ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. வருடந்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் இந்த மாதம் பிரத்யேகமான விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய் என்பது பெண்களுக்கு வரக்கூடிய பெரும்பாலான புற்றுநோய்களில் ஒன்று. இந்த நோய் குறித்த விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் ஆரம்ப கட்டத்திலேயே அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை எடுக்காவிட்டால் உயிரையே பறித்துவிடக்கூடிய கொடிய நோய்களில் ஒன்று இது.
உலக நாடுகளிலேயே இருக்கக்கூடிய பெரும்பான்மையான பிரச்னை என்னவென்றால் பெண்கள் தங்கள் உடல்நலனில் போதுமான அக்கறை செலுத்துவது இல்லை என்பதுதான். பெண்களின் நலன் மற்றும் ஆரோக்கியம் குறித்து பெருமளவில் பேசப்பட்டாலும் சில நோய்களுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தென்படும்போதே பெண்கள் அதை பெரிதளவில் கண்டுகொள்வது இல்லை என்பதுதான் நிதர்சனம். மார்பக புற்றுநோய்க்கான சில ஆரம்பகட்ட அறிகுறிகளை உதாசினப்படுத்தாமல் கவனம் செலுத்தி சிகிச்சை எடுப்பது பெரிய பாதிப்புகளிலிருந்து காப்பாற்றும்.
மார்பக புற்றுநோய் அறிகுறிகள்
1. மார்பக வலி: புற்றுநோய் செல்கள் வளர ஆரம்பிக்கும் தொடக்கத்திலேயே மார்பகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான வலி ஏற்படும்.இது தவிர்க்கக்கூடாத ஒரு முக்கிய அறிகுறி.
2. சிவந்துபோதல் அல்லது தடித்தல்: புற்றுநோய் வந்தால் மார்பகம் சிவந்துபோகும் அல்லது தடிப்பு ஏற்படும். அதனுடன் ஒருவித அரிப்பு உணர்வும் இருக்கும். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிக்கவேண்டும்.
3. கட்டிகள்: மார்பக புற்றுநோய் வந்தவருக்கு இது மிகமிக முக்கியமான அறிகுறிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மார்பகங்களில் தொட்டு பார்க்கும்போது கட்டிகள் இருப்பதுபோன்று தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும். இருப்பினும் எல்லா கட்டிகளும் கேன்சர் கட்டிகள் ஆகாது. அது சாதாரண கட்டியாக இருந்தாலும் உடனடியாக அதற்கு சிகிச்சை எடுக்கவேண்டும்.
4. வீக்கம்: இது கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு அறிகுறி. மார்பகங்களை தொட்டுப் பார்க்கும்போது கட்டிகள் இருக்காது. ஆனால் மார்பகம் வீங்கி இருக்கும். இதனால் ஒருவித வலியும் ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிக்கவேண்டும்.
புற்றுநோய்க்கான அடிப்படை காரணிகள்:
இதுதவிர, மாதவிடாய் சீக்கிரமே ஏற்படுதல், மெனோபாஸ் என்ற மாதவிடாய் நிற்றல் நிலை மிகவும் தாமதமாதல், 30 வயதுக்கு மேல் முதல் குழந்தை பெறுதல், குழந்தைக்கு பால் கொடுக்காமல் தவிர்த்தல் ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் சற்றே அதிகமாக இருக்கலாம் என்பது மருத்துவர்களின் கருத்து. தவிர, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்ணுதல், உடற்பயிற்சி செய்யாதது, மது மற்றும் புகைப்பழக்கம் , உடல் பருமன் ஆகியவை மற்ற புற்றுநோய்களைப் போலவே மார்பகப் புற்றுநோய்க்கும் காரணமாக இருக்கலாம் என்பதால் இவற்றை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.