Tourist places in south india Twitter
சிறப்புக் களம்

தொலைவுகளை தொலைப்போம்.. ஒன்றாய் வா!! - தென்னிந்தியாவில் ஹனிமூன் செல்வதற்கு ஏற்ற 7 இடங்கள்!

உங்கள் தேனிலவை இனிமையாக கொண்டாட தென்னிந்தியாவிலேயே பல இடங்கள் உள்ளன.

Justindurai S

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

உங்கள் தேனிலவை கொண்டாட வெளிநாடோ, காஷ்மீரோ செல்ல வேண்டாம். நம் தென்னிந்தியாவிலேயே மனதை மயக்கும் பல இடங்கள் உள்ளன. குளிர்ச்சியான மலைப் பிரதேசங்கள், கண்ணைக்கவரும் காயல்கள், சொக்கவைக்கும் இயற்கை எழில்மிகு இடங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். குறைந்த செலவில், சந்தோஷமாக, மனதிற்கு இதமாக உங்கள் தேனிலவை கொண்டாட எங்கெல்லாம் செல்லலாம் என்ற பட்டியல் ஒன்றை நாங்கள் தயார் செய்திருக்கிறோம். வாருங்கள் பார்க்கலாம்.

ஆலப்புழா

ஆலப்புழா

மனதை மயக்கும் காயல்கள் (கடற்கரையைச் சுற்றிலும் மண் படியவைத்தலால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றமே காயல்), ரம்மியமான நிலப்பரப்புகள் என தேனிலவை கொண்டாட வரும் ஜோடிகளை கவரக்கூடிய அத்தனை விஷயங்களும் ஆலப்புழாவில் உள்ளன. இங்கு வந்ததும் நாம் பார்க்க வேண்டிய இடம் என பட்டியல் இட்டால் முதலிடத்தில் இருப்பது படகு வீடு. இந்த அனுபவத்தை தயவுசெய்து மிஸ் செய்துவிடாதீர்கள். படகு வீட்டில் உங்கள் இணையரோடு ஒய்யாரமாக பயணம் செய்து நீங்காத நினைவுகளைப் பெற தயாராகி விட்டீர்களா?.

மூணாறு

மூணாறு

கேரளா என்றால் காயல்கள் மட்டுமல்ல, பசுமையான மலைத்தொடர்களும், கண்ணைப்பறிக்கும்  பள்ளத்தாக்குகளும் உள்ளன என நமக்கு சொல்கிறது மூணாறு. வழக்கமான ஜன நெருக்கடியோ, வாகன நெரிசலையோ நாம் இங்கு அதிகம் காண முடியாது. இந்நகரம் மேற்கு தொடர்ச்சி மலையில் இருப்பதால், இயற்கையின் உண்மையான அழகை இங்கு நீங்கள் கண்டு ரசிக்கலாம். இங்கு வருகை தந்தால் ராஜமலை – இரவிக்குளம் தேசிய பூங்காவிற்கு உங்கள் இணையரோடு கண்டிப்பாக செல்லுங்கள். உங்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

லட்சத்தீவு

லட்சத்தீவு

அழகான காடுகள், தூய்மையான கடற்கரை, சேதப்படுத்தப்படாத அழகு, என தேனிலவிற்கு தேவையான அத்தனையும் லட்சத்தீவில் உள்ளன. உங்கள் தேனிலவை கொண்டாட தென்னிந்தியாவில் இதை விட வேறு சிறந்த இடம் இருக்க முடியாது. எங்கும் அமைதியான சூழல் நிலவும் இந்த கடற்கரையில் உங்களை தொந்தரவு செய்ய யாரும் இருக்கப் போவதில்லை. ‘மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக.. தவறுகள் இனி சரி என மாற.. தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா..‘ என்ற ‘வைப்’ உடன் உங்கள் இணையரோடு கொஞ்சிப் பேசலாம். நீங்கள் விரும்பிய அமைதி இங்கு உங்களுக்கு கிடைக்கும். அதோடு கடலின் நீருக்கடியில் சில சாகசங்களை செய்து பார்க்க விரும்பினால் அதற்கும் ஏற்ற இடம் இது.

