சிறப்புக் களம்

ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி: அச்சத்தில் ஊரடங்கை அமல்படுத்திய சீனா- புதிய வைரஸ் காரணமா?

ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி: அச்சத்தில் ஊரடங்கை அமல்படுத்திய சீனா- புதிய வைரஸ் காரணமா?

நிவேதா ஜெகராஜா

2020 தொடக்கத்தில் கொரோனா பரவல் தொடங்கிய நேரத்தில் அதுசார்ந்த பரபரப்பும் பயமும் நமக்கு இருந்த அளவுக்கு, இப்போது நமக்கு இல்லை. சொல்லப்போனால் இன்று நாம் எல்லோரும் கொரோனாவோடு வாழ பழகிவிட்டோம். பள்ளிகள் எல்லாம் திறந்தாச்சு, அலுவலகங்களும் திறக்கத் தொடங்கிவிட்டன. இப்படியான சூழலில்தான் சீனாவில் கொரோனா பரவல் அதிகமிருக்கிறது எனக்கூறி, மீண்டும் பொதுமுடக்கம் அமலாகியுள்ளது. 17.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனாவில் பீஜிங்கில் நேற்று முதல் முழு பொதுமுடக்கம் அமலாகியுள்ளது.

சீனாதான் உலகளவில் 2019-ல் முதன்முதலாக கொரோனா உறுதிசெய்யப்பட்ட இடமென்பது, அனைவரும் அறிந்த விஷயம்தான். சீனாவிலுள்ள மத்திய வூஹான்தான் அனைத்துக்கும் தொடக்கமாக இருந்தது. தற்போது வரை வூஹானில் 4,636 இறப்புகள் பதிவாகி உள்ளது. சீனாவின் கொரோனா உறுதியானோர் எண்னிக்கையை அறிய உதவும் வார்ல்டோமீட்டரை (Worldometer) பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1,436 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. இதைக் கேட்கும் நாம், `வெறும் 1,436 பேருக்குதானே உறுதியாகியிருக்கு... இதுக்கு எதுக்குங்க லாக்டவுன்? ஒருவேளை அங்கு புதிய திரிபு கொரோனா எதுவும் பரவுகிறதா? அதனால்தான் சீனா இவ்வளவு கவனமாக இருக்கிறதா?’ என்று பலரும் கேட்க நினைக்கலாம். இதற்கு பதிலளிக்கும் வகையில் சீன அதிகாரிகள் தரப்பில், `பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிக மிக குறைவுதான் என்பது சரிதான். ஆனால் நாங்கள் எங்கள் நாட்டில் ஒரேயொருவருக்கு கொரோனா உறுதியானாலும் கூட, மிக மிக கவனமாக அங்கே முழுமுடக்கத்தை அமல்படுத்துவோம். அப்படியிருக்கையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இப்போது தொற்று உறுதி செய்யப்படுத்தப்பட்டிருக்கிறது. எப்படி விடமுடியும்?’ என்றுள்ளனர்.

சீனாவில் இப்படி சொல்லப்பட்டிருக்கும் போதிலும், ஹாங்காங்கில் சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிப்பது என்ற அடிப்படை கொரோனா தடுப்பை அமல்படுத்துவது பற்றியே தங்களுக்கு எவ்வித ஐடியாவும் இல்லையென்று அதன் அதிபர் கேரி லாம் தெரிவித்திருக்கிறார். இதன் பின்னணியாக `2020-ம் ஆண்டு கொரோனா தொடங்கியதிலிருந்து உலகளாவிய நிதி மையம் ஏற்கெனவே கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், பொதுமுடக்கத்தை இனியும் அமல்படுத்தினால் பொருளாதாரம் மேலும் இறுக்கப்பட்டுவிடும்’ என கேரி லாம் கூறியிருக்கிறார்.

