தலைப்பை பார்த்தவுடனேயே பலரும் ‘ஸ்மைலி’ பட்டனை தட்டிவிட நினைத்திருப்பீர்கள். அந்தளவுக்கு இந்தத் தலைப்பு சமூக வலைதளத்தில் ‘வைரல்’. ஒருவர் ஒரு கட்டுரையை ஷேர் செய்திருந்தார். ‘ஆயிரம் பச்சை மிளகாவை கடித்து துப்பிய தமிழன்’. இதான் அந்தக் கட்டுரையில் உள்ள செய்தி. அதில் இறுதியாக ஒட்டிக் கொண்டிருந்தது ஒரே ஒரு சொல்; தமிழன். ஆகவே அவர் சொல்ல வருவது என்ன தெரியுமா? இவ்வளவு பெரிய சாகசத்தை செய்திருக்கும் ஒருவரை பாராட்டியே ஆக வேண்டும். அதற்காக அவர் பொங்கி எழுந்து ‘நீ தமிழனாக இருந்தால் இதனை உடனே ஷேர் செய்’ என்று போட்டிருந்தார். இதைப்போல இவர் மட்டும் இல்லை. சமூக வலைதளத்தில் இதையே வாழ்க்கையாக வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள்.
அதை எல்லாம் படிக்கும் போது ‘என்னப்பா உங்க கடமைக்கு ஒரு அளவே இல்லையா?’ என கேட்க தோன்றுகிறது. அந்த அளவுக்கு அக்கப்போர் விஷயங்களை எல்லோம் போட்டு விட்டு உடனே ‘தமிழனா இருந்தா இத உடனே ஷேர் செய்’ என ஒரு வாசகத்தை போட்டுவிடுகிறார்கள். இதை படித்துவிட்டு சீட்டை தூக்கிப் போட்டால் ரத்தம் கக்கி சாக வேண்டும் என ஒரு காலத்தில் பிட் நோட்டீஸ் கொடுப்பார்கள். அதில் சில விஷயங்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கும். அதன் படி நடக்கவில்லை என்றால் உடனே ரத்தம் கக்கி செத்துப்போவீர்கள் என பயமுறுத்தி சில வாசகங்களை அச்சிட்டிருப்பார்கள். அதற்கு ஈடாக இப்போது எதற்கெடுத்தாலும் ‘தமிழனா இருந்தா இத ஷேர் பண்ணு’ என்ற வாசகம் மாறியிருக்கிறது. இதில் சிலர் ஒருபடி மேலே சென்று சிலர் ‘பச்சை தமிழனா இருந்தா’ என அழுத்தம் தந்து செய்தியை பரப்புகிறார்கள்.
அவசியமற்ற செய்திகளுக்கு இவ்வளவு ஆக்ரோஷமாக பொங்கும் பலர் நியாயமான விஷயங்கள் குறித்து கண்ணை திறந்துக்கூட பார்க்கமாட்டார்கள். சமூகம் குறித்து, அரசியல் குறித்து இவர்களின் நிலைப்பாடு என்ன? ஊழல், சாதிய பாகுபாடு பற்றிய இவர்களின் புரிதல் என்ன என்பதற்கு எல்லாம் விடையே இல்லை. முதலில் தீவிரமாக தொடங்கிய பிரச்சாரம் பிறகு வலைதள வாசிகளாலேயே வறுத்து எடுக்கும் அளவுக்கும் நக்கல் நையாண்டியாக இந்தப் போக்கு மாறியது. மேலும் தமிழன், தமிழன்டா, தமிழா போன்ற "ஹாஷ்" டேக்கள் கூட அதிகமாக புழங்கப்பட்டு வருகிறது.
இவ்வளவு தமிழபிமானம் உள்ள இவர்கள் தமிழின் எந்த ஆக்கப்பூர்வமான விஷயத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சமீபத்தில் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படுவதற்காக ஒரு பெரிய இயக்கமே நடந்தது. அதற்காக யாரும் ‘தமிழனாக இருந்தா ஷேர் செய்’ ஹாஷ்டேக் போட்டு வேலை செய்தார்களா என்றால் கண்ணுக்கு எட்டியவரை அப்படி ஒன்றுமே நடக்கவில்லை. பல ஊர்களில் பல நூல் நிலையங்கள் பாழ் மண்படங்கள் போல உருமாறிக் கொண்டிருக்கின்றன. முறையான கட்டட வசதியின்றி அதில் உள்ள நூல்கள் பாழாகிப் போய் கொண்டிருக்கின்றன. அந்த நூல்களை காப்பாற்றுவதற்காகவோ, அரசின் அலட்சியப் போக்கை எதிர்க்கவோ ‘தமிழனா இருந்தா’ என்று எழுதிப் பொங்குவதில்லை. மொழி, இனம் என எந்தக் கடமையிலும் அக்கறைக்காட்டாமல் நயா பைசாவுக்குப் பொறாத பிரச்னைகளுக்கு ‘பச்சை தமிழனா’ என உசுப்பிவிடுவதால் என்ன இலாபம் வரப் போகிறது.
இதில் உச்சப்பட்ச காமெடி என்ன தெரியுமா? ஃபேஸ்புக்கில் தமிழன் என டைப் செய்தாலே, உடனே காட்டுவது என்னத் தெரியுமா? ‘தமிழனா இருந்தா இத ஷேர் செய்’ தான். இன்னொரு விஷயமும் நம் கண்களில் பட்டது. ‘இந்தியாவிற்கே சோறு போடுவது தமிழன் தான். இந்திய மானத்தை காப்பவனும் தமிழந்தான்’ இதை போட்டுவிட்டு உடனே, ‘பச்சைத் தமிழனா இருந்தா இத ஷேர் செய்’ என போட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் விவசாய நிலை அதலபாதாளத்திற்குப் போய் கொண்டிருக்கிறது.
கெய்ல் பிரச்னை, ஹைட்ரோகார்பன் பிரச்னை, காவிரி தண்ணிர் பிரச்னை, பயிர்க்கடன் பிரச்னை என விவசாயி தினம் தினம் சந்திக்கும் பிரச்னை அவர் கழுத்தை நெறிக்கும் அளவுக்குப் போய்க் கொண்டிருப்பதை இவர்கள் அறிவார்களா என்ன? Nithya Athmagjnana maharajக்கு கனடா பிரதமர் தொலைபேசியில் வாழ்த்து கூறியிருக்கிறாராம். அதற்காக "தமிழனா இருந்தா ஷேர் செய்" என டைட்டில் கார்ட் போட்டு செய்தியை பரப்ப சொல்லி இருக்கிறார் இன்னொருத்தர். எப்படிதான் டிசைன் டிசைனாக கிளம்பி வருகிறார்களோ தெரியலப்பா ? இப்பவே கண்ணக் கட்டுதே என வடிவேலு ரேஞ்சுக்கு நாம் பெருமூச்சு விட வேண்டி இருக்கிறது.
ஒரு வெள்ளைக்கார சிறுவன் மூன்று நாற்காலியை இணைத்து ஆணி அடித்து வைத்திருக்கும் போட்டோவை ஒருவர் ஷேர் செய்துவிட்டு, “தமிழனா இருந்தா ஷேர் பண்ண சொன்னாங்க, அதுதான் ஷேர் பண்ணிட்டேன்” என காமெடி செய்திருக்கிறார். இன்னொருவர் ‘உண்மையான தமிழனா இருந்தா இந்த வீடியோவை எல்லாம் எனக்கு அனுப்பாதீங்கனு எத்தனையோ தடவை சொல்லிட்டேன்” என்று கார்ட் செய்து போட்டிருக்கிறார்.
“தமிழகத்தின் கடன் 3.59 லட்சம் கோடியாக உயர்ந்ததை கேள்விப்பட்ட கனடா பிரதமர் மொத்த கடனையும் தானே அடைத்து விடுவதாக சொல்லிவிட்டார். தமிழகத்திற்காக பாடுபடும் அவரை பாராட்டலாமே” என கூறிவிட்டு ‘நீ உண்மையான தமிழனா இருந்தா சேர் செய்’ என போடுகிறார் காவியத்தலைவர் என்ற முகநூல் வாசி. அதே போல குரங்கணி தீ விபத்துக்குறித்தும் அதற்காக கனடா பிரதமர் தனி விமானத்தில் வருகை தந்து சுற்றி பார்வையிட்டதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. கடந்த சில தினங்களாக இவர்தான் இப்போதைய வைரல் கன்டன்ட். மேலும் தமிழ் கிங் மேக்கர் பெயரில் “தாய் மண்ணிற்கு பெருமை சேர்த்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கு 5 கோடி ரூபாய் பரிசு தரப்படும்- ஜஸ்டின் ட்ரூடோ’என்று கூட இரண்டு மூன்று நாட்களாக பல மீம்ஸ்..பல கார்டு.. என எல்லைக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது ஃபேஸ்புக் வாசிகளின் அக்கப்போர்.
இறுதியாக ஒரு விஷயம் ‘நீங்கள் பச்சை தமிழனாக இருந்தால் இந்தக் கட்டுரை தகவலையும் ஷேர் செய்’.