சிறப்புக் களம்

செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்

செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்

Sinekadhara

தற்போது தங்கள் செல்லப்பிராணிகள் செய்யும் சுவாரஸ்யமான விஷயங்களை சமூக ஊடங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுவது ட்ரெண்டாகி வருகிறது. பெரும்பாலும் நம் வீடுகளில் நாய், பூனை, கிளி போன்ற உயிரினங்களை செல்லப்பிராணிகளாக வளர்க்கிறோம். வெளிநாடுகளில் பாம்பு, புலி போன்ற ஆபத்தான உயிரினங்களைக்கூட செல்லப்பிராணிகளாக வீட்டில் வைத்து வளர்க்கின்றனர். மனிதர்களைவிட விலங்குகளே பெட்டர் என்ற மனநிலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவேண்டும் என்று எச்சரிக்கப்படுகின்றனர். அதாவது செல்லப்பிராணிகள் அன்பை மட்டுமல்ல, அவைகளுக்கே தெரியாமல் சில தொற்றுநோய்களையும் பரப்புகின்றன.

ஆம், மனிதர்களைப்போலவே விலங்குகள் மற்றும் பறவைகளும்கூட சில பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளை பரப்புகின்றன. நாக்கால் நக்குதல், கடித்தல், உமிழ்நீர் மற்றும் பொடுகு போன்றவற்றின்மூலம் தொற்றுகள் பரவி மனிதர்களை நோய்வாய்ப்பட வைக்கிறது.

டோஸோப்ளாஸ்மோசிஸ் (Toxoplasmosis)

இந்த தொற்று டாக்ஸோபிளாஸ்மா கோண்டி ஒட்டுண்ணியால் பரவுகிறது. இந்த ஒட்டுண்ணி பூனைகளிடம் காணப்படுகிறது. பூனைகள் எலிகளை உண்ணக்கூடியவை என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. எலிகள் பெரும்பாலும் ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்டுள்ளன. பூனைகளிடமிருந்து மனிதர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். எனவே வளர்ப்பு பூனைகள் வெளியே குப்பைகளிலோ அல்லது அழுக்கான பாத்திரங்களிலோ அல்லது வேகவைக்காத உணவுகளையோ உண்ணாதவண்னம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ரிங்வார்ம்கள் மற்றும் நாடாப்புழுக்கள்

பூனைகள் மற்றும் நாய்கள் மண் மற்றும் மணலில் விளையாடுவதால் அவைகளிடம் பல ஒட்டுண்ணிகள் தொற்றிக்கொள்கின்றன. செல்லப்பிராணிகள் தொற்றுள்ள உண்ணிகளை உண்ணும்போது நாடாபுழுக்கள் பரவுகின்றன. இந்த தொற்று மிகவும் லேசானதாக இருந்தாலும், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளிடையே பரவாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

கிளி காய்ச்சல் அல்லது பிசிட்டகோசிஸ்(psittacosis)

கிளமிடோபிலா என்ற பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட கிளிகள் மூலம் மனிதர்களுக்கும் தொற்றுகள் பரவுகின்றன. தொற்றால் பாதிக்கப்பட்ட கிளிகளிடமிருந்து வெளிவரும் உலர்ந்த சுரப்புகளை சுவாசிப்பதன்மூலம் மனிதர்களுக்கும் பரவுகிறது. இந்த கிளி காய்ச்சலால் குளிர், உடல் வலி மற்றும் இருமல் போன்ற பிரச்னைகள் மனிதர்களுக்கு ஏற்படும். எனவே தினசரி பறவைக்கூடுகளை சுத்தம் செய்வது அவசியம். கூட்டை பேப்பர் அல்லது துணிகளைக்கொண்டு சுத்தம் செய்து சுகாதாரத்தை மேம்படுத்துவது தொற்றிலிருந்து பாதுகாக்கும்.

ரேபிஸ் அல்லது வெறி நாய்க்கடி

உயிரையே கொல்லக்கூடிய மோசமான வியாதிகளில் ரேபிஸும் ஒன்று. சரியான நேரத்தில் முறையான சிகிச்சை எடுக்காவிட்டால் நாய் மற்றும் மனிதர் இருவருக்கும் அபாயகரமானதாக மாறிவிடும். பாதிக்கப்பட்ட விலங்கிடமிருந்து கடிபட்ட நாயின் உமிழ்நீர் மனிதர்கள்மீது படும்போது தொற்று பரவிவிடும். உடனே தடுப்பூசி செலுத்துவது அவசியம். காய்ச்சல் அல்லது காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பின் உயிர்பிழைப்பது கடினம். எனவே ஆண்டுதோறும் உங்கள் செல்லப்பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது அவசியம்.

லெப்டோஸ்பைரோசிஸ் (Leptospirosis)

வீட்டில் நாய்கள் வளர்க்கப்பட்டாலோ அல்லது எலிகள் இருந்தாலோ மிகவும் கவனத்துடன் இருப்பது அவசியம். ஏனென்றால் லெப்டோஸ்பைரோசிஸ் சிறுநீர் மூலம் பரவும். சிறுநீரிலிருக்கும் பாக்டீரியாக்கள் நீர் மற்றும் மண்ணில் பலமாதங்கள் வாழக்கூடியவை. உங்களுடைய செல்லநாய் அதன்மீது ஓடி, குதித்து விளையாடும்போது உங்களுக்கே தெரியாமல் தொற்று பரவலாம். இந்த தொற்று காய்ச்சல் மற்றும் வாந்தியில் ஆரம்பித்து உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் சிறுநீரக செயலிழப்பு வரை கொண்டுசென்றுவிடும்.

எனவே செல்லப்பிராணிகளை நேசிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அவற்றின் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பேணிக்காப்பது மிகமிக முக்கியம். அது நம்மையும் நம்மை சுற்றியுள்ளவர்களின் நலனையும் பாதுகாக்கும்.