சிறப்புக் களம்

காவிரியை வைத்து தென் மாநிலங்களின் ஒற்றுமையை குலைக்கிறதா மத்திய அரசு?

காவிரியை வைத்து தென் மாநிலங்களின் ஒற்றுமையை குலைக்கிறதா மத்திய அரசு?

rajakannan

காவிரி பிரச்னையில் தமிழகமே போராட்டக் களமாக மாறியிருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை தவிர மற்ற எல்லா கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆளும் அதிமுகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது. முக்கிய எதிர்க்கட்சிகள் ஒருபுறம் சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை கையிலெடுத்து போராடி வருகின்றன. தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் வரிகொடா போராட்டம், மத்திய அரசுக்கு ஒத்துழையாமை போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை செய்து வருகின்றன. அரசியல் கட்சிகள் தாண்டி மக்கள் மத்தியிலும் இந்தப் போராட்டத்திற்கு வரவேற்பு உள்ளது. சில தனியார் பள்ளி ஆசிரியர்களே இன்று போராட்டத்தில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. 

ஆனால், மத்திய பாஜக அரசு மட்டும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறைவேற்றி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து இருந்தால் இந்தப் போராட்டங்களுக்கு எல்லாம் அவசியமே ஏற்பட்டிருக்காது. அப்படி நடந்திருந்தால்  இன்றைய நிலையே வேறு. இவ்வளவு மெனக்கெட்டு போராட்டங்கள் நடத்த வேண்டியதேயில்லை.

ஆனால், 6 வாரங்கள் காத்திருந்த மத்திய அரசு காலக்கெடு முடிந்து மார்ச் 31 ஆம் தேதி உச்சநீதிமன்றத்திடம் சென்று தங்களுக்கு சந்தேகம் என்று நின்றிருக்கிறது. 42 நாட்கள் முழுமையாக காத்திருந்து பின்னர் சந்தேகம் என கூறுவது ஏற்புடையதாக தெரியவில்லை. காலக்கெடுவுக்குள் தீர்ப்பை அமல்படுத்தாமல் தாமதப்படுத்தியிருப்பது மாநிலங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவிலே அது வெளிப்படுகிறது. ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டு மட்டுமல்ல,  மாநிலங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளதாக சுட்டிக் காட்டியும் இந்த மனுவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. கர்நாடகாவுக்கும், தமிழகத்திற்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததால் தான் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. எல்லா விசாரணைகளும் முடிவடைந்து எல்லா தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகுதான் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்திருக்கிறது. தீர்ப்பு அளித்த பிறகு அதனை அமல்படுத்துவதை விடுத்து, மீண்டும் மாநிலங்கள், தீர்ப்பில் மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கிறது என்று கூறுவது என்பது எப்படி நியாமான வாதமாகும். இன்று புதுச்சேரி அரசு உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளது. இதோடு சேர்த்து நான்கு மாநிலங்களும் மனுத்தாக்கல் செய்துவிட்டது. இதனை தான் மத்திய அரசு எதிர்பார்க்கிறதா என்று தெரியவில்லை.

கால் நூற்றாண்டாக நீடித்த காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னையில் உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அளித்தது. காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பில் தமிழகத்திற்கு தண்ணீர் குறைத்ததை தவிர மற்ற அனைத்தும் அப்படியே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றுதான் தீர்ப்பில் சொல்லப்பட்டது. அந்தத் தீர்ப்பில், மேல்முறையீடு கிடையாது, 15 வருடங்களுக்கு இதே தீர்ப்புதான், 6 வாரங்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்தது. இப்படி கறாராக தீர்ப்பு வழங்கிய போதும் மீண்டும் இந்த விவகாரத்தை மத்திய அரசு நீதிமன்றம் நோக்கி கொண்டு சென்றுள்ளது. 

மத்திய அரசின் தாமதப்படுத்துவதன் விளைவு தமிழகத்திலும் அதனை தொடர்ந்து கர்நாடகாவிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இன்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் முழு வீச்சில் நடைபெற்ற அதேநேரத்தில் கர்நாடகாவில் இருந்து பேருந்துகள் தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை. திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று பந்த் நடைபெற்றது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளின் தொடர் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எல்லை அடைப்புப் போராட்டத்தை நடத்தினார். அதேபோல், ஏப்ரல் 12ம் தேதி கன்னட அமைப்புகள் சார்பில் பந்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தின் போராட்டங்களால் பதட்டமடைந்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்து விடக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால், மீண்டும் தமிழகம் கர்நாடகம் இடையே பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. 

சமீப காலமாக ‘தென் இந்திய மாநிலங்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது’ என்று 6 மாநிலங்களும் கூட்டாக குரல் எழுப்பி வந்தன. திராவிட நாடு விவாதம் கூட எழுந்தது. தென் மாநிலங்களிடம் பெறப்படும் நிதியை மத்திய அரசு வடமாநிலங்களுக்கு வாரி வழங்குவதாக ஒருமித்த குரலில் கூறினார்கள். அதேபோல் தான் இந்தி திணிப்பு எதிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும் ஒருமித்த கருத்து இருந்தது. ஆனால், இன்றோ காவிரி பிரச்னையில் மீண்டும் தென் மாநிலங்களிடையே மோதல் போக்கு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் தான் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தென் மாநிலங்களிடையே நதி நீர்ப் பங்கீட்டைத் தவிர வேறு எந்தப் பிரச்னையும் இல்லை என்ற கருத்தை அவர் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் விளையாட்டை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் அண்டை மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையை தீர்த்து வைக்காமல் அதை வளர்ப்பதிலேயே மத்திய அரசு மும்முரமாக இருக்கிறது. தென் மாநில நதிகளை இணைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். அதோடு, தமிழகத்திற்கும் ஆந்திரத்திற்கு சுமூகமான உறவு இருப்பதாகவும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளது வரவேற்கதக்க கருத்து.

மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் தமிழகம் உள்ளிட்ட எல்லா மாநிலங்களின் விருப்பம். ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறும் விசாரணையில் மீண்டும் கால அவகாசம் கேட்டால் அது மேலும் பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும். அதேபோல், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நாளைதான் கடைசி நாள். உண்மையில் மத்திய அரசுக்கு தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல் இருந்திருந்தால் கூட்டத்தொடரின் போது ஒருநாள் விவாதம் கூட நடத்தியிருக்கலாம். ஆனால் அதனையும் நடத்தவில்லை. 

மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதே அணுகு முறையை தான் கையாளுகிறது. காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தியில் தான் மக்கள் பாஜக அரசுக்கு வாக்களித்துள்ளார்கள். அதனால், இது நீண்ட காலமாக உள்ள பிரச்னை பொறுமையாகதான் செயல்படுத்த முடியும் என்ற வாதங்களை பாஜக அரசு தவிர்க்க வேண்டும். பதட்டங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.