சிறப்புக் களம்

மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடு: தமிழகத்தில் வேட்பாளர்கள் தேர்தல் செலவு உச்சவரம்பு இதுதான்!

மாநிலத்துக்கு மாநிலம் வேறுபாடு: தமிழகத்தில் வேட்பாளர்கள் தேர்தல் செலவு உச்சவரம்பு இதுதான்!

Veeramani

வேட்பாளர்களின் தேர்தல் செலவு உச்சவரம்பை உயர்த்த திட்டமிட்டுள்ளது தேர்தல் ஆணையம். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தற்போது எவ்வளவு செலவு செய்யலாம் என்று பார்ப்போம்…

மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறிப்பிட்ட தொகையை செலவு செய்வதற்கு அனுமதி வழங்கப்படும். கடந்த 2014ஆம் ஆண்டு வேட்பாளர் தேர்தல் செலவு உச்சவரம்பில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், 2018 ஆம் ஆண்டு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு மட்டும் தேர்தல் செலவு உச்சவரம்பில் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த அக்டோபரில் நடந்த பீகார் தேர்தலின்போது 10 சதவிகிதம் என்ற அளவில் தேர்தல் செலவு உச்சவரம்பை தேர்தல் ஆணையம் உயர்த்தியது. இந்த நிலையில், தற்போது வேட்பாளர்களின் தேர்தல் செலவு உச்சவரம்பை உயர்த்த தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து வருகிறது. இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

வேட்பாளர் தேர்தல் செலவு உச்சவரம்பு எவ்வளவு?

வேட்பாளர் தேர்தல் செலவு உச்சவரம்பை பொருத்தவரை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். உதாரணமாக அருணாச்சல பிரதேசம், கோவா, பாண்டிச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் செலவு ரூ.59.4 லட்சமாகவும், சட்டப்பேரவை தேர்தல் செலவு ரூ.22 லட்சமாகவும் உள்ளது. அதேபோல ஆந்திரா, தமிழகம், மத்தியப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தல் செலவு உச்சவரம்பு ரூ.77 லட்சமாகவும், சட்டமன்ற தேர்தல் செலவு உச்சவரம்பு ரூ.30.8 லட்சமாகவும் உள்ளது.

ஏன் செலவு உச்சவரம்பு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது?

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்யலாம். அவர் எவ்வளவு தொகையை செலவு செய்யலாம் என்று மக்கள் தொகை, பணவீக்கம், தொகுதி செலவு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கும், சட்டமன்ற தேர்தலுக்கும் தேர்தல் செலவு வேறுபடும். அதேபோல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அளவை பொறுத்தும் செலவு உச்சவரம்புகள் மாறுபடுகிறது

தமிழகத்தில் எவ்வளவு தொகை செலவு செய்யலாம்?

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் வேட்பாளர் ரூ.77 லட்சம் செலவு செய்யலாம்; சட்டமன்ற தேர்தலில் ரூ.30.8 லட்சம் செலவு செய்யலாம். இதனை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும். தேர்தல் முடிந்த பிறகு வேட்பாளர்கள் செலவுக்கணக்கினை தாக்கல் செய்யவேண்டும். வேட்பாளர்களுக்கு மட்டுமே செலவு உச்சவரம்பு உள்ளதே தவிர, அரசியல் கட்சிகளுக்கு எந்த செலவு உச்சவரம்பும் இல்லை.