kid learning through visual AI generated images through DallE
சிறப்புக் களம்

கோழியை ஒன்றும் செய்ய முடியாது !

எழுத்தாளர் , கவிஞர் மகுடேசுவரன் எழுதும் புதிய தொடர் - இளையோர் மொழிக்களம் பாகம் 8

மகுடேசுவரன்

வளரும் குழந்தை மொழியை எப்படி உள்வாங்குகிறது ? அதன் மனம் பொருளை அறிந்து அறிந்து பதித்துக்கொள்ளும். காட்சி வழியே புலப்படும் உருவங்களுக்கு முதலிடம். அதனால்தான் பொருள் என்பது ‘அர்த்தம்’ என்ற இன்னொரு பொருளை எட்டியது. அதற்கும் முன்னே தொடக்கக் காலத்தில் ஒரு சொல்லுக்கு வழங்கப்படும் பொருள் என்பது அந்தச் சொல் காட்டும் பருப்பொருள்தான். உருவப்பொருள்தான் சொல் காட்டும் பொருள். இதுதான் மொழியின் தொடக்கப் பிரிவினையான பொருட்பெயர் எனப்படுவது.

kid learning through visual

பொருள் மட்டுமே குழந்தைக்குத் தெரிந்தபோது அதற்கொரு சொல்லுருவம் கொடுக்கவும் முயன்றது. அந்தச் சொல்லுருவங்கள் யாவும் அந்தப் பொருளோடு ஒலித்தொடர்பு கொண்டவையாக இருக்கும். காணப்படும் பொருளாகிய உருவத்தைச் சொல்வழியாக வெளிப்படுத்த முயலும்போது குழந்தைக்கு இயல்பாய் நினைவுக்கு வருவது எது ? அந்தப் பொருள் தொடர்பான ஒலிகள்தாம்.

குழந்தையின் தந்தை ‘புல்லட்’ ஈருருளி வைத்திருக்கிறார் என்று கொள்வோம். அந்தக் குழந்தையைப் பொறுத்தவரையில் அந்தப் பொருளின் பெயர் என்ன ? ‘புடுபுடு’ என்பதுதான் பெயர். பேச்சு வளர்ச்சி முழுமையடையாத ஒரு குழந்தையிடம் “உங்க அப்பா எங்கே கண்ணு ?” என்று கேட்டால் என்ன சொல்ல முயலும் ? அப்பா வண்டியில் வெளியே போயிருக்கிறார் என்று கொள்வோம். “அப்பா புடுபுடு” என்றுதான் அந்தக் குழந்தை சொல்லும். ஒரு குழந்தைக்குச் சொல் என்பது அந்தப் பொருளோடு தொடர்புடைய ஒலிகள்தாம்.

இளையோர் மொழிக்களம்

அதனால்தான் மொழி என்பது ஒலிப்பு. ஒலிவழிப்பட்ட நெருங்கிய தொடர்புடையனவற்றையே சொல்லாக மாற்றிக்கொண்டுள்ளோம். ஒரு குழந்தைக்கு மிக நெருக்கமாகத் தோன்றுபவை பொருளோடு இத்தகைய ஒலிவழித் தொடர்புடைய சொற்கள்தாம்.

காகம் என்பது பிறகு திருத்திச் செம்மைப்படுத்தப்பட்ட பெயர். குழந்தைக்கு அது ‘காக்கா’தான். ஏனென்றால் அது ‘கா கா’ என்றுதான் ஒலியெழுப்புகிறது. அந்த ஒலிக்குறிப்புக்கு ஈற்றில் ஐகார விகுதி ஏற்றித்தான் ‘காக்கை’ என்ற சொல்லாக வழங்குகிறோம். ‘காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது’ என்பது ஒலிவழித் தோன்றலுடைய சொற்கள் அனைத்திற்கும் பொருந்தும். ஒலி அடையாளம் பற்றியே காகம், காக்கை என்னும் சொற்கள் தோன்றுகின்றன. எனில், காக்கா என்கின்ற பெயரைக் குழந்தையே சொல்கிறது. ‘அது காக்கா’ என்று சொன்னால் குழந்தைக்கு மிகவும் பிடித்துப்போய்விடும். ஒலிக்குறிப்பும் மொழியும் அதன் வெளிப்பாடும் நிலைப்பும் என யாவும் ஒன்றான இடம் இது.

‘கீ கீ’ என்று மிழற்றுவதால் கிளி என்ற சொல்லும் குழந்தைக்கு நெருக்கம்தான். ‘கோ கோ’ என்றோ ‘கொக்கரக்கோ’ என்றோ ஒலியெழுப்புவது ‘கோழி’ என்ற பெயரால் அழைக்கப்பட்டாலும் அதற்குப் பிடிக்கிறது. கோழியைக் ‘கோ கோ’ என்று அழைக்கிறது.

கோழி என்ற ஒரு பெயர் ஒருவகைப் பறவைக்குப் பெயராக நிலைத்த பிறகு மேலும் பலவகைப் பறவைகள் கோழிகள் எனப்படுகின்றன. வான்கோழி, கருங்கோழி, கானாங்கோழி, வரகுக் கோழி, நீர்க்கோழி, சம்பங்கோழி, கின்னிக்கோழி, நெருப்புக்கோழி என்று மாபெரும் பெயர்க்கூட்டமாக மாறுகிறது. மொழியில் இப்படித்தான் அனைத்தும் நடக்கின்றன. ஓர் அடிப்படைச் சொல்லை உருவாக்கிவிட்டால் போதும், அதனை அம்மொழியாளர் ஏற்றுக்கொண்டால் போதும். அச்சொல்லைப் பற்றி அடுத்தடுத்த சொற்கள் விறுவிறுவென்று தோன்றிவிடுகின்றன.

Types of hen


கோழி என்ற அந்த ஒரு சொல் இருக்கிறதே, அதுதான் வேர்ச்சொல். அதுதான் தொன்மைச் சொல். அதுதான் பழஞ்சொல். அந்தச் சொல் இயற்கையோடு இம்மொழிமக்கள் புரண்டு வாழ்ந்தபொழுது ஒலிபற்றியோ, வேறு இயற்கைக் காரணம் பற்றியோ அடிப்படை வலுவோடு தோன்றியது. அதனை அனைவரும் ஏற்றோம். அச்சொல் நிலைத்த பிறகு அதன்வழி பற்றி, அதனை முன்பின் ஒட்டாகக்கொண்டு ஆயிரமாயிரம் சொற்கள் தோன்றுகின்றன.

புதிது புதிதாய்த் தோன்றும் சொற்களை என்னவாயினும் செய்யலாம். ஆனால், அடிப்படைச் சொற்களை அசைக்கவே முடியாது. நெருப்புக்கோழி என்பதற்கு இன்னொரு புதிய சொல்கூட ஆக்கலாம். ஆனால், கோழி என்ற சொல்லை எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால் அதுதான் மொழித் தோற்றுவாயாக விளங்கும் சொல். ஒரு குழந்தை ஏற்றுக்கொண்ட சொல். ஒரு குழந்தை தன்னியல்பாகச் சொன்ன சொல்.

தொடரும்..!