Wayanad

வயநாடு

நம் மனதை மயக்கும் கவர்ச்சியை தன்னிடத்தில் ஒளித்து வைத்திருக்கிறது என வயநாட்டை கூறலாம். தென்னிந்தியாவில் தேனிலவுக்கு என்றே அளவெடுத்து செய்தது போல் ஒரு ஊர் இருக்கிறது என்றால் அது வயநாடாகத்தான் இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையை சந்தோஷமாக இங்கிருந்து தொடங்கலாம். மலையேற்றம், படகு சவாரி, மசாலா தோட்டங்கள் என உங்கள் இணையரோடு சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் இங்குள்ளன.

இதையும் படிக்கலாமே: இது கேரளாவின் ஊட்டி: வா! வா! என அழைக்கும் வயநாடு

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி

குறைவான பட்ஜெட்டில் நீங்கள் பிரான்ஸ் செல்ல வேண்டுமா? இருக்கவே இருக்கிறது பாண்டிச்சேரி. 1954ஆம் ஆண்டு வரை பிரெஞ்ச் ஆட்சியின் கீழ் இருந்ததால், நகரம் முழுவதுமே தென்னிந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டின் கலவையாக இருக்கிறது. அழகான கஃபேகள், பிரெஞ்ச் பாணியிலான கட்டிடக்கலை என ஏதோ பிரான்ஸ் நாட்டிற்கே வந்துவிட்டோமோ என்ற நினைப்பு உங்களுக்கு வராமல் இருக்காது. அதுமட்டுமல்லாமல் இந்நகரத்தில் அழகான கடற்கரை, பல வகையான அருங்காட்சியகங்கள், பழமையான காலனிய வீடுகள் என உங்களை திகைப்பில் ஆழ்த்தக்கூடிய நிறைய இடங்கள் பாண்டிச்சேரியில் உள்ளன. முக்கியமாக, பழமையான பிரெஞ்ச் குடியிருப்புகள் நிச்சயம் உங்களை காதல் வயப்படுத்தும். உங்கள் தேனிலவை இனிமையாக கொண்டாட இதை விட வேறு என்ன வேண்டும்.

ஹம்பி

ஹம்பி

கனவன், மனைவி இரண்டு பேரும் வரலாற்றை நேசிப்பவர்களா? அப்படியென்றால் கனவனும் மனைவியுமாக நீங்கள் செல்ல வேண்டிய இடம் கர்நாடாகாவில் உள்ள ஹம்பி. 14-ம் நூற்றாண்டில் இந்தியாவின் அதிகாரமிக்க ஆட்சியாளர்களில் ஒன்றாக இருந்த விஜயநகர பேரரசின் தலைநகரமாக ஹம்பி இருந்துள்ளது. ஹம்பியைச் சுற்றிலும் 500-க்கும் மேற்பட்ட நினைவுச்சின்னங்கள் உள்ளன. உங்கள் இணையரோடு கடந்த கால வரலாற்றில் தொலைந்து போக விரும்புகிறீர்களா? இதோ இப்போதே ஹம்பிக்கு கிளம்புங்கள்.

கூர்க்

கூர்க்

‘இந்தியாவின் ஸ்காட்லாந்து’ என செல்லமாக அழைக்கப்படும் கூர்க், சுற்றுலாவை கொண்டாடுவதற்கு மட்டுமல்லாமல் தேனிலவு செல்லவும் சிறப்பான இடம். கண்ணைக் கவரும் நிலப்பரப்புகள், பசுமையான தோட்டங்கள், உங்கள் ரொமான்ஸை வெளிப்படுத்துவதற்கு ஏதுவான அழகான தங்கும் விடுதிகள் என சொல்லிக்கொண்டே போகலாம். கர்நாடகாவில் இருக்கும் இந்நகரம் ஒரு ரொமாண்டிக்கான ஊர் என்று சொன்னால் மிகையல்ல. நீங்கள் தேனிலவு கொண்டாட இங்கு செல்ல விரும்பினால் தயவுசெய்து வாரயிறுதி நாட்களில் செல்வதை தவிர்த்து விடுங்கள்.

படித்து விட்டீர்களா:  ஊட்டி, கொடைக்கானல் போர் அடித்துவிட்டதா? இதோ புதிய சொர்க்கம்! கேரளாவில் ஒரு காஷ்மீர்! - ’பொன்முடி’