”இது அரசியல் கட்சிகளுக்கு எதிரான பயணம் அல்ல. இது கருத்தியல் ரீதியான போராட்டம். திறந்த மனதுடன் பன்மைத்தன்மையை ஆதரிப்பது என்பது ஒரு கருத்தியல். பன்முகத்தன்மைக்கு எதிராகப் பிடிவாதமாக ஒற்றைத்தன்மையுடன் செயல்படுவது மற்றொரு கருத்தியல். இந்த இரண்டு கருத்தியலுக்கும் இடையே மோதல் இருக்கிறது. இந்தக் கருத்தியல் போர் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இது தொடரும். இந்தியாவின் கட்டமைப்பை அவர்கள் சீர்குலைக்கிறார்கள். கட்டமைப்பைச் சீர்குலைப்பவர்களுக்கும், காப்பாற்ற நினைப்பவர்களுக்குமான போராட்டம் இது. “
இவ்வாறுதான் ‘பாரத் ஜோடோ யாத்ரா' பயணத்தை பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. காங்கிரஸை சுற்றியிருக்கும் இன்றைய இருத்தியலை நெருக்கடியுடன் கூடவே சில முக்கியமான சவால்களும் உள்ளன.
முக்கியமான தலைவர்களின் அதிருப்தி, மற்ற கட்சிக்குச் சென்ற முக்கிய நபர்களை மீண்டும் கட்சிக்குக் கொண்டு வருவது, உற்சாகம் இல்லாமல் இருக்கும் தலைவர்களைச் சரி செய்வது, கட்சி மாற நினைக்கும் தலைவர்களின் இருப்பை வலுப்படுத்துவது, மக்களிடத்தில் காங்கிரஸ் மீதிருக்கும் பொதுக் கருத்தை மாற்றுவது என தேர்தலுக்கு முன்பு வாக்கு சேகரிப்பதை விடவும் வாக்குறுதிகள் உருவாக்குவதை விடவும் மேலே சொன்ன அனைத்தையும் காங்கிரஸ் முன்யிருக்கும் சவால்கள். களம் இவ்வாறு இருக்க..
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டு மோடி அலையைத் தன் பக்கம் திருப்ப முடியும் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களிடம் ஒரு புத்துயிர் ஏற்பட இந்த பயணம் உதவும் என்ற நம்பிக்கை தெரிவித்தாலும் அது தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்பதற்குப் பதில் வரவிருக்கும் காலங்களில் தான் மறைந்துள்ளது.
இருப்பினும் வரலாற்றில் பெரும்பாலும் கடந்த காலங்கள் தான் எதிர்காலத்தின் அடையாளங்களையும் போக்கையும் பிரதிபலிக்கிறது என்பதன் அடிப்படையில் வரலாற்றில் நடந்த முக்கிய அரசியல் நடைப்பயணங்களையும், அது ஏற்படுத்திய தாக்கத்தையும் பார்ப்போம்..
1: சந்திர சேகர், 1983
ஜனதா கட்சியை தோற்கடித்து மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்திக்கு, எதிராக சந்திரசேகர் 1983-ல் 4,200 கிலோ மீட்டர் பாரத யாத்திரையை மேற்கொண்டார். கன்னியாகுமரி முதல் டெல்லி வரை தனது நான்கு மாத பாதயாத்திரை மூலம் மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற விரும்பினார். யாத்திரையின் முடிவில் தேசிய அரசியலின் மையத்தின் வசந்த காலம் அவர் பக்கம் வீசியது. இருப்பினும் அதன்பின்பு, வி. பி. சிங் பிரதமரான விதம் சந்திரசேகருக்குப் பிடிக்கவில்லை. அடுத்த சில காலங்களில், தற்செயலாக வி. பி. சிங் அரசாங்கமும் விரைவில் வீழ்ந்தது. பின்னர் சந்திரசேகருக்கு குடியரசு தலைவர் பதவி கைக்கூடியது, ஆனால் ராஜீவ்காந்தி கொலை அரங்கேறியதால் குடியரசுத் தலைவராக எட்டு மாதங்கள் மட்டுமே நீடித்தார்.
2: ஒய் எஸ் ராஜ சேகர ரெட்டி, 2003
2003-ம் ஆண்டு பிரிக்கப்படாத ஆந்திராவின் மக்களிடத்தில் காங்கிரஸ் நம்பிக்கை இழந்திருந்தது. தெலுங்கு தேசம் கட்சி சுமார் மூன்று தசாப்தங்களாக ஆட்சி செய்து வந்த ஆந்திராவில், மாநில காங்கிரஸ் தலைவர் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி கள நிலையை உணர்ந்துகொண்டு 'பிரஜா பிரஸ்தானம்' என்ற பெயரில் இரண்டு மாதங்கள் நடைப்பயணத்தை மேற்கொண்டார். தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அவர் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கோடை மாதங்களில் சுமார் 1,500 கி.மீட்டர் பயணித்தது வெகுஜன மக்களின் அனுதாபத்தைப் பெற்றுத் தந்தது, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 2004 மே மாதம் ஒய்.எஸ்.ஆர் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
3: சந்திரபாபு நாயுடு, 2013
2004-ம் ஆண்டு நடைப்பயணம் மூலம் சந்திரபாபு நாயுடுவை ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி வெளியேற்றி ஆட்சியைப் பிடித்ததை போலவே, 2009 தேர்தலிலும் அதே வியூகம் கைகொடுத்தவுடன், சுதாரித்த சந்திரபாபு நாயுடு, 2013ல் நடைப்பயணம் வியூகத்தை கையில் எடுத்தார்.
