சிறப்புக் களம்

பாரதியாரா? தாகூரா? : தேசிய கவி யார்? - பாகம் 1

webteam

பாரதியின் 135ஆவது பிறந்தநாளை மற்றும் ஒரு நாளாகக் கடந்து கொண்டிருக்கிறது தமிழகம். தமிழகத்தில் தேசிய கவி என்று அழைக்கப்படுபவர் மகாகவி பாரதியார். தமிழகம் தவிர்த்த பிற இந்தியப் பகுதிகளில் தேசிய கவி என்றும், கவியரசர் என்றும் போற்றப்படுபவர் வங்காளக் கவிஞர் ரபீந்திரநாத் தாகூர்.

இந்தியா, பங்களாதேஷ் ஆகிய இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களை எழுதிய பெருமையும் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற சிறப்பும் தாகூருக்கு உண்டு. இப்படிப் பல தகுதிகளைப் பெற்ற தாகூரை தேசிய கவி என்று இந்தியாவின் பல மாநில மக்கள் அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்று யாரேனும் கேட்டால் எனது பதில், ‘இவரை அவர்கள் அப்படி அழைப்பது குற்றம் அல்ல, பாரதியாரை அவர்கள் அப்படி அழைக்கும்படி செய்யாததே குற்றம்’.

அந்தக் குற்றமும் பிற மாநில மக்களின் குற்றம் மட்டுமே கிடையாது, அதில் தமிழர்களாகிய நமக்கும் பங்கு உண்டு. அந்தக் குற்றத்தை உணரக்கூட முடியாதவர்களாக இன்றைய தமிழர்கள் இருப்பது, குற்றங்களில் எல்லாம் பெருங்குற்றம்!.
தாகூர் கவியரசர் என்று அழைக்கப்பட்ட காலத்தில், ‘தான் அந்தப் பட்டத்திற்குத் தகுதியானவன்’ என்ற எண்ணம் பாரதிக்கு இருந்தது.

‘புவியனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்துத் தமிழ் மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லை எனும் வசை என்னால் கழிந்ததன்றே’ – என்று தன்னைத் தமிழ்நாட்டின் கவியரசராகக் கொண்டு பாரதியார் பாடிய வரிகள் இதனைக் காட்டும்.

தாகூருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது, தாகூரை அறிந்திருந்த பாரதியார், ‘மதுரை தமுக்கம் மைதானத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்டி, நானும் தாகூரும் பேசினால், யாருக்கு கைத்தட்டல் அதிகம் கிடைக்கிறதோ அவருக்கு நோபல் பரிசு கொடுக்கட்டும்’ என்றார். இந்தச் சவாலின் பின்னே, தனது தகுதிக்கு கிடைக்காத ஒன்று தாகூருக்கு கிடைத்ததில் பாரதி அடைந்த மன அழுத்தம் வெளிப்படுகின்றது, அவர் அதற்கு தகுதியானவர்தான். ஆனால் அத்தகைய பாரதியாரை அவரது சமகாலத்தில் வாழ்ந்த தாகூர் அறிந்திருப்பாரா என்பதே சந்தேகம்தான்!. இன்றும் இந்தியாவின் பல பகுதிகளில் பாரதியாரை யார் என்றே மக்களுக்குத் தெரியாது. பிறருக்குச் சொல்வதற்காவது பாரதியாரைப் பற்றி நாம் முதலில் அறிந்து கொள்வோம். யார் பாரதி? யார் தாகூர்? இவர்களில் யார் தேசியகவி என்ற பட்டத்திற்குப் பொருத்தமானவர்?

பாரதியாரின் வருகை, தற்காலத் தமிழ் இலக்கணத்தின் முகத்தையே மாற்றிய மாபெரும் நிகழ்வு. இன்றைய புதுக்கவிதைகள் முதல் சிறுகதைகள், மொழிப்பெயர்ப்புகள் வரையில் பாரதி காட்டிய வழியில்தான் தமிழ் பயணம் செய்து கொண்டிருக்கின்றது. தனது வடிவங்களில் மட்டுமல்ல கருத்துகளிலும் பாரதி செய்த புதுமைகள் மெச்சவும் வியக்கவும் தக்கன. சமரசம் இல்லாத எப்புறமும் ஒட்டாத பாதரச எழுத்துக்கள் பாரதியாருக்கே சொந்தம். அதனால்தான் பாரதியின் பிறப்பை, எட்டையபுரத்திலே இரட்டைப் பிரசவம், ஒன்று பாரதி, மற்றொன்று புதிய தமிழ் – என்று கவிகோ அப்துல் ரகுமான் போற்றினார். இந்தத் தமிழ் தனது பிறப்பிலும் கொண்டாடப்படவில்லை, வாழ்விலும் கொண்டாடப்படவில்லை, இறந்த பிறகும் அதற்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை.

