இரு ஆண்டுகளுக்கு முன்பு (நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக) முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது அரசு குறித்து பல விஷயங்களை குறிப்பிட்ட அவர், பொருளாதார ஆலோசகர்களின் பங்கு பற்றி பேசியதும் முக்கியமானது.
'பொருளாதாரத்தில் மன்மோகன் சிங் அறிஞர், ஆனால் அவர் ஆட்சிக் காலத்தில் எந்த சமயத்தை எடுத்துக்கொண்டாலும் ரகுராம் ராஜன், சி.ரங்கராஜன் உள்ளிட்ட ஆலோசகர்கள் எப்போதும் உடன் இருப்பார்கள். முக்கியமான முடிவை எடுக்கும்போது அவர்களின் கருத்தையும் கேட்டறிவார். ஆனால், தற்போதைய பாஜக அரசு பொருளாதார அறிஞர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. கருத்து வேறுபாடு காரணமாக அரவிந்த் பன்காரியா, அரவிந்த் சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் ராஜினாமா செய்வது வருத்தமளிகிறது' என ப.சிதம்பரம் கூறியிருந்தார்.
இதை நினைவுகூரும் அதேவேளையில், தமிழக அரசு தற்போது நியமித்துள்ள பொருளாதார ஆலோசனைக்கான நிபுணர் குழு தொடர்பாக The Federal தளத்தில் ஆர்.ரங்கராஜ் எழுதிய கட்டுரையின் முக்கிய அம்சங்கள் இதோ...
தமிழக அரசுக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் மற்றும் பேராசிரியர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்றவரும், அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியருமான எஸ்தர் டஃப்லோ, மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் மற்றும் பேராசிரியர் ஜான் ட்ரீஸ், முன்னாள் மத்திய நிதிச் செயலாளர் எஸ்.நாராயண் ஆகியோர் இந்த ஐவர் குழுவில் நியமனம் செய்யப்பட்டிருப்பது தொழில் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
இந்தக் குழுவின் ஆலோசனை மூலம் தமிழ்நாடு ஜிடிபியை உயர்த்துதல், வேலைவாய்ப்பை உருவாக்குவதல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல், தனிநபர் வருமானத்தை உயர்த்துதல் உள்ளிட்ட பல விஷயங்களை செய்ய முடியும் என தமிழக அரசு நம்புகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தொலைநோக்குத் திட்டத்தை அப்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக நீண்ட ஆராய்ச்சியின் அடிப்படையிலே இந்தக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக 'தி ஃபெடரல்' தளத்திடம் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது கோவிட் தொற்று குறைந்திருக்க கூடிய இந்தச் சூழலில், பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. தமிழக அரசு ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையில் இருக்கிறது. இந்தக் கடனை குறைக்க வேண்டும் என்றால் பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் தீர்க்கமாக இருப்பதாகவே தெரிகிறது.
சர்வதேச முக்கியத்துவம் பெற்ற வல்லுநர்களை ஆலோசனைக் குழுவில் நியமித்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டுக்கு சர்வதேச கவனம் கிடைத்திருக்கிறது. இதன்மூலம் அந்நிய நேரடி முதலீட்டை பெறுவதில், முதலீடுகளை ஈர்க்க முடியும். உற்பத்தித் துறை பலமாக இருப்பது மட்டுமல்லாமல், மனிதவளத்திலும் தமிழ்நாடு பலமாக இருக்கிறது. தகவல் தொழில்நுட்பம், சி.ஏ. உள்ளிட்ட பல திறமைகள் தமிழ்நாட்டில் இருப்பதால் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஈர்க்க திட்டமிட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டை முதலீட்டு ஏற்ற மாநிலமாக மாற்றவும் தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது.
அரவிந்த் சுப்ரமணியன் மற்றும் ரகுராம் ராஜன் ஆகியோர் மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மத்திய அரசு பொறுப்பில் இருந்து விலகினார்கள். இவர்களது திறமையை நாடு பயன்படுத்தவில்லை என்னும் கருத்து இருக்கிறது. இந்தச் சூழலில் தமிழக அரசின் ஆலோசனை குழுவில் கொண்டுவந்திருப்பதன் மூலம் சர்வதேச கவனத்தை தமிழ்நாடு பெற்றிருக்கிறது. குறிப்பாக, நிதி சார்ந்த துறையில் சர்வதேச கவனத்தை தமிழ்நாடு ஈட்டி இருக்கிறது.
இவர்கள் இருப்பதால் சர்வதேச அளவில் எங்கும் செல்ல முடியும். தமிழ்நாடு சார்பாக பேசமுடியும். அதன் மூலம் அரசுக்கும் தமிழ்நாட்டுக்கும் நேரடியான பயன் கிடைக்கும் என அரசு நம்புகிறது.
வருமானத்தை உயர்த்துவது, மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியைப் பெறுவது, வளர்ச்சியை உறுதி செய்வது, வேலைவாய்ப்பை அதிகப்படுத்துவது, உற்பத்தித் திறனை மேம்படுத்துவது உள்ளிட்ட பலவற்றுக்கும் ஆலோசனையை வழங்குவது மட்டுமல்லாமல், வளர்ச்சிக்கான தடைகளை தீர்ப்பதற்கும் இந்தக் குழு தன்னுடைய ஆலோசனையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதம், விவசாயம், நீர் மேலாண்மை, கல்வி, நகர்புற மேம்பாடு, பொது சுகாதாரம், கிராமபுற கட்டமைப்பு மற்றும் சமூக நீதியில் பல இலக்குகள் திமுக அரசு திட்டமிட்டிருக்கிறது. மேலும், இரட்டை இலக்க வளர்ச்சி, ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. விவசாயத்தை பொறுத்தவரை வேளாண் பொருட்கள், தேங்காய், சர்க்கரை, பருத்தி மற்றும் சூரியகாந்தி ஆகியவற்றில் இந்தியாவில் முதல் மூன்று இடங்களுக்குள் வர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
இது தவிர கல்வி மற்றும் மருத்துவத்துகான செலவை மும்மடங்காக உயர்த்துதல், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, கிராமப்புறத்தில் குடிநீர் இணைப்பு, கழிவுநீர் வடிகால், வறுமை ஒழிப்பு, விவசாய பயிரிடும் பகுதியை 10 லட்சம் ஏக்கரில் இருந்து 20 லட்சம் ஏக்கராக உயர்த்துதல், 20 லட்சம் கான்கிரிட் வீடுகள், அனைத்து கிராமத்திலும் பிராட்பேண்ட் இணைப்பு ஆகியவற்றுக்கும் திட்டமிட்டப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் இழப்பு மாநில அரசின் லாபமாக மாறியுள்ளது. ரகுராம் ராஜன் மற்றும் அரவிந்த் சுப்ரமணியன் இருவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். பொருளாதாரத் துறை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டை பற்றிய புரிதலும் இவர்களுக்கு இருக்கும் என்பதால் இவர்களால் கூடுதல் பங்களிப்பு வழங்க முடியும். இந்த வகையில் தமிழக அரசின் இந்த நடவடிக்கை சிறப்பானது.
இந்த நகர்வு மூலம் கிடைக்கப் பெறும் தமிழகத்தின் வளர்ச்சி, மத்திய அரசுக்கு நெருடலை கொடுத்தாலும், மத்திய அரசின் இழப்பு என்பது தமிழ்நாட்டின் லாபமாக மாறியுள்ளது நிதர்சனம்.
உறுதுணைக் கட்டுரை: The Federal