சிறப்புக் களம்

ரபேல் விமான ஊழல் - இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகள்

ரபேல் விமான ஊழல் - இரண்டு முக்கிய குற்றச்சாட்டுகள்

webteam

ரபேல் விமான ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி 2 முக்கிய குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. முதல் குற்றச்சாட்டு விமானங்களை வாங்குவதற்காக கொடுக்கப்படும் தொகை , மற்றொன்று டசால்ட்ஸ் நிறுவனத்தில் இந்திய பங்குதாரராக அனில் அம்பானியை தேர்வு செய்தது. 

ரூ.21 ஆயிரம் கோடி அதிகப் பணமா ? 

காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர்கள் கூறும்போது “காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 126 ரபேல் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி 126 விமானங்களை வாங்க ரூ. 79200 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது ; அதன்படி பார்க்கும் போது 36 விமானங்களை வாங்க வெறும் ரூ.22600 கோடி மட்டுமே ஆகும். ஆனால் தற்போது 36 ரபேல் விமானங்களை வாங்க மத்திய அரசோ ரூ58 ஆயிரம் கோடி ரூபாயை செலவிட உள்ளது, இந்த தொகை காங்கிரஸ் இறுதி செய்ததை விட ரூ. 21 ஆயிரம் கோடி அதிகம்” என்கின்றனர். 

ஆனால் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பதிலளிக்கும் போது “காங்கிரஸ் கட்சி ஆட்சிக் காலத்தில் ஒப்புக் கொண்ட தொகையை விட 20 சதவீதம் குறைந்த தொகையிலேயே விமானங்கள் வாங்கப்படுகின்றன. 2007-ல் அடக்க விலை என்பது 2017-ம் ஆண்டை விட மிகக் குறைவு. எதை எதோடு ஒப்பிட வேண்டும் என தெரிய வேண்டும்” என்றார் 


அனில் அம்பானிக்கு கொடுக்க அழுத்தமா ?

2016-ல் விமானங்களை வாங்குவதற்கான முன் பணம் கொடுக்கப்பட்டதும் 2017-ல் அனில் அம்பானியின் நிறுவனத்தோடு டசால்ட்ஸ் இணைந்து செயல்படும் வகையில் ஒப்பந்தம் போடப்படுகிறது. ஆனால் அனில் அம்பானியை தேர்வு செய்ய மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. குறிப்பாக நஷ்டத்தில் இயங்கும் அம்பானியின் நிறுவனத்தை தேர்வு செய்திருப்பதை விட, அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் மூலம் இதனை செய்திருக்க முடியும் என்றும் காங்கிரஸ் கூறுகிறது. 

இதனை மத்திய அரசு மறுத்து வந்த நிலையில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே ( ரபேல் ஒப்பந்தம் இவரால் இறுதி செய்யப்பட்டது) மீடியா பார்ட் நிறுவனத்துக்கு அளித்த பேட்டு காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்த்தது. அவர் கூறும் போது “ ரபேல் விமானங்களை வழங்க, இந்திய பங்காளராக அனில் அம்பானியை தேர்வு செய்வதை விட வேறு எந்த வாய்ப்பும் எங்களுக்கு கொடுக்கப்படவில்லை” என்றார். 

ஆனால் டசால்ட்ஸ் நிறுவனமோ, தாங்களே அனில் அம்பானியை தேர்வு செய்ததாகவும், இதில் இந்தியாவில் இருந்து எந்தவிதமான தலையீடும் இல்லை என்றும் கூறியது. தற்போது மத்திய அரசு சார்பில் ராபர்ட் வதராவின் நண்பருக்கு இந்த வாய்ப்பை வழங்காததால், இது போன்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் கூறுகிறது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.