கேரளாவில் 50% இருக்கை அனுமதியுடன் தியேட்டர்கள் திறக்கப்படும் அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில், எந்த பெரிய படங்களும் முதல் வாரத்தில் வெளியாகாது என்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னணி குறித்து பார்ப்போம்.
கேரளாவில் கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. குறைந்து வரும் பாதிப்புகளுக்கு ஏற்ப, சமீபத்தில் சில தளர்வுகளை அறிவித்தது கேரள அரசு. அதன்படி, வரும் 25-ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படும் என்ற அறிவிப்பும் அடக்கம். மலையாள திரையுலகம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அறிவிப்பு இது. அதனால் அரசு அறிவித்ததும் இதற்கு நிறைய வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எந்த வரவேற்பும் இல்லை.
மேலும், படங்களை வெளியிடவும் எந்தப் பெரிய நடிகர்களும் முன்வரவில்லை. மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிப்பில் பல படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன. அப்படி இருந்தும் யாரும் படத்தை வெளியிட முன்வராததன் பின்புலம் தியேட்டர் திறப்பில் கேரள அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள்தான்.
தியேட்டர்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ள கேரள அரசு, தியேட்டர் ஊழியர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. அதேபோல், பார்வையாளர்களும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே தியேட்டர்களுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளது.
இந்த நிபந்தனையால் ரசிகர்களும், தியேட்டர் அதிபர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன் இது படங்கள் வெளியீட்டில் இருக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதியே படத்தின் வசூலைப் பெரிதும் பாதிக்கும். இதில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே படம் பார்க்க அனுமதி என்றால், ரசிகர்கள் வரவு என்பது இல்லாமல் போய்விடும் என்கிறார்கள் மலையாள திரையுலகினர். மேலும், தடுப்பூசி போட்டவர்களை கண்டறிந்து தியேட்டருக்குள் அனுமதிப்பதும் சவாலான ஒரு விஷயம்.
இதேபோல் தியேட்டர்கள் திறக்க சொல்லியுள்ள 25-ஆம் தேதி திங்கள்கிழமை என்பதால் ரசிகர்கள் வரவு முற்றிலும் இல்லாமல் இருக்கும். இது போதாது என்று தியேட்டர் அதிபர்கள் மின் கட்டண பாக்கியை தள்ளுபடி செய்வது, டிக்கெட்டுகளுக்கான கேளிக்கை வரியை ரத்து செய்வது போன்ற கோரிக்கைகளை பரிசீலிக்க சொல்லி போர்க்கொடி தூக்கியுள்ளன. ஆனால், அரசு தள்ளுபடிக்கு வாய்ப்பில்லை என்று சொல்லியுள்ளது. இதனால், சில தியேட்டர் அதிபர்கள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதுபோன்ற காரணங்களால் வசூல் பாதிக்கப்படும் என்பதால் பெரிய படங்கள் ஏதும் முதல் வாரத்தில் ரிலீசாகவில்லை. 'ஜோசப்' மற்றும் 'ஜகமே தந்திரம்' புகழ் நடிகர் ஜோஜு ஜார்ஜும் பிரிதிவிராஜ் இணைந்து நடித்துள்ள 'ஸ்டார்' என்கிற படம் மட்டுமே 25-ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய பட்ஜெட் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகள் காரணமாக வெளியிடவில்லை. நடிகர் மோகன்லாலின் 'மரக்கையர்: அரபிகடலின்டே சிம்ஹம்' மற்றும் 'ஆராட்டு' என்ற இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.
அதிலும், 'மரக்கையர்: அரபிகடலின்டே சிம்ஹம்' 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தை இந்த சூழ்நிலையில் வெளியிடுவது நிதி ரீதியாக சாத்தியமானதல்ல என்று கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் (KFPA) தலைவர் எம்.ரஞ்சித் தெரிவித்துள்ளார். என்றாலும், தற்போது சூழ்நிலை மாற அரசு தனது நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மலையரசு
| வாசிக்க > எஸ்.கே-வும் எம்.ஜி.-யும்... தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனின் இடம் எது? - ஒரு பார்வை |