சிறப்புக் களம்

அச்சுறுத்தும் நாய்கள் ... பயத்தில் பதுங்கி பதுங்கி செல்லும் மக்கள்...!

webteam

பல காரணங்களால் இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. குறிப்பிட்ட வேகத்தில் சென்று கொண்டிருக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சின்ன சின்ன குறுக்கீடுகள் கூட கவனச்சிதறலை உண்டாக்கி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றன. குறிப்பாக சாலையில் திரியும் நாய்களால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த தீபாவளி அன்று மதுரையில் 3 பேர் நாய்களால் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர். புள்ளிவிவரப்படி, கடந்த 6 மாதங்களில் மதுரையில் தெரு நாய்களால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேரின் உயிர்களை நாய்கள் பறித்துள்ளன.

தெருநாய்களால் ஏற்படும் சாலை விபத்துகள் மதுரை நகர்புறங்களைவிட கிராம புறங்களிலே அதிகமாக உள்ளது என்பதும் இந்தத் தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. ஏனென்றால் கிராம புறங்களில் சாலை போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்படுவதால் இருசக்ர வாகன ஓட்டுநர்கள் வேகமாக வாகனத்தை இயக்கும்போது, நடுவில் தெருநாய்கள் வந்து விபத்து ஏற்படுகிறது. மேலும் இந்த விபத்துகள் முறையாக பதியப்படுவதும் இல்லையென்பதால், இந்த வகை விபத்துகள் குறித்து சரியான தரவுகள் கிடைப்பது கடினம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இன்றும் தெரு நாய்களால் பல பாதிப்புகளை வாகன ஓட்டிகள் சந்தித்து வருகின்றனர். தெருவுக்கு தெரு கூட்டம் கூட்டமாக திரியும் நாய்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவது மட்டுமின்றி, நடந்து செல்பவர்களையும், தனியாக செல்லும் குழந்தைகளையுமே அச்சுறுத்தி வருகின்றன.

நேரடி அச்சுறுத்தல் மட்டுமின்றி, நாய்களால் ரேபிஸ் போன்ற நோய்களும் பரவும் என்பதால் கூடுதல் பாதுகாப்பு தேவை என பொதுமக்கள் கருதுகின்றனர். 'ரேபிஸ் இல்லா நகரம்' என்ற விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி கடந்த 4 மாதங்களில்  42ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசிகளை போட்டுள்ளது. 

அண்ணா நகர், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், அம்பத்தூர், ஆலந்தூர், மாதவரம் என மண்டல வாரியாக சென்னை பிரிக்கப்பட்டு நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்துக்கும் கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மாதவர மணடலத்தில் 8846 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தெருநாய்களின் அச்சுறுத்தல் இருந்தால் பொதுமக்கள் 1913 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. புகார்களை பெற்றுக்கொள்ளும் மாநகராட்சி தெருநாய்களுக்கு கருத்தடை செய்வது, ரேபிஸ் போன்ற நோய்கள் பரவாமல் இருக்க தடுப்பூசி போடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாய்களின் உயிர்களுக்கு ஆபத்து வராமல் அதே நேரம் பொதுமக்களுக்கும் நாய்களால் தொல்லை ஏற்படாமல் இருக்கவே மாநகராட்சி தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.