குளிர்ந்த மலைப்பிரதேசமான குடகுமலையில் இருந்துதான் உருவாகுகிறது காவிரி. ஆனால், காவிரி பாய்ந்தோடும் கர்நாடகா மற்றும்
தமிழகத்தில் அந்த குளிர் நீர் வெளியேற்றும் அரசியல் அனல், காலங்கள் கடந்து வீசிக்கொண்டு இருக்கிறது. இரு மாநில அரசியலில்
கட்சிகளும் காவிரி பிரச்சனையில் தாகம் தணித்துக் கொண்டிருக்கின்றன. அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பின், இரு
மாநில அரசியலாக இருந்த காவிரி இப்போது தேசியப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததே அதற்கு காரணம். இதுதொடர்பான வழக்குகள் இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும், பல்வேறு சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் ஆளும் கட்சி ஒருநாள், எதிர்கட்சி ஒரு நாள், விவசாய சங்கங்கள் தொடர் போராட்டம், வணிகர் சங்கள் ஒரு நாள், திரைப்படத் துறையினர் ஒரு நாள் என தனித் தனி தேதிகளில் போராட்டங்களை அறிவித்து நடத்தியும் வருகின்றனர்.
காவிரி விவகாரம் மக்கள் பிரச்சனையாக உருவெடுத்துள்ள இந்நிலையிலும், என்ன செய்கின்றனர் தமிழகக் கட்சிகள் ? எப்போதும் போல
இப்போதும் அரசியல்தான் செய்கின்றனர். ஆளும் அதிமுக அரசு, அதுவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற ஒருநாள் உண்ணாவிரதத்தை எதிர்கட்சியான திமுக ஏளனம் செய்தது. பின்பு, திமுக நடத்தி பந்த் போராட்டத்தை அதிமுக விமர்சித்தது. தமிழகத்தில் இயங்கும் முக்கிய வணிகர் சங்கங்கள் சொந்த லாபத்துக்காக தனித்தனியாக கடையடைப்பை நடத்தினர். இதுதான் காவிரிக்காக நடைபெறும் போராட்டமா ? இன்னும் சில ஆர்வலர்களும், சிறிய அரசியல் கட்சிகளும் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போராட்டத்தை புறக்கணிப்போம் என்று கூறி வருகின்றனர். அதன் மூலம் தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தலாம் எனவும் கூறி வருகின்றனர். இந்த யோசனை ஓரளவுக்கு நியாயமானதாக இருந்தாலும், இதையே சாக்காக வைத்து ஐ.பி.எல். போட்டியையே தடை செய்ய வேண்டும், போட்டிக்கு செல்லும் ரசிகர்களை தடுப்போம் என வன்முறையை தூண்டும் வகையில் சில கட்சிகள் பேசி வருகின்றன. இந்தப் போராட்டங்களை எல்லாம் வைத்து பார்க்கின்றபோதும், தமிழகம் காவிரிக்காக கொந்தளிக்கும் சூழ்நிலையிலும் நம் தமிழக கட்சிகள் ஆக்கப்பூர்வமான போராட்டங்களை முன்வைக்கவில்லை என்பதே உண்மை. மேலும், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராடியிருந்தால் தமிழகம் ஸ்தம்பித்திருக்கும்.
போராட்டங்கள் தொடுங்குவதற்கு முன்பு, தமிழக முதல்வரும் துணை முதல்வரும் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம்
அமைப்பதற்கு கெடு விதித்த கடைசி நாள் வரை அற்புதங்கள் நிகழ காத்திருக்கும் பக்தர்கள் போல "இன்னும் நாள் இருக்கு", "நம்பிக்கை இருக்கு", சொல்லியே காலத்தை கழித்தார்கள். அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை முடக்கி அழுத்தம் கொடுத்தார்கள். முதலில் அதிமுகவிலேயே எப்படிப்பட்ட போராட்டத்தை முன்னெடுப்பது என்ற குழப்பம் ஆரம்பித்தில் இருந்தே இருந்தது. காவிரி விவகாரம் தொடர்பாக அதிமுக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு சென்ற திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட்டத்தை பார்த்தபோது தமிழகமே மகிழ்ச்சியடைந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியபோது தமிழக மக்கள் மெய் சிலிர்த்தனர். ஆனால், போராட்டம் என்று வரும்போது மக்களை கவர்வதற்காக நாங்கள்தான் சிறந்த போராட்டக்காரர்கள் மற்றவர்கள் எல்லாம் சும்மா, என்கிற ரீதியில் நடப்பதாகவே பொது மக்கள் பார்க்கின்றனர்.
அதிமுக உண்ணாவிரத்தில் பிரியாணி சாப்பிட்டார்கள் என்று திமுகவும், திமுகவின் மறியல் போராட்டத்தில் மகளிர் அணியைச் சேர்ந்தவரை இளைஞர் அணியினர் இடுப்பை கிள்ளியதாக சரமாரியான, மிக மோசமான, நாகரீகமற்ற அரசியலும் காவிரியின் பெயரில் நடத்தப்படுகிறது. நம் பக்கத்து மாநிலத்திலும் அரசியல் போட்டிகள் இருக்கிறது. ஆனால் மாநில நலன் என்று வரும்போது அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவர். உதாரணத்துக்கு கேரளாவை எடுத்துக்கொள்ளலாம். கேரள மாநிலத்தில் ரயில் தண்டவாளம் இல்லாத ஊர்களே இல்லை என்று சொல்லலாம். அதற்கு காரணம் ஒற்றுமை. தங்கள் மாநிலத்துக்கான ரயில் திட்டத்தை அனைத்துக் கட்சியினரும் ஒன்று கூடி ஒருமித்து செயல்பட்டு திட்டத்தை கொண்டு வருவார்கள். முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையிலும் கேரளக் கட்சிகள் அப்படியே செயல்பட்டன. ஒற்றுமையில் கர்நாடகாவும் அப்படித்தான், காங்கிரஸ் பா.ஜ.க. கொள்கை முரண்கள் இருக்கலாம், ஆனால் காவிரி என்று வரும்போது அனைவரும் ஒரே குரலில்தான் செயல்படுவார்கள். ஆனால், தமிழகம் கடந்தாண்டுதான் போராட்டம் என்றால் என்னவென்று நாட்டுக்கே எடுத்துக்காட்டியது. அதுதான் உலமே வியந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம். அந்தப் போராட்டம் மாபெரும் வெற்றிப்பெற்றது அனைவரும் அறிந்ததே. அதிமுகவின் எம்.பி. தம்பிதுரை, "ஜல்லிக்கட்டு போராட்டம் போல காவிரிக்காக இளைஞர்கள் போராட வேண்டும்" என்று கூறுகிறார். இப்படி எல்லாப் பிரச்சனைக்கும் போராட்டத்தையும் இளைஞர்கள்தான் செய்ய வேண்டுமென்றால், உங்களை எதற்கு நாங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பினோம் என்ற கேள்வியை நேரடியாகவே கேட்கத் தோன்றுகிறது.
நாங்கள் தேர்ந்தெடுத்த நீங்களே ஒற்றுமையாக போராட மறுக்கும்போது, பொது மக்களை ஏன் போராட்டக்களத்துக்கு அழைக்கிறீர்கள். ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று கூறும் அரசியல்வாதிகள், முதலில் பல்லாண்டுக்காலமாக ஓடும் காவிரியை கிடைக்க வழி செய்யுங்கள். உண்மையில், மக்கள் நலன்தான் நோக்கம் என்றால் வேற்றுமையை மறந்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றுக் கூடி போராடுங்கள், நமக்கான காவிரி உரிமை நிச்சயம் கிடைக்கும். அப்படி நீங்கள் ஒற்றுமையாக போராடும் சூழ்நிலை உருவாகும்போது, நீங்கள் அழைக்காமலேயே இளைஞர்கள் போராடுவார்கள் ! மனசாட்சியை கேளுங்கள் அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள் மாண்புமிக அரசியல் கட்சித் தலைவர்களே.