இதுபோன்ற காரணிகள், சீனாவுக்கும் உள்ளதென்றாலும் கூட அங்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட என்ன காரணம் என்று எங்களுக்கும் கேள்வி எழுந்தது. இதன் பதிலை அறிய, முதலில் சீனாவில் எங்கெல்லாம் கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளன என்பதை அறிந்தோம். கடந்த வெள்ளிக்கிழமை முதல், சீனாவில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அது சீனாவின் தொழில் நகரமான 9 மில்லியன் மக்கள் நிறைந்த சாங்சுன்னில் இருந்து தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பீஜிங்கில் மக்கள் வெளியில் வரக்கூடாது என்ற அறிவிப்பும்; ஷாங்காய் மாகாணத்தில் பள்ளிகள் இயங்கக்கூடாதென்ற அறிவிப்பும் வெளியானது.

சீனாவை பொறுத்தவரை, அங்கு கொரோனாவை கையாள்கையில் `முற்றிலும் சகிப்பு தன்மையற்ற’ நிலையில் இருக்க வேண்டும் என்பதே அந்நாட்டு ஆட்சியாளர்களின் மனநிலை. இதனால் ஒரேயொருவருக்கு கொரோனா உறுதியானாலும்கூட, அவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்துவதை அந்நாட்டு அரசு வழக்கமாக கொண்டுள்ளது. இந்த வழக்கம், கொரோனா பரவல் தொடங்கிய நாளிலிருந்து சீனாவில் அமலில் இருக்கிறது. அப்போதிருந்தே, `அதிகளவு கொரோனா பரிசோதனை, பயணக் கட்டுப்பாடுகள், பொதுமுடக்கம்’ உள்ளிட்ட சீரிய நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகின்றது. நாட்டின் எல்லைகளை மூடுவது, கொரோனா கட்டுப்பாட்டில் மிக முக்கிய அம்சமாக சீனாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகையில் அங்கிருக்கும் மக்கள் உணவு, மருத்துவம், ரேஷன் பொருட்களுக்கு அரசை சார்ந்து இயங்குவர்; அரசும் அதற்கு ஒத்துழைக்கும். இந்தளவுக்கு சீனா கொரோனா விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பதால்தான், ஒலிம்பிக் போட்டிக்கு பல நாடுகளிலிருந்து விளையாட்டு வீரர்கள் வந்தபோதும் கொரோனா பரவல் இல்லா நிலையை அடையமுடிந்தது என்கின்றனர் மருத்துவ செயற்பாட்டாளர்கள்.

லாக்டவுன் மூலம் தங்கள் நாட்டில் கொரோனா குறைந்திருப்பதாக சீனாவின் தென்பகுதியை சேர்ந்த குவாங்டாங் தெரிவித்துள்ளது. அதுதான் போக்குவரத்துக்கு முக்கியமான இடமென்பதால், அங்கு ஒருநாளுக்கு 75,000 வந்திருக்க வேண்டிய கொரோனா எண்ணிக்கை முழுமையாக குறைந்திருப்பதாகவும், கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை ஒட்டியே ஹாங்க் காங்க் இருக்கின்றது. ஹாங்க் காங்க் பகுதி, ஒமிக்ரான் முதன்முதலில் கண்டறியப்பட்ட பகுதியென்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக `ஜீரோ டாலரன்ஸ்’ மற்றும் `மருந்து அல்லா மருத்துவ தடுப்பு நடவடிக்கைகளான கட்டாயம் மாஸ்க் அணிவது - சமூக இடைவெளி கடைபிடிப்பது - பொதுமுடக்கம் அமல்படுத்துவது’ ஆகியவற்றை முறையே செய்தாலேவும் கொரோனாவை ஒழித்துவிடலாம் என் சீன நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தனது ஒரு ஆய்வில் கண்டறிந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த இரண்டையும் பின்பற்றுவதுடன், கூடுதலாக `நாட்டுக்குள் வரும் புதிய நபர்களை இரண்டு வாரம் தனிமைப்படுத்தல்’ உள்ளிட்ட சில கூடுதல் விஷயங்களையும் முறையாக பின்பற்றினால், தொற்றாளர்களை இன்னும் குறைக்க முடியுமுமாம். இதனாலேயே சீனாவில் இவையாவும் செய்யப்படுகின்றது என்று கூறப்படுகின்றது.