தமிழ்  File Image
சிறப்புக் களம்

தமிழுக்குத் தலைப்பில்கூட இடமில்லையா?

எழுத்தாளர் , கவிஞர் மகுடேசுவரன் எழுதும் புதிய தொடர் - இளையோர் மொழிக்களம் பாகம் 2

மகுடேசுவரன்

தொடரின் முதல் கட்டுரையைப் படிக்க..!

இன்றைய இளையோர் என்று யாரைக் குறிப்பிடலாம் ? https://bit.ly/COLE01

இளையோர் மொழிக்களம்

இன்றைய இளையவர்கள் தொண்ணூறாம் ஆண்டின் இறுதியில் பிறந்தவர்கள். இவ்வளவுக்குத்தான் நாள்களைப் பின்தள்ள இயலும். இரண்டாயிரமாம் ஆண்டு பிறந்த பிறகே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் சேர்த்து ஆங்கில வழிக் கல்வி புகட்டுவதொன்றே உயிர்மூச்சாய் மாற்றிக்கொண்ட பெற்றோர்களின் காலகட்டம் அது. அதற்கு முன்னர்வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களே பெரும்பான்மையினர். ஒட்டுமொத்தக் கணக்கெடுப்பில் அரசுப் பள்ளிகளில் பயில்வோரே இன்றைக்கும் எண்ணிக்கையில் மிகுதியாய் இருக்கக்கூடும். ஆனால் இரண்டாயிரத்தின் தொடக்கத்தில்தான் ஆங்கில வழிக் கல்வியில் பயிலத் தொடங்கியோர் மிகுந்தனர். ஊர்ப் புறங்களிலும்கூட பள்ளி வண்டிகள் புகுந்து புறப்பட்டன.

என்னுடைய ஊரான திருப்பூரையே நான் முதன்மைச் சான்றாகக் கொள்கிறேன். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்து ஐந்தாம் ஆண்டில் நான் இங்கே ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். அப்போது திருப்பூரில் உள்ளோர்க்கான வாய்ப்பாக ஐந்து மேல்நிலைப்பள்ளிகள் இருந்தன. அவை அரசு, நகராட்சி, அரசுதவி பெறுவது எனவாகும். அப்போது தனியார் பள்ளிகள் நான்கு மட்டுமே இருந்தன. ஏறத்தாழ முப்பத்தெட்டு ஆண்டுகள் கழித்து இப்போது பார்க்கிறேன். பழைய பள்ளிகளும் இருக்கின்றன. தொடக்கப்பள்ளிகள் தரமுயர்த்தப்பட்டும் உள்ளன. ஆனால், தனியார் பள்ளிகளை என்னால் எண்ண முடியவில்லை. சுற்றுப்புறங்களில் உள்ளவற்றைச் சேர்த்துக் கணக்கிட்டால் நூற்றினைத் தாண்டலாம். ஒவ்வொரு தனியார் பள்ளி வளாகத்திலும் பேருந்து நிலையத்தில் நிற்பதனைவிடவும் மிகுதியான எண்ணிக்கையில் மஞ்சள் பேருந்துகள் நிற்கின்றன. அவ்வளவு வளர்ச்சியும் அப்பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி பயின்று வெளியேறிய பெருந்திரளானவர்களோடு தொடர்புடையது.

அவர்களே இன்று கல்லூரிக்குப் போய்ப் பயின்று இளையோராய் வளர்ந்து நிற்பவர்கள். பணி வாழ்வினைத் தொடங்கியவர்கள். திருமண அழைப்பிதழ்களில் பெயரேறுபவர்கள். வீட்டிலும் வெளியிலும் நட்பு வட்டாரத்திலும் பேச்சுத் தமிழில் புழங்கியவர்கள்தாம் அவர்கள். ஆனால், பள்ளிப் பாடங்களை ஆங்கிலத்தில் படித்து ஆங்கிலத்தில் தேர்வெழுதியவர்கள். தமிழில் பேசினால் தண்டமுண்டு என்கின்ற மொழி அடக்குமுறை நிலவிய பள்ளிகளில் தமிழைத் தவிர்க்கப் பழகி ஆங்கிலத்தில் திணறிக் கற்றவர்கள்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ‘பாய்ஸ்’ திரைப்படம் வெளியான வேளையில் திரைப்படங்களுக்குத் தமிழில்தான் தலைப்பு வைக்கவேண்டும் என்று சிறுபோராட்டம் நடந்தது. அவ்வமயம் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் தலைப்புகள் சிலவற்றைப் பாருங்கள் : வின்னர், சக்சஸ், ஸ்டூடண்ட் நெம்பர் ஒன், ஐஸ், பைவ்ஸ்டார், ஆல்பம், கிங், ரெட், பிரண்ட்ஸ், சிட்டிசன், ஜூனியர் சீனியர், லவ்லி. அவ்வெதிர்ப்புக் குரலுக்குப் பிறகே தமிழில் பெயரிட்டால்தான் வரிவிலக்கு என்று அரசினர் முன்வந்தனர். அது வரையறை ஓரளவு பயன் தந்தது. இப்போது என்னாயிற்று என்றே தெரியவில்லை.

அக்காலத்தில் ‘வின்னர்’ என்கின்ற பெயருள்ள திரைப்படத்தைப் பார்த்து வடிவேலு நகைச்சுவையில் திளைத்துச் சிரித்த சிறார்கள் அச்சொல்லை எப்படித் தம் வாழ்விற்கு வெளியே எடுத்து வைக்கமுடியும் ? அதற்கு மாற்றான தமிழ்ச்சொல் - வெற்றியாளன் என்கின்ற சொல் - அவர்கள் வாழ்க்கையில் எப்போதாவது உள்ளே நுழைய முடியுமா ?

இதற்கு மாற்றாகத் தமிழ் மறுமலர்ச்சி நிலவிய அறுபது எழுபதுகளை நினைத்துப் பாருங்கள். படிக்காத மேதை படகோட்டி குடியிருந்த கோவில் இருவர் உள்ளம் தாமரை நெஞ்சம். இக்காலத்தவர்க்கு இது ஏதோ கவிதைத் தொடர்போலத் தோன்றலாம். இவைதாம் அன்றைய காலத்துத் திரைப்படத் தலைப்புகள். அத்தலைப்புகளே நம் தாய் தந்தையர் நினைவில் வாழ்பவை. அவர்களுடைய வாழ்க்கையில் தமிழ் எவ்வாறு நினைவில் கலந்திருக்கும் ? ஆங்கிலத் தலைப்பில் திரைப்படம் பார்த்தவர்களின் நினைவு எவ்வாறு இருக்கும் ?

மொழியை வளர்ப்பது திரைப்படங்களின் வேலையில்லை என்று சிலர் சொல்லக்கூடும். குமுகாயப் போக்குகள் எவ்வாறு செல்கின்றனவோ அவற்றைப் படம்பிடித்துக் காட்டுவதே திரைப்படம் என்பர். ஆள்நடத்தை முதல் அவர்கள் பேச்சு வரைக்கும் அப்படியே இருந்தாகவேண்டுமே எனலாம். அவர்களைப் பார்த்து நாம் நெஞ்சுயர்த்திக் கேட்கவேண்டும். தலைப்பில்கூட இடமில்லாதபடிக்கா மொழியைத் தள்ளி வைப்பது ? (தொடரும்)

தொடரின் முதல் கட்டுரையைப் படிக்க..!

இன்றைய இளையோர் என்று யாரைக் குறிப்பிடலாம் ? https://bit.ly/COLE01