தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால், சென்னை மாநகராட்சியில் முழு பொதுமுடக்கத்தை அரசு பிறப்பித்ததது. அத்துடன் சென்னையின் சுற்றுவட்டார மாவட்டங்களாக செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் முழு பொதுமுடக்கம் அமல்பட்டுள்ளது. கடந்த 19ஆம் தேதி அமலுக்கு வந்த இப்பொதுமுடக்கம் ஜூன் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்கெனவே வேலைக்கு செல்லமுடியாத நிலையில் இருந்த நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு இது மேலும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதேசமயம் ரேசன் கடைகளில் மக்கள் கூடினால் கொரோனா பரவ வாய்ப்பிருப்பதால், வீடுகளுக்கு வந்து ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் 1000 ரூபாய் வீடு வீடாக வந்து வழங்கப்பட்டதாக தெரியவில்லை. அவை வீதிகளோடு நின்றுவிட்டன. அதை வாங்குவதற்கு மக்களும் சமூக இடைவெளியை மறந்து, கொரோனாவையும் மறந்து வீதிகளில் கூடிவிட்டனர். ரூ.1000 ஆயிரத்தை விநியோகித்த அரசு அலுவலர்கள் வீதியின் ஒரு முனையில் அல்லது ஒரு பகுதியின் குறிப்பிட்ட இடத்தில் நாற்காலி போட்டு அமர்ந்துகொள்ள, அவர்களுக்கு எதிரே மக்கள் வரிசையிலும், வட்டமடித்தும் நின்று பணத்தை வாங்கிச்சென்றுள்ளார். இதில் அச்சம் என்வென்றால், ஆயிரம் பணத்தோடு, ஆபத்தானா கொரோனாவையும் மக்கள் வீட்டிற்கு கொண்டு சென்றார்களோ ? என்பது தான்.
சென்னையில் கொரோனா அதிகரித்துக்கொண்டிருக்கும் இருக்கும் நிலையில், மக்களும் அச்சத்துடன் முடங்கியிருந்த வேளையில், ரூ.1000 வழங்க வேண்டிய அரசு அலுவலர்கள் முறையாக வீட்டில் வழங்காமல் மக்களை கூட்டமாக கூட வைத்து, கொரோனாவிற்கு விருந்து வைத்ததுபோல இந்த சம்பவம் ஆகிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பொதுமுடக்கத்திற்கு நிவாரணம் வாங்கும் ஏழை மக்களின் குடும்பத்தில் கொரோனா புகுந்தால், அக்குடும்பத்தின் நிலை என்ன ஆகும்? என்பது விடை தெரியா கேள்வியாக எழுந்துள்ளது.
முன்னதாக வீடு வீடாக சென்று நிவாரணத்தொகையை வழங்க அலுவலர்கள் தயங்குவதாக பிரச்னை எழுந்தது. பின்னர், கட்டிப்பாக வீடு வீடாகத்தான் சென்று வழங்க வேண்டும், ரேஷன் கடைகளில் வைத்து வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. அரசு அறிவித்துள்ளபடி முறையான திட்டமிடலுடன் 1000 ரூபாய் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.