2,800 கி. மீ. தூரத்துக்கு 'வஸ்தூன்ன மீகோசம்' (நான் உங்களுக்காக வருகிறேன்) என்ற பெயரில் 208 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டார் சந்திரபாபு நாயுடு. அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைச் சந்தித்திருந்த தன்னையும் தனது கட்சியையும் புதுப்பித்துக்கொள்ள உதவியது இந்த நடைப்பயணம். 2014 சட்டமன்றத் தேர்தலில், அவர் தனது கட்சியை மீட்டு ஆட்சிக்குக் கொண்டு வந்தார்.
4: ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி, 2017
தந்தை ஒய். எஸ். ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பிறகு, ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து ஒரு தொடர்பை ஏற்படுத்திகொண்டார். பின்பு காங்கிரஸிலிருந்து விலகி 2011-ம் ஆண்டு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். 2012-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோது, ஜெகன் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். 2014 சட்டமன்றத் தேர்தலில், ஜெகன் கட்சி தோல்வியடைந்தாலும் தனது இருப்பை வலுவாக நிலைநிறுத்தி, எதிர்க்கட்சித் தலைவரானார். 2017 ஆம் ஆண்டில், அவர் 341 நாட்கள் ஆந்திரா முழுவதும் 3,648 கி.மீ பாத யாத்திரையைத் தொடங்கினார். 2019 சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஜெகன் முதல்வரானார். அவரது இருப்பை உறுதியாகியதும் அவரை முதல்வராகியதும் அவர் மேற்கொண்ட நடைபயணம் தான் பெரிதும் உதவியது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுவதுண்டு.
5: திக்விஜய சிங், 2017
மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான திக்விஜய சிங், 2017 ஆம் ஆண்டு மாநிலத்தில் நர்மதா நதிக்கரையில் 3,300 கிமீ நடைப்பயணத்தை மேற்கொண்டார். இந்த பயணத்தை பரிக்ரமாவை "முற்றிலும் அரசியல் சார்பற்றது" என்று சிங் கூறினார் ஆனால், இந்த ஆறு மாத நடைப்பயணம், மக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள ஒரு திட்டம் என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்து கமல்நாத் முதல்வரானார். ஆனால் பின்னர், ஜோதிராதித்ய சிந்தியாவின் கிளர்ச்சி பாஜகவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்தது. அது எப்படியிருந்தாலும், இந்த யாத்திரை மாநிலத்தில் காங்கிரஸையும், சிங்கின் சொந்த அரசியல் வாழ்க்கையையும் மீட்டெடுத்தது.
சரி இப்போது ராகுலின் பாரத் ஜோடோவை பார்ப்போம்..
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தியின் ஐந்து மாத பாரத் ஜோடோ யாத்திரை தான் சமீபத்திய ஆண்டுகளில் மிக நீண்ட யாத்திரை. யாத்திரை தொடங்கிய முதல் மாதத்திலிருந்தே ராகுல் கூட்டத்தை ஈர்த்துள்ளார். கொட்டும் மழையில் அவர் பேச்சைக் கேட்க மக்கள் அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள், சிறுகுழந்தைகள் மற்றும் முதியவர்களை அவர் கட்டி அணைப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரசியல்வாதிகள் தங்களது சௌகரியங்களை விட்டுவிட்டு பொதுமக்களுடன் ஒன்றினையும் முற்சிக்கு, கடந்த கால நடைப்பயணங்களில் பொதுமக்கள் வெகுமதி அளித்துள்ளார்கள்.
அந்த வகையில் முதன்முறையாக, ராகுல் காந்தி மக்கள் மத்தியில் நடமாடுவதை பரந்த அளவிலான மக்கள் பார்க்கிறார்கள். இது நல்லெண்ணத்தை உருவாக்குகிறது. காங்கிரஸின் கண்ணோட்டத்தில், கட்சிக்கு புதிய வாக்காளர்களை உருவாக்க வேண்டியதில்லை. 2014 ம் ஆண்டு முதல் காங்கிரஸை விட்டு வெளியேறிய மக்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பது மட்டும் தான். ஆனால் இதை சொல்வது போல் எளிமையான காரியம் இல்லை.
சரி.. நடைப்பயணங்கள் உண்மையிலேயே கைக்கொடுகிறதா?
இது பற்றி மூத்த அரசியல் பத்திரிக்கையாளர் இப்திகார் கிலானி கூறுவது, அரசியல் என்பது பாலிவுட் படம் போன்றது, பொதுமக்களிடம் எது வேலை செய்யும் என்பது யாருக்கும் தெரியாது. கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதில் நடைப்பயணங்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வேலை செய்ய முடியும், ஆனால் அவை வாக்காளர்களின் பெறுவதில் குறைந்த அளவிலேயே கைக் கொடுக்கும்.
இதற்கு ஒரு உதாரணமாக ஒய்.எஸ்.ஆர் