தாய்மொழிக் கல்வி pixabay
சிறப்புக் களம்

தாய்மொழிக் கல்விக்கு முன்னரே பிறமொழி கற்பது வன்முறை

எழுத்தாளர் , கவிஞர் மகுடேசுவரன் எழுதும் புதிய தொடர் - இளையோர் மொழிக்களம் பாகம் 4

மகுடேசுவரன்

தொடரின் முந்தைய கட்டுரைகள்

மொழி மட்டும் தப்பித்துவிடுமா ? - https://bit.ly/COLE01

தமிழுக்குத் தலைப்பில்கூட இடமில்லையா? - https://bit.ly/COLE02

பூமர் என்பவர் யார் ? https://bit.ly/COLE03

இளமையில் ஒருவர்க்கு மொழி கைவந்துவிட வேண்டும். இல்லையேல் எந்தக் காலத்திலும் அவரால் மொழியைக் கற்றுத் தேர்ந்துவிட முடியாது. அப்படியே கற்றாலும் அது இளமையில் கற்றதைப்போல் இராது. அதனால்தான் ‘இளமையில் கல்’ என்றார்கள். எந்தத் திறம் பெறவேண்டுமானாலும் அந்தத் திறம் பெறுவதற்கு இளமையை ஒதுக்கவேண்டும்.

மகுடேசுவரன்

நீங்கள் இளையவராக இருந்தாலும் சரி, பெற்றோராக இருந்தாலும் சரி, ஒருவரின் இளமையை வீணடிப்பதைப்போன்ற பேரிழப்பு எதுவுமேயில்லை. கற்றலுக்கும் நினைவிற்பதித்தலுக்கும் தொடர்ந்து பயின்று வல்லமை பெறுவதற்கும் ஏற்றது இளமையொன்றே. நேற்று நடந்தவை நினைவில் இல்லாமல் போகலாம். ஆனால், இளமையில் நிகழ்ந்த ஒவ்வொன்றும் மறவாமல் நினைவில் நிற்கும்.

நம் நாட்டில் அருமை உணராது வீணடிக்கப்படுவனவற்றில் பிள்ளைகளின் இளமைக் காலத்தையும் சேர்க்க வேண்டும். அதற்காகத்தான் ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளை எப்பாடு பட்டாவது பெருங்கல்விக் கூடத்திற்குள் தள்ளிவிடத் துடிக்கிறார்கள். கல்வி நிலையங்கள் கேட்கின்ற தொகையை உருட்டிப் புரட்டிக் கட்டிவிட அணியமாக உள்ளார்கள். சேர்க்கை விண்ணப்பப் படிவம் பெற நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கே வாயில்முன் வரிசை கட்டியவர்கள் நாம். அங்கே சேர்த்துவிட்டால் பிள்ளைகளின் கல்விக்காலம் உறுதிப்பட்டுவிடுவதாக நினைப்பு.

துயரங்களிலேயே பெரிய துயரம் என்ன தெரியுமா ? பெற்றோர் எவ்வளவு செலவு செய்தேனும் அருங்கல்வியை வழங்குதற்குத் திண்ணமாக இருக்கும் நிலையில் அவர்களுடைய பிள்ளைகட்குப் படிப்பு வராமல் போவதுதான். “எங்கே வேணாலும் சேர்த்தி எவ்வளவு வேணாலும் செலவு பண்றதுக்கு அப்பா தெம்பாத்தான் இருக்கறாரு, ஆனால் பையனுக்குப் படிப்பே ஏறல” என்று காதுபடப் பேசக் கேட்கிறோம்.

படிப்பின் வழிபற்றிச் செல்லும் வாழ்க்கைதான் அடிப்படை வலுவுள்ளது என்பது நம் நம்பிக்கை. படிப்பே வராவிட்டாலும் ஒருவர் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தை அடைந்துவிடுகிறாரே அது எப்படி ? அத்தகைய விதிவிலக்குகள் யாவும் ஆயிரத்தில் சிலவாக அமைபவை. ஆனால், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

கல்வி நிலையங்கள்

கல்வி என்ற பெயரில் கல்விக்கூடங்களில் நாம் எதனைக் கற்கத் தொடங்குகிறோம் ? ஒன்றாம் வகுப்பாகட்டும், மழலையர் வகுப்பாகட்டும், அங்கே சேர்க்கப்பட்ட குழந்தைக்கு முதலில் எது கற்றுத் தரப்படுகிறது ? மொழிதான் கற்றுத் தரப்படுகிறது. மொழியைக் கற்பதுதான் கல்வியின் தொடக்கம். மொழியைக் கற்று முடித்த பின்னரே பிற இயல்களுக்குச் செல்ல முடியும். ஆனால், கல்விக் கூடங்களில் மொழியானது முழுமையாய்க் கற்றுத் தரப்படுகின்றதா ?

மொழியைக் கற்பது என்பது பல வழிகளில் இடையறாதும் தொடர்ந்தும் நிகழ்கின்ற செயல். பிறந்தவுடன் ஒரு குழந்தை மொழித்தொடரை உள்வாங்குகிறது. தாய்தந்தையரின் கொஞ்சல் மொழி அந்தக் குழந்தையின் உணர்வுகளை மீட்டுகிறது. ஒரு குழந்தையின் செவிப் புலம் உயிர்க்கத் தொடங்கியவுடன் மொழியைக் கேட்கத் தொடங்குகிறது. மொழித் தொடர்கள் தொடர்ச்சியாகச் செவியில் விழுவதே அந்தக் குழந்தைக்கு மொழியின்பால் உறவை ஏற்படுத்துவது.

கல்விக் கூடத்திற்கு ஒரு குழந்தை வந்து சேரும்போது பெற்றோர் வழியே கற்ற மொழியோடு வந்து சேர்கிறது. அதன் மனம் தாய்மொழி அமைப்பிற்கு ஏற்பத் தகவமைந்துள்ளது. மொழிக்கல்விதான் அனைத்திற்கும் அடிப்படை. அறிவின் இயங்குவழி மொழி. அறிவுத்துறைகள் அனைத்திற்குமான சிந்தனைக் கருவி மொழி. அதனைத்தான் ஒரு குழந்தை பழுதில்லாமல் கற்றுத் தேறவேண்டும். ஆனால், நடைமுறை எவ்வாறு இருக்கிறது ?

நாம் முன்பின்னே அறியாத மொழியின் சொற்றொடர்களைக் கேட்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவற்றின் எழுத்துக்கட்டினை உடனே கூறமுடியுமா ? முடியாதுதான். ஏனென்றால் நாம் அறியாத மொழியொன்றின் ஒலிப்பயன்பாடும் பலுக்கலும் நமக்கு முற்றிலும் ஒவ்வாதவையாக இருக்கின்றன. “எங்கே மீண்டும் கூறுங்கள்” என்று வேண்டி உற்றுக் கேட்டுதான் சொல்ல முடியும். அறிந்த மொழிக்கும் அறியாத மொழிக்குமிடையே வளர்ந்தோராகிய நாமே வேறுபாடு உணர முடியாமல் தவிப்போம். அங்கே நம் பிள்ளைகள் ஆங்கிலத்தைக் கற்கத் தொடங்குகின்றன. தாய்மொழிக்கு முன்னதாகப் பிறமொழி கற்பதாகட்டும், தாய்மொழியோடு சேர்த்தே பிறமொழி கற்பதாகட்டு, அது எவ்வளவு பெரிய வன்முறை ?