எட்டையபுரத்தில் ஒரு சராசரி பிராமணக் குடும்பத்தில் பாரதியார் பிறந்தார். இளம் வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்து வறுமையில் வளர்ந்தார். கல்வியின் மேல் தாகம் கொண்டு கற்பதிலேயே தனது இளமையைச் செலவிட்டார். கல்வி கை கூடியபோது, தனது அறிவு வளர்ச்சியை செல்வம் சேர்க்கப் பயன்படுத்தாமல், சமூக வளர்ச்சிக்கும் மாற்றத்திற்குமே அவர் பயன்படுத்தினார். தனது எழுத்துக்கள் மூலம் தமிழ் மொழி அதற்கு முந்தைய 800 ஆண்டுகளில் கண்டிருந்த மாபெரும் தேக்கத்தை பாரதியார் போக்கினார் (பாரதிக்கு முன்பு வள்ளலாரே இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்ட ஒரே நபர்!). மிகக் குறுகிய காலமே பாரதியார் இந்த மண்ணில் வாழ்ந்தார். வாழும் காலத்தில் தனக்கு உரிய அங்கீகாரங்களில் ஒரு பங்கைக்கூட பாரதியார் பெறவில்லை.

பாரதிக்கு பல விஷயங்களில் அடிப்படையிலே நேரெதிரானது தாகூரின் வாழ்க்கை. பாரதியார் பிறப்பதற்கு 21 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து, பாரதியார் இறந்த பிறகு அடுத்த 20 ஆண்டுகள் கழித்து இறந்த நிறை வாழ்வுக்கு சொந்தக்காரர் தாகூர். பல கிராமங்களை உரிமையாகக் கொண்ட செல்வச் செழிப்புள்ள வங்காளக் குடும்பத்தில் இவர் பிறந்தார். தாகூரின் தாத்தா துவாரகநாத் தாகூர் உடன்கட்டையைத் தடை செய்து சட்டம் இயற்ற இராஜாராம் மோகன்ராய் உடன் கைகோர்த்துப் போராடியவர். தாகூரின் தந்தை தேவேந்திரநாத் தாகூர் தன்னளவிலேயே நிரம்பக் கற்றவர். வங்காளிகளால் ‘மகரிஷி’ என்று அழைக்கப்பட்டவர். தன் தந்தையிடமிருந்தே தாகூர் வேதங்களையும் உபநிடதங்களையும் கற்றார். பள்ளி சென்று படிப்பதில் தாகூருக்கு விருப்பம் இல்லாமல் போக, அவரது வீட்டுக்கே ஆசிரியர்கள் அழைத்து வரப்பட்டு அவருக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டன.

இப்படியாக சமூகத்தின் இருவேறு பக்கங்களில் இருந்து இந்த இரண்டு கவிஞர்களும் உதித்து இருந்தார்கள். இவர்களை இவர்களது முயற்சிகளை மட்டுமல்ல, எண்ணங்களையும் அடிப்படையாகக் கொண்டே நாம் மதிப்பிட வேண்டும். 
தனது இந்தியத் தாயை ‘முப்பது கோடி முகமுடையாள்’ என்று எழுதியவர் பாரதி. அன்றைய இந்திய நாட்டின் மக்கள் தொகை 30 கோடி. எனவே மக்கள் அனைவரின் முகங்களையும் அவர் தேசத்தின் முகமாகப் பார்த்தார். தவிரவும் தேசத்தைப் பற்றிக் கூற வேண்டிய தேவை ஏற்பட்ட ஒவ்வொரு இடங்களிலும்,

‘முப்பது கோடி வாய் முழங்கவும்’
‘முப்பது கோடி ஜனங்களின் சங்கமம்’
‘முப்பது கோடியும் வாழ்வோம் – வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்’ – என்பதாக 30 கோடி மக்களும் இணைந்ததே இந்தியா என்ற ஒருமைப்பாட்டு உணர்வையே பாரதியார் வெளிப்படுத்துகிறார். இது அவர் தேசியக்கவி என்று அழைக்கப்படத் தகுதியானவர் என்று காட்டுகின்றது.

இன்னொரு பக்கத்திலே ‘10 கோடி கைகளை உடையவள்’ – என்று தனது சுதந்திர அன்னையை வர்ணித்தவராக உள்ளார் ரபீந்திரநாத் தாகூர். அதென்ன 10 கோடி கைகள் என்று பார்த்தால் அன்றைக்கு ஆங்கிலேயர்களால் இரண்டாகப் பிளவுபட்டுக் கிடந்த வங்காள நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 5 கோடி. எனவே ஒருங்கிணைந்த வங்காளத்தைத்தான் தாகூர் 10 கோடி கைகள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது அவர் வங்காளிகளின் கவியே தவிர தேசியக் கவிஞர் அல்ல என்பதைக் காட்டுகின்றது.

தொடரும்...