கேரளாவில் உள்ள ஒரு ரயில்வே பாதையை ஒட்டிய சிற்றூர் அது. ஒரே ஒரு ஒத்தையடி பாதை. சுற்றிலும் நெருக்கடியான வீடுகள். அவசரத்துக்கு ஆம்புலன்ஸ்கூட வீட்டை நெருங்க முடியாத அளவுக்கு எல்லைச்சாமிகளாக வீற்றிருக்கும் கல்சுவர்கள். திருமணமோ, இறப்போ, எது நடந்தாலும் அந்த குறுகிய ஒத்தையடி சாலையில் தான் செல்லவேண்டும். அப்படி, பைக்கில் சென்றால் கூட சந்துகள் சத்தமிடும் அந்த ஊரில், வசிக்கும் பீமன்(குஞ்சாக்கோ போபன்) ஒருநாள் தன் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறான்.
உள்ளூர் கவுன்சிலர் ஒருவர் இந்த பிரச்னையை மீண்டும் தூசி தட்ட, சாலையை விரிபடுத்தும் முயற்சிகளில் களமிறங்குகிறான் பீமன். இந்த முயற்சிகளுக்கு போடப்படும் முட்டுக்கட்டைகளால் பீமன் முடங்கி போனானா? அல்லது முட்டி மோதினானா? என்பதே 'பீமன்டே வழி' திரைப்படம். கடந்தாண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான இந்த படத்தை, தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காண முடியும்.
பீமனாக குஞ்சாக்கோ போபன், தன் கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பீமனைப்பொறுத்தவரை ஊருக்காக உழைக்கும் நல்லவர் மட்டுமல்ல, மாறாக உமனைசரும் கூட. ஹீரோ கதாபாத்திரத்துக்குள் டார்க் கலரையும் சேர்த்து கதாநாயக புனித்தன்மையின் டெம்ப்ளேட்டை கேள்விக்குள்ளாக்கும் முயற்சி.
படத்தில் குறிப்பிட வேண்டியமற்றொரு கதாபாத்திரம் ஜினு ஜோசப். நகைச்சுவைக்கலந்த வில்லனாக கலக்குகிறார். கிளைமேக்ஸ் காட்சிகளில் ஃப்ரேம் முழுக்க ஜினு மட்டுமே தெரிகிறார். மற்றபடி, சூரஜ் வெஞ்சரமூடு சொற்ப காட்சிகள் வந்தாலும், அப்லாஸ் அல்லுகிறார். செம்பன் வினோத், தனது கதாபாத்திரத்தை எழுதிய விதத்தில் இன்னும் மெருகேற்றியிருக்கலாம் என தோன்றுகிறது.
படம் முழுக்க நிறைய கதாபாத்திரங்கள் வந்துசெல்கின்றன. அந்த கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் தனித்தன்மையால் வேறுபடுத்திக்காட்டப்படுகின்றன. எழுதப்பட்ட கதாபாத்திரங்கள் வெறுமே காட்சிக்கு வந்து செல்வபர்கள் இல்லை. ஏதோ ஒருவித்தத்தில் கவனம் பெறுகின்றன. உதாரணமாக, தனது தோளில் எப்போதும் ஒரு பறவையை சுமந்துசெல்லும் ஒருவர், எப்போதும் ஹெல்மேட் அணிந்து கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஒருவர்,சூப்பர் ஹீரோ உடையில் வலம் வரும் சிறுவன், எந்நேரமும் மதுபோதையில் இருக்கும் பினு பப்பு கதாபாத்திரம் என எழுத்தில் கவனிக்க வைத்திருக்கிறார் செம்பன் வினோத்.
குறிப்பாக கதாநாயகன் பீமனின் பக்கத்து வீட்டுக்காரர் நசீர் சங்கராந்தி (Naseer Sankranthi) தன் நாய் ஜாக் மீது வெறித்தனமான அன்பு கொண்டவர். வெளியே அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் நாயிடம் அனுமதி கேட்கிறார். சில இடங்களில் நாயை திட்டி சர்காஸம் செய்யும் காட்சிகள் என ரசிக்க வைக்கிறது. ஆனால், மற்றொருபுறம் விலங்கு பிரியர்களை கேலி செய்யும் வகையான பார்வையும் கூடவே இருக்கிறது. அதேபோல தெலுங்கு சினிமாவை கலாய்க்கும் வகையான கதாபாத்திரமும் வந்து செல்கிறது.
படத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், இரண்டு பெண் கதாபாத்திரங்கள் மது அருந்துவதை விரும்புகிறார்கள். 'இங்க பப் இருக்கா?' என மேகா தாமஸ் கேட்க, 'எதுக்கு?' என்ற பீமனின் கேள்விக்கு, 'சாமி கும்பிட' என சர்காசஸம் செய்கிறார் மேகா. அவரை பாருக்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் என சமூகம் கட்டமைத்திருக்கும் சில ஸ்டிரியோடைப்புகளை உடைக்கும் செம்பன் வினோத்தின் எழுத்து வரவேற்கத்தக்கது.
அதேபோல, படத்தில் சொல்லப்படாத காதல்கள், ஒருதலைக்காதல்கள் என ஆங்காங்கே இழையோடுவது ரசிக்க வைக்கிறது. படத்தின் மற்றொரு ப்ளஸ் அதன் கிளைமேக்ஸ் காட்சிகள் தான். இறுதியில் எதிர்பாராமல் நடக்கும் நிகழ்வு அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும்போது, அதுவரை சற்று சோர்வடைந்த திரைக்கதை சூடுபிடித்து வேறொரு தளத்திற்கு கொண்டு செல்கிறது. அந்த வகையில் கிளைமேக்ஸ் காட்சிகள் ஸ்கோர் செய்கின்றன.
இறுதியில் இந்த கட்டுரையைப்போலத்தான் படத்தின் நீளமும் நம்மை சோதிக்கிறது. இன்னும் குறைத்து சுருக்கி, 'ஷார்ட் அண்ட் ஸ்வீட்' பாணியில் சொல்லியிருக்கலாமே என்ற தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. சில இடங்களில் திரைக்கதையில் தேக்கம் தென்படுவது வெளிப்படையாகவே தெரிகிறது. தவிர, கிரிஷ் காங்காதரனின் ஒளிப்பதிவுக்கு படம் பெரிய அளவில் வேலை வைக்கவில்லை. தனக்கான ஸ்பேஸ் உள்ள இடத்தை அவர் சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.
உதாரணமாக, பிணத்தை சுமந்துகொண்டு செல்லும் ஒரு காட்சியில், இறந்தவரின் கால்களில் மரத்தின் இலை, தழைகள் தட்டுப்படும். அவர்கள் வாழும் இடம் எத்தனை குறுகலானது என்பதை காட்சி வழி கடத்தியிருக்கும் விதம் பாராட்டகூடியது. காதல் காட்சிகளில் வரும் இசை கவனிக்க வைக்கிறது. எடிட்டர் தாராள மனப்பான்மையை கைவிட்டு தனது கத்திரிக்கு கூடுதல் வேலை வைத்திருக்கலாமே!
மொத்தத்தில் 'பீமன்டே வலி' தலைவலியெல்லாம் இல்லை. சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும்!