தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழின் உச்ச நடிகர்களான அஜித், விஜய் வாக்களிக்க சென்றபோது நடந்த 'சம்பவங்கள்' நம்மில் யாவரும் அறிவர். அதேபோல், மலையாளத்தின் உச்ச நடிகர்கள் தங்களது வாக்குகளை கேரளாவில் பதிவு செய்தபோது ஏதேனும் சலசலப்புகள் ஏற்பட்டதா? - இந்தக் கேள்விக்கான பதில், நிச்சயம் நம்மில் சில புரிதல்களை ஏற்படுத்தக் கூடும்.
தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளான நேற்று திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் வந்த அஜித்திடம் ரசிகர் ஒருவர் புகைபடம் எடுக்க முயற்சித்தார். அப்போது கோபமடைந்த அஜித், அந்த ரசிகரின் போனை பிடுங்கி அந்த ரசிகரை அங்கிருந்து வெளியேறுமாறு கூறினார். சிறிது நேரம் கழித்து அந்த ரசிகரை எச்சரித்த அவர், போனை அவரிடம் ஒப்படைத்தார். இறுதியாக, தான் கண்டிப்புடன் நடந்தமைக்கு ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்தார்.
அதேபோல யாரும் கணித்திராத வகையில் தனது நீலாங்கரை வீட்டிலிருந்து சைக்கிளிலேயே வாக்களிக்க சென்று, ரசிகரிகளின் கூட்ட நெரிசலில் சிக்கினார் விஜய். அதன் பின்னர் ஒரு வழியாக வாக்களித்த விஜய், அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தபடி வீட்டிற்குச் சென்றார். அப்போதும் ஏராளமான ரசிகர்கள் இருசக்கர வாகனத்தில் செல்ஃபி எடுத்தவாறே அவரை வீடு வரை பின் தொடர்ந்தனர். இந்த இரண்டு சம்பவங்களிலும் கவனிக்க வேண்டிய விஷயம், பிரபலங்களிடம் பொது இடங்களில் ரசிகர்கள் நடந்து கொண்ட விதம்.
பிரபலங்கள் தனது ஜனநாயக கடமையை ஆற்றும்போது அவர்கள் மீது அன்பு செலுத்துவது போல ரசிகர்கள் இவ்வாறு நடந்துகொண்டது முகம் சுழிக்கவைக்கும் நிகழ்வாக அமைகிறது. ஒவ்வொரு முறையும் பிரபலங்கள் வெளியே வரும்போது இது மாதிரியான சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகி வருகிறது என்று சிலர் வலைதளங்களில் கவலை தெரிவிப்பதைக் காண முடிகிறது. இப்படி கவலை தெரிவிப்பவர்கள் கூடவே இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார்கள். அது கேரளா மக்களுடன் உடனான ஒப்பீடு.
'கேரளத்தில் இந்த உச்ச நடிகர்கள் தொழுகைக்கு போனாலும், வாக்களிக்கப் போனாலும் ரசிகர்கள் யாரும் தொல்லை தருவதில்லை. எவ்வளவு பெரிய நட்சத்திரங்களாக இருந்தாலும் வாக்குச்சாவடியில் அவர்கள் நிற்கும்போது யாரும் அவர்களை கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், தமிழகத்தில் நிலைமை அப்படியில்லை. நடிகர்கள் எங்கு சென்றாலும், அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் செல்பி எடுக்கவே தனிக்கூட்டம் இருக்கின்றது" என்று ஒப்பீடு செய்கிறார்கள்.
