Child with mother Image by Марина Вельможко from Pixabay
சிறப்புக் களம்

குழந்தையின் தாய்மொழி மனம் சுக்குநூறாக உடையும் இடம்

எழுத்தாளர் , கவிஞர் மகுடேசுவரன் எழுதும் புதிய தொடர் - இளையோர் மொழிக்களம் பாகம் 11

மகுடேசுவரன்

குழந்தைக்கு யார் மொழியைக் கற்றுக்கொடுக்க வேண்டும் ? தாய்தான் கற்றுக் கொடுக்கவேண்டும். அக்குழந்தையின் உற்றார் உறவினர் கற்றுக் கொடுக்கவேண்டும். பெற்றோர்தான் ஒரு குழந்தையின் உலகம். பெற்றோர்க்கு வெளியே ஓர் உலகம் இருப்பதனை அக்குழந்தை வளர வளரத்தான் கற்றுக்கொள்கிறது. அது பேசும் மொழிச் சொற்களைப் போலச்செய்து பயில்கிறது. தாய் தந்தை வாய்ச்சொற்களைக் கேட்டும் கண்டும் ஒலிக்கப் பழகுகிறது. மொழிபோல் ஒன்றைக் குழறும்போது வாரியெடுத்துக் கொஞ்சுகிறோம். குழந்தையின் முதன்மொழி பெற்ற பெருமையைப்போல் உலகின் எந்த மொழியும் பெற்றதில்லை. குழந்தைக்குத் தாயின் வழியே வரும் சொற்கள் அன்பின் வழியே வருபவை. பிறிதொருவரால் குழந்தைக்குக் கற்பித்துவிடமுடியும் என்ற நிலை வருவதற்குப் போதிய காலம் வேண்டும்.

இளையோர் மொழிக்களம்

அம்மா சொன்னால் கேட்டுக்கொள்ளும் குழந்தை அடுத்தவர் சொன்னால் கேட்குமா ? அதற்குச் சிறிது காலத்தைத் தரவேண்டும். யார் சொன்னாலும் கேட்கவேண்டும் என்கின்ற பக்குவத்தை அதன் வளர்ப்பும் காலமும் உருவாக்கும். உயிரினங்களின் அடிப்படை அலகு தாயும் சேயும்தான். ஒரு குழந்தையும் அதன் தாயும் வேறு வேறல்லர். இரண்டு உடல்களோடு தனித்திருந்தாலும் அவர்கள் இருவரும் ஒருவரே. தாய்க்கும் பிள்ளைக்குமிடையே வேறுபடுத்தல் என்பதே இல்லை. அதனால்தான் தாய்வழியே புகட்டப்படும் ஒவ்வொன்றுக்கும் அந்தக் குழந்தை மதிப்பளிக்கிறது. இங்கே தந்தைக்குக்கூட இரண்டாமிடம்தான்.

இத்தகைய மனப்பாங்கோடு திகழும் குழந்தைக்குக் கற்பிக்கும் உரிமையைக் குழந்தைப்பள்ளி ஆசிரியரிடம் அல்லது ஆசிரியையிடம் வலிந்து கொடுக்கிறோம். இலகு தன்மைக்காக இங்கே குழந்தைக்கு முதலில் வாய்த்தவர் பெண்பாலாகவே இருக்கட்டுமே. ஆசிரியை என்றே எடுத்துக்கொள்வோம். அவர் குழந்தையோடு கொஞ்சுமொழி பேசுபவராக இருப்பாரா ? தன்முன்னே அமர்ந்திருக்கும் இருபது முப்பது இளம்பிள்ளைகளைக் கட்டி மேய்ப்பதற்குச் சிறிதாயினும் கடுமொழி முறையைக் கையாள்வாரா இல்லையா ? அங்கேதான் குழந்தைக்கு இன்னொரு மிரள்வும் தோன்றுகிறது. இன்னொரு மிரள்வு என்று ஏன் கூறுகின்றேன் என்றால் காரணமிருக்கிறது.

Child with mom

நான் முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டபோது என் மிரட்சியெல்லாம் பள்ளிக் கட்டடத்தின்மீதுதான் இருந்தது. அது ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிதான் என்றாலும் அறுபதுக்கு முப்பதாகக் கட்டப்பட்டிருந்த பெருங்கட்டடம். அந்தச் சிற்றூரில் அறுபதுக்கு முப்பது அளவில் கட்டப்பட்டிருந்த ஒரே கட்டடமும் அதுதான். அதன் வாயில்கள் ஏழடி உயரமுள்ளவை. நான்கடி அல்லது ஐந்தடி அகலமுள்ள வாயிலில் இரட்டைக் கதவுகள். அக்கதவுகளை வெளித்திறப்பாக அகலத் திறந்து வைத்திருந்தால் ஆ என்று வாய் பிளந்ததைப்போல் இருக்கும். அவ்வூரில் தலையைக் குனிந்து உள்ளே நுழையத் தக்க கதவு நிலைகள்தாம் இருந்தன. வீடென்று சொல்லப்பட்டது எதுவாயினும் ஒற்றை அல்லது இரட்டை அறைகளால் ஆனது. எனக்கு அந்தப் பள்ளியின் பெருங்கட்டடம் இன்னும் அகலாத குழந்தைக் காலத்து மிரட்சி.

