சிறப்புக் களம்

உ.பி. தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் - 5 மாநிலங்களில் தீவிரம் காட்டும் பாஜக

உ.பி. தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் - 5 மாநிலங்களில் தீவிரம் காட்டும் பாஜக

நிவேதா ஜெகராஜா

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கு, கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை நியமித்துள்ளது பாஜக. இதேபோல் பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது.

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், 2024-ஆம் வருட மக்களவைத் தேர்தலில் சூழல் எவ்வாறு இருக்கும் என்பதை காட்டும் முன்னோட்டமாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதை கருத்தில்கொண்டு, பாரதிய ஜனதா கட்சி முன்கூட்டியே தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது.

அயோத்தி நகரில் புதிய ராமர் கோயில் கட்டப்படுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் இடம்பெறும் என முக்கிய கட்சிகள் கணித்துள்ளன.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரான தர்மேந்திர பிரதான் பாஜக தலைமையால் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அனுராக் தாகூர், ஷோபா கரண்ட்லஜே மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் தலைமையில் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள் என பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.

பாஜகவில் வளர்ந்து வரும் இளைய தலைவர்களில் தர்மேந்திர பிரதானும் ஒருவர் என்பதும், சமீபத்தில் இவருக்கு மத்திய அமைச்சரவையில் புதிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் மாநிலத்திற்கு பொறுப்பாளராக பாரதிய ஜனதா கட்சி மத்திய அமைச்சரான கஜேந்திரன் சிங் செகாவத்தை தேர்ந்தெடுத்துள்ளது. மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி மற்றும் மீனாக்‌ஷி லேகி ஆகியோரும் செகாவத் தலைமையில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள் என பாஜக தலைமை முடிவு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் இந்த முக்கிய முடிவுகளை இறுதி செய்துள்ளதாக பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆரம்ப கட்டத்தில் இருந்து கட்சி தீவிர பணியாற்ற வேண்டும் என பாஜக தலைமை வலியுறுத்தியுள்ளது.

உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோசியை பாரதிய ஜனதா கட்சி நியமித்துள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லோகெட் சாட்டர்ஜி மற்றும் ஆர்.பி.சிங் ஆகியோரும் உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்திற்கு மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளராக பாஜகவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு பீகார் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக பொறுப்பாளராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சி முன்கூட்டியே தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்பதற்காக ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு பொறுப்பாளர்களை அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடுவார் என பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் கருதுகிறார்கள். உத்தரப் பிரதேச தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால் பாஜக மாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க வாய்ப்பு அமையும். அதேபோல், அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலிலும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் அதிக பலத்தை பெறுவது உதவிகரமாக இருக்கும்.

ஆரம்பக் கட்ட தேர்தல் கணிப்புகளின்படி பாரதிய ஜனதா கட்சிக்கு உத்தரப் பிரதேச மாநிலத்தில் வெற்றி வாய்ப்பு உள்ளது எனக் கருதப்பட்டாலும், போட்டி கடுமையாக இருக்கலாம் என்கிற கருத்தும் வலியுறுத்தப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தன்னுடைய ஆதிக்கத்தை விரிவாக்கம் செய்யும் என்றும், காங்கிரஸ் பலவீனமாக உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது எனவும் கருதப்படுகிறது. அதேபோல், கோவா மாநிலத்திலும் சிறப்பான தாக்கத்தை உண்டாக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கேஜ்ரிவால் முயற்சி செய்து வருகிறார். உத்தராகண்ட் மாநிலத்திலும் அந்தக் கட்சி ஆரம்பம் முதலே தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட முதல்வர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவித்துள்ளது.

- கணபதி சுப்பிரமணியம்