி முதன்மை உத்தியாக கருதிய 'தவறவிடும் அச்சம்' (Fear of missing out) எனும் உணர்வுக்கு இறையாகி விட்டதாக எடுத்துக்கொள்ளலாமா?

ஒரு புதிய சேவை அல்லது செயலி அறிமுகம் ஆகும்போது, அதன் தன்மை என்ன? அது அளிக்கும் பயன்பாடு என்ன? ஏற்கெனவே அதற்கு நிகரான சேவைகள் உள்ளனவா? இதை பயன்படுத்துவதால நமக்கு கிடைப்பது என்ன? - இதுபோன்ற கேள்விகளை கேட்டுக்கொள்வது அவசியம்தானே.

கூகுள், பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட முன்னணி இணைய நிறுவனங்கள் நம்முடைய தரவுகளை வைத்துக்கொண்டுதான் விளம்பர வருவாயை அள்ளிக்குவிக்கின்றன. இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடர்பாக எண்ணற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், பயனாளிகளாகிய நாம் இன்னும் விழிப்புணர்வுடன் இருப்பதுதானே முறை.

'கிளப்ஹவுஸ்' போன்ற சேவைகள் அறிமுகமாகட்டும். அவை புதுமை மற்றும் பயனாளிகளை மதிக்கும் தன்மையால வளர்ச்சி பெறட்டும். இதை நிறுவனங்களுக்கு உணர்த்துவது நம் கைகளிலும்தான் இருக்கிறது.

- சைபர்சிம்மன்