சிறப்புக் களம்

'ஹிமாந்தா வர்றாரு... விடியல் தரப் போறாரு..!' - அசாம் பாஜகவுக்குள் அடங்காத சலசலப்பு

webteam

அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஒருவேளை மீண்டும் ஆட்சியை பிடித்தால், அந்த மாநிலத்தின் முதல்வராக யாரை அமர்த்துவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது பாஜக. இதற்குப் பின்னால், சுவாரசியமான அரசியல் பின்னணியும் இருக்கிறது.

அசாம் மாநிலத்திற்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் பெரும்பாலான இடங்களை பெற்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைக்கும் என சில கருத்துக் கணிப்புகள் கூறியிருப்பதால், உற்சாகத்தில் உள்ளனர் பாரதிய ஜனதா கட்சியினர். ஆனால், அந்த ஆனந்தம் முழுமை அடையாமல் இருப்பதற்கு காரணம், அம்மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்று எழுந்து இருக்கக்கூடிய கேள்விதான்.

அசாம் மாநிலத்தின் தற்போதைய முதல்வராக சர்பானந்த சோனோவால் இருந்து வருகின்றார். ஆனால், ஒப்பீட்டளவில் பார்த்தால் அவரைவிட அம்மாநிலத்தின் நிதித் துறை, சுகாதாரத் துறை கல்வித் துறை பொதுப்பணித் துறை, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை ஆகிய முக்கிய இலாகாக்களை கையில் வைத்திருக்க கூடிய அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மாதான் மிகவும் பிரபலமானவராக இருக்கிறார்.

ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின சட்டப்பேரவை உறுப்பினராக இருந்ததோடு மட்டுமல்லாமல், முன்னாள் முதல்வர் தருண் கோகாய் அமைச்சரவையில் நிதி, சுகாதாரத் துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களையும் கையில் வைத்திருந்தார்.

பிறகு, அந்தக் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாக தேர்தல் பணியாற்றி, 15 ஆண்டு காலம் ஆட்சியை கையில் வைத்திருந்த காங்கிரஸிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்து பாரதிய ஜனதா கட்சியிடம் ஒப்படைத்தார், ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா. இதனால், அசாம் மாநில மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் பிரபலமான முகமாக கண்டறியப்பட தொடங்கியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் என்ற முறையில் அசாம் மாநிலத்தில் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா ஆற்றிய களப்பணிகள் பொதுமக்கள் மத்தியிலும், கட்சியிலும் அவருக்கான செல்வாக்கை பல மடங்கு உயர்த்தியது. தினமும் பல ஆய்வுகளுக்குப் போவது, ஊடகங்களை சந்திப்பது, அதிகாரிகளுடன் ஆலோசனை ஈடுபடுவது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் வேண்டிய உதவிகளை கேட்டுப் பெறுவது என முதல்வர் சோனவாலை முற்றிலுமாக ஓரம்கட்டிவிட்டு, நொடிக்கு நொடி அவர் காட்டிய அதிரடி பல்வேறு தரப்பினராலும் கவனம் ஈர்க்கப்பட்டது. அந்தத் தருணத்தில் மொத்த அரசு எந்திரத்தையும் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மாதான் நடத்தினார்.

தல்வர் சர்பானந்த சோனோவாலை ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா முந்துகிறார் என்ற பேச்சு வெளிப்படையாகவே எழுந்தது. இது இரண்டு தலைவர்களின் தொண்டர்களிடமும் வெளிப்படையாக புகையத் தொடங்கியது.

தற்போது தேர்தல் காலம் என்பதால், இந்த இடைவெளி மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த மாதம் அசாம் மாநிலத் தேர்தல் தொடர்பான பரப்புரை பாடல் ஒன்றை வெளியிட்டுள்ள ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா, ஆதரவாளர்கள் 'ஹிமாந்தா வர்றாரு விடியல் தரப் போறாரு' என்ற அர்த்தம் கொண்ட பாடலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

தேர்தல் பிரசாரக் கூட்டங்களில்கூட முதல்வருக்கு கூடும் கூட்டத்தைவிட, ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மாவிற்கு அதிகம் கூட்டம் கூடுவதை பார்க்க முடிகின்றது. குறிப்பாக, இளைஞர்கள் 'மாமா' என்ற அடைமொழியுடன் இவரை அழைத்து வருகின்றனர். எளிதாக மக்களை ஈர்க்கக் கூடிய தலைவராக இவர் அறியப்படுவதால், இந்த முறை முதல்வர் பதவி இவருக்கே வழங்கப்படுமென ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

இருப்பினும், வேறு கட்சியில் இருந்து வந்தவர் என்பதனால், முதல்வர் பதவி வழங்குவது உள்கட்சிக்குள் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி விடும் எனவும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுக்குள் சில முரண்பட்ட கருத்துகளும் உள்ளதாக சொல்லப்படுகிறது.

அசாம் மாநிலத்தில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கலவரங்களை உள்துறை அமைச்சகத்தை தனது கையில் வைத்திருந்த முதல்வர் சர்பானந்த சோனோவால் சரிவர கையாளவில்லை என்ற கோபம் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமையில் உள்ளவர்களுக்கே இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே களத்தில் நிற்பவரும், அதிரடி முடிவுகளை உடனடியாக எடுப்பவரும், பொதுமக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு கொண்டவருமான ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மாவை இந்த முறை முதல்வர் ஆகலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

தேர்தலில் போட்டியிடுபவர்கள்கூட முதல்வரின் ஆதரவாளர்களைவிட ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மாவின் ஆதரவாளர்கள்தான் அதிகம் உள்ளனர். எனவே, தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் இவர்கள் போர்க்கொடி உயர்த்துவார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

இப்படி இரு வேறு குழப்பங்கள், முதல்வர் யார் என்பதில் எழுந்திருக்கக் கூடிய நிலையில், 'எதுவாக இருந்தாலும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முடிவு செய்து கொள்ளலாம்; அதுவரை அனைவரும் களப்பணி ஆற்றுங்கள்' என அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அசாம் மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களை நேரடியாகவே கேட்டுக் கொண்டிருப்பதாக டெல்லி பாஜக வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன.

அசாம் மாநிலத்தின் அடுத்த முதல்வராக அமரப்போவது சர்வானந்த் சோனவாலா அல்லது ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மாவா என்ற கேள்விதான் தற்பொழுது அசாம் மாநிலத்தின் மிகப் பிரதான விஷயமாக மாறியிருக்கிறது.

- நிரஞ்சன் குமார்