தொலைவிலிருந்து பார்க்கும்பொழுது அங்குள்ள ஆசிரியர் எப்போதும் பிரம்பு ஒன்றைக் கையில் வைத்தபடியே காணப்படுவார். அஃது இன்னொரு மிரட்சி. ஆசிரியர் என்றால் அடிப்பார் என்றே கற்பிக்கப்பட்டது. இன்றைக்கு அத்தகைய அடிகள் இல்லை என்பதற்காக மகிழவேண்டும். “வாத்தியார்கிட்ட சொல்றேன் பாரு. அவருதான் தோலை உரிப்பாரு” என்று சொல்லியே மிரட்டுவார்கள். “பள்ளிக்கூடத்திற்கு அனுப்பின பிற்பாடு உன் வாலுத்தனம் என்னாகுதுன்னு பார்க்கிறேன்” என்றும் சொல்வார்கள். இவ்வாறு அனைத்தும் சேர்ந்து தொகுபட்ட மிரட்சியோடுதான் நான் முதன்முதலாகப் பள்ளிக்குப் போனேன். இது நாற்பதாண்டுகட்கு முந்திய நிலை.

இன்றைய பள்ளிகளின் பெருவளாகப் பேருருவம் சொல்லில் அடங்குவதன்று. பள்ளிகள் கைக்கு எட்டிய நிலத்தை வளைத்துப் போட்டபடி பரந்து விரிந்திருக்கின்றன. அடுக்குக் கட்டடங்களாக விண்ணுரசி நிற்கின்றன. பேருந்து நிலையத்திற்குத்தான் வந்துவிட்டோமோ என்று ஐயுறுமாறு மஞ்சள் பேருந்துகள் பத்து இருபது நிற்கின்றன. இத்தகைய மிரட்சிகளோடுதான் ஒரு குழந்தை பள்ளிக்குள் நுழைகிறது.

அங்கே ஒரு குழந்தைக்குத் தோழமை கிடைக்கத் தொடங்கியதும்தான் அதன் மிரட்சி மெல்ல அகல்கிறது. ஒரு குழந்தையின் அருகில் அமர்ந்திருக்கும் இன்னொரு குழந்தை சிரிக்கத் தொடங்கியதும்தான் போன உயிர் திரும்ப வரும். அருகிலிருக்கும் இன்னொரு குழந்தை அதற்கு விளையாட்டுத் தோழமை. மீண்டும் அதன் விளையாட்டு மனம் உயிர்பெறத் தொடங்குகிறது. விளையாட்டு என்பது குழந்தைத் தன்மையோடு தொடர்புடைய சொல் என்பதற்காகத்தான் இங்கே ஆள்கிறேன். உண்மையில் அது வினைபடு தன்மையைக் குறிக்கிறது. துறுதுறுவென்று இருப்பது குழந்தை இயல்பு. அது வெறுமனே வேடிக்கை பார்க்காது. விளையாடிப் பார்க்கும். வினையில் ஈடுபட்டுப் பார்க்கும். ஆனால், பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தையிடமிருந்து முதலில் பறிக்கப்படுவது விளையாட்டுத்தான். குழந்தையின் செயல்படு தன்மை அறவே முடக்கப்பட்டு அமரவைக்கப்படுகிறது.

எதிரில் நிற்கும் ஆசிரியை அதற்குக் கட்டளைகளையே இடுகிறார். அதுவும் எந்த மொழியில் ? “வா கண்ணு எந்திரி தங்கம்” என்றா ஆங்கிலப் பள்ளி ஆசிரியை பேசுவார் ? “லிசன் சில்ட்ரன். கம் அண்ட் சிட் டவுன்” என்று ஆங்கிலத்தில் உத்தரவு போடுகிறார். அடுத்து ஆங்கிலம் கற்பிக்கிறார். ஆங்கிலத்தில் பேசச் சொல்கிறார். தமிழில் பேசினால் கண்டிக்கிறார். பள்ளியில் சேர்க்கப்பட்டு ஆங்கில வழியில் கற்க அமர்த்தப்படும் குழந்தைக்கு அனைத்தும் மனமருட்சியாக முடிகின்றன. அதன் தாய்மொழிமனம் சுக்குநூறாக உடைகிறது. எப்போது அந்தக் குழந்தை தன் மனத்தைத் தேற்றிக்கொண்டு இயல்பானது என்பது யார்க்கும் தெரியாது.