இவர்களின் ஒப்பீடு ஓரளவுக்கு உண்மைதான். அதை ஒரு சம்பவத்தின் மூலம் விளக்க விரும்புகிறேன். இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகளுக்கு முன்பு. மலையாள நடிகை காவ்யா மாதவன் திரைத்துறையில் உச்சத்தில் இருந்தபோது நடந்ததுதான் இந்த சம்பவம். ஒருமுறை நடிகை காவ்யா மாதவன் வாக்களிக்க செல்லும்போது, திரைநட்சத்திரம் நினைப்பில் காரில் இருந்து இறங்கியதும் நேராக வாக்குச்சாவடிக்கு சென்றுவிடுவார். ஆனால், வரிசையில் காத்திருந்த மக்கள் 'எல்லோரும் சமம்' என்பதை உணர்த்துவதற்காகவே வரிசை. வரிசையில் நின்று வாக்களிக்க வற்புறுத்தி காவ்யா மாதவனை வரிசையில் நிற்க வைத்துவிடுவார்கள்.
மேலும், வரிசையில் நிற்கும் அவரை ஒரு ஆள்கூட சட்டை செய்யமாட்டார்கள். இந்த காணொளியை நம்மில் பலர் பார்த்திருப்போம். இதுதான் கேரளம். அரசியல்வாதியாக இருந்தாலும், இல்லை சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், அரசியல் என்று வந்துவிட்டால் அவர்கள் யாரையும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதிலும் வாக்குச்சாவடி போன்ற பொது இடங்கள் என்று வந்துவிட்டால், அவர்களுக்கும் எல்லோரும் ஒன்றுதான். அதற்கு உதாரணம்தான் காவ்யா மாதவன் சம்பவம். காவ்யா மாதவன் மட்டுமல்ல, அவரின் கணவரும் நடிகருமான திலீபு, மலையாளத்தின் உச்ச நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் என யாராக இருந்தாலும் வரிசையில் நின்று வாக்களிப்பாளர்கள். அவர்களை மக்கள் யாரும் செல்ஃபி, ஆட்டோகிராப் என்று எந்த தொந்தரவும் செய்யமாட்டார்கள்.
அதற்காக கேரள மக்கள், சினிமா நட்சத்திரங்களை ஆராதிக்க மாட்டார்கள் என்று நினைத்துவிட வேண்டாம். சினிமாவை, சினிமா நட்சத்திரங்களை கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். ஆனால், பொது பிரச்னைகள், பொது நிகழ்வுகளில் நட்சத்திரங்கள் கலந்துகொள்ள வருகிறார்கள் என்றால், அவர்களுக்கான பிரைவசி, நடிகர்களின் அனுமதியுடன் செஃல்பி போன்று செயல்படுவார்கள். அதேபோல் அரசியலிலும் எவ்வளவு பெரிய நட்சத்திரம் போட்டியிட்டாலும், பிடிக்காவிட்டால் மக்கள் அவர்களை கொஞ்சம் கூட சட்டை செய்யமாட்டார்கள். நடிகர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள். அவர்கள் பின்னாலும் செல்ல மாட்டார்கள்.
அதன்படியே பெரிய ஆரவாரம் இல்லாமல் மலையாள நடிகர்கள் இம்முறையும் கேரளாவில் வாக்குகள் செலுத்தினர். ஃபஹத் ஃபாசில், டோவினோ தாமஸ் என சூப்பர் ஸ்டார்கள் முதல் கேரக்டர் ஆர்டிஸ்ட் வரை அமைதியாக வாக்களித்து சென்றார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த முறை அங்கு கருப்புப் புள்ளி அமைந்துவிட்டது. மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நேற்று வாக்களிக்க வந்திருந்தார். அப்போது ஊடகத்தினர் கூட்டமாக அவரை சூழ்ந்துகொண்டு படம்பிடிக்க, அருகில் இருந்த வாக்காளர்களுக்கு தொந்தரவு ஏற்பட்டது. இதனைக் கண்டித்து அங்கிருந்த பாஜக வேட்பாளரின் மனைவி போராட்டம் நடத்தினார். இதைத் தாண்டி ரசிகர்கள் தொந்தரவு உள்ளிட்ட எந்த சம்பவங்களும் நேற்றைய வாக்குப்பதிவு நாளில் கேரளாவில் நடக்கவில்லை என்பது குறிப்பித்தக்கது.
- மலையரசு