சிறப்புக் களம்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: கடவுளின் எளிமையைச் சொல்லும் குடில்கள்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: கடவுளின் எளிமையைச் சொல்லும் குடில்கள்

webteam

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் குடில் அமைக்கும் வழக்கம் இருந்து வருகிறது.

கிறிஸ்தவர்கள் தங்களின் மீட்பராக கருதும் இயேசு கிறிஸ்து ஒரு தொழுவத்தில் பிறந்ததாக பைபிள் கூறுகிறது. இதை குறிக்கும் வகையில் கிறிஸ்தவ தேவாலயங்களிலும், கிறிஸ்தவர்களின் வீடுகளிலும் வண்ணமயமான குடில்கள் அமைக்கப்படுவதைப் பார்க்க முடியும். இதுபோல குடில் அமைக்கும் வழக்கத்தை தொடங்கி வைத்தவர் புனித பிரான்சிஸ் அசிசியார்தான் என கூறப்படுகிறது. போப்பின் அனுமதியுடன் 1223 ஆம் ஆண்டு அவர் முதல் முதலில் குடில் அமைத்ததாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

ஆனால் சிலைகளுக்கு பதில் நிஜமான மனிதர்களையும், விலங்குகளையும் கொண்டே அவர் முதல் குடிலை வடிவமைத்தார். அந்த காலங்களில் கத்தோலிக்க தேவாலயங்களில் வழிபாடு லத்தீன் மொழியிலேயே இருந்தது. மக்களுக்கு புரியும் வகையில் கிறிஸ்துவின் பிறப்பை எடுத்து உரைப்பதற்காக பிரான்சிஸ் நாடகம் போன்ற இந்த குடில் வடிவமைப்பை தேர்ந்தெடுத்தார். இதன் பின்னர் இந்த பழக்கம் மற்ற பகுதிகளுக்கும் விரைவாக பரவியது. காலப்போக்கில் நிஜ மனிதர்களுக்கு பதிலாக சிலைகளை வைக்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. இன்று தங்கள் வீடுகளிலும் இயேசு கிறிஸ்து பிறந்திருக்கிறார் என குறிக்கும் வகையிலேயே கிறிஸ்தவர்கள் குடில் அமைக்கும் பழக்கத்தை தொடர்ந்து வருகின்றனர்.

குடிலில் அடிப்படையாக இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வகையில் குழந்தை இயேசு, அவரது அன்னை‌ மேரி, தந்தை ஜோசப் ஆகியோரின் சிலைகள் பிரதானமாக இடம்பெற்றிருக்கும். இதைத் தவிர இயேசுவின் பிறப்பை அறிந்து அங்கு கூடிய ஆட்டிடையர்கள் மற்றும் அவர்களது விலங்குகளின் சிலைகளும் இடம்பெற்றிருக்கும். இயேசுவின் பிறப்பை அறிந்து அவருக்கு பரிசுகளுடன் வந்த மூன்று ஞானியரின் உருவ பொம்மைகளும், இயேசுவின் பிறப்பை அறிவித்த தேவதூதன் கேபிரியலின் உருவசிலையும் குடிலில் இடம்பெறும். இவை அவரவர் வசதிகேற்ப விதவிதமாக அமைக்கப்படுகின்றன.