சிறப்புக் களம்

அடுத்தடுத்து அதிரடிகள்... இப்போது தமிழக அரசின் நிர்வாக முடிவுகள் எடுக்கப்படுவது எப்படி?

அடுத்தடுத்து அதிரடிகள்... இப்போது தமிழக அரசின் நிர்வாக முடிவுகள் எடுக்கப்படுவது எப்படி?

Veeramani

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக அதிரடி கட்டுப்பாடுகள் தொடங்கி, மத்திய அரசுடனான ஆலோசனையில் நீட் குறித்த நிலைப்பாடு வரை தமிழக அரசின் பல முடிவுகளும் மக்கள் கவனத்தை ஈர்க்கின்றன. தமிழக அரசின் நிர்வாக அதிரடி முடிவுகளுக்குப் பின்னால் இருப்பது யார் யார்? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.

தமிழகத்தில் 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்துவிட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவர இன்னும் 20 நாட்களுக்கும் மேல் காலம் இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளிவந்தாலும் ஆட்சியமைய சில நாள்கள் பிடிக்கும், அப்படியானால் இடைப்பட்ட இந்த நாள்களில் அரசின் நிர்வாகம் எப்படி நடக்கும் என்ற கேள்வி அனைவருக்கும் எழலாம்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்திலிருந்தே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்திலிருந்து, தேர்தல் முடிவுகள் வெளிவந்து அடுத்த அரசு அமையும் வரை உள்ளது காபந்து அரசு அல்லது இடைக்கால அரசு என்று அழைக்கப்படும்.

பணிகள் என்னென்ன?

காபந்து அரசினால் எந்தக் கொள்கை முடிவுகளையும் எடுக்க முடியாது. முதல்வரோ அல்லது அமைச்சர்களோ இந்த காலகட்டத்தில் புதிய திட்டங்களையோ, அறிவிப்புகளையோ வெளியிடக்கூடாது என்பது மரபு. அதுபோல அரசின் நிகழ்ச்சிகளிலோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்பிலோ அமைச்சர்கள் கலந்துகொள்ளக்கூடாது என்பதும் மரபு.

அப்படியானால் இந்த காலக்கட்டத்தில் நிர்வாகம் எப்படி நடக்கிறது?

நமது நாட்டில் நிர்வாக கட்டமைப்பு என்பது மிகவும் பலமானது, அதனால் முதல்வரோ அல்லது அமைச்சர்களோ இல்லாததால் எந்த வகையிலும் நிர்வாகம் பாதிக்காது. முதல்வர் அல்லது அமைச்சர்கள் என்பது கொள்கைரீதியான முடிவெடுக்கும் பதவியாக இருந்தாலும், அவர்களின்றியும் கூட சிக்கலின்றி நிர்வாகத்தை நடத்தும் கட்டமைப்பு இங்கு வலுவாக உள்ளது. எடுத்துக்காட்டாக தமிழகத்தில் கிட்டத்திட்ட 4 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை, ஆனாலும் சில குறைபாடுகள் இருந்தாலும்கூட அந்த காலகட்டங்களில் இங்குள்ள நிர்வாக கட்டமைப்பு தனது பணியை தொடர்ந்து செய்தது. அதுபோலவே காபந்து அரசு நடக்கும் காலகட்டங்களிலும் தலைமைச்செயலாளர், துறைச்செயலாளர்கள் மூலமாக நிர்வாகம் தங்குதடையின்றி நடைபெறும்.

காபந்து அரசின் செயல்பாடுகள் என்ன, இந்த காலகட்டத்தில் நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதை விரிவாக விளக்கும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், “தற்போதுள்ள காபந்து அரசு கொள்கை ரீதியாக புதிய முடிவு எதையும் எடுக்க முடியாது, ஆனாலும்கூட ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை செயல்படுத்துவதில் எந்த தடையும் இல்லை. முதல்வர் மற்றும் அமைச்சர் என்பது அரசியல் தலைமைப்பதவி, தலைமைச்செயலாளர் என்பது அதிகார-நிர்வாகத்தலைமை பதவி. அரசியல் பதவிகள் வரும் போகும், ஆனால் நிர்வாகப்பதவிகள் எப்போதும் தங்குதடையின்றி செயல்படக்கூடியது. தற்போது கோவிட்19 நெருக்கடி இருப்பதால் அதுசார்ந்த முடிவுகள் எடுப்பதில் தற்போதுள்ள தலைமைச்செயலாளரே முடிவெடுக்கலாம். அதுபோலவே இந்த காபந்து காலத்தில் அந்தந்த துறை செயலாளர்களே முடிவெடுத்து நிர்வாகத்தை நடத்தலாம்.

தற்போது மத்திய அரசு கோவிட் 19 நெருக்கடி தொடர்பாக ஒரு ஆலோசனைக்கூட்டத்தை நடத்துகிறது என்றால், அதில் முதல்வர் பங்கேற்கலாம். முதல்வரோ அல்லது அமைச்சர்களோ எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டாலோ அல்லது புதிய திட்டங்களை அறிவித்தாலோ அது மரபினை மீறிய செயல். காபந்து அரசு என்பதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் எந்த விதிமுறைகளும் கிடையாது, ஆனால் மரபுரீதியாக காபந்து அரசு எந்த கொள்கை முடிவும் இங்கே எடுப்பதில்லை.

ஒருவேளை கொரோனா நெருக்கடி வீரியமடைந்து மக்களுக்கு ஒரு உதவித்தொகை அறிவிக்க வேண்டுமென்றால்கூட தலைமைச்செயலாளர் அறிவித்தால் அது நிர்வாக முடிவாக இருக்கும், அதற்கு தடையில்லை. ஆனால் காபந்து முதல்வர் உதவித்தொகையை அறிவித்தால் அது மரபினை மீறிய செயலாகும். தமிழக அரசியலில் இதுவரை எந்த காபந்து முதல்வரும் மரபினை மீறி செயல்பட்டதில்லை.

உலகில் மரபு சார்ந்த சட்டங்களால் இயங்கும் நாடுகள், எழுதப்பட்ட சட்டங்களால் இயங்கும் நாடுகள் என இருவகை நாடுகள் உண்டு. நாம் மரபு சார்ந்த சட்டங்களால் இயங்கும் இங்கிலாந்து நாட்டினை பின்பற்றுவதால் மரபுப்படி காபந்து அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆனால் 1999-இல் காபந்து அரசாக இருந்த வாஜ்பாய் அரசுதான் கார்கில் போரையே நடத்தியது, இதுபோன்ற அரிதினும் அரிதான சூழல்களில் காபந்து அரசு செயல்படும் சூழலும் உருவாகும்” என்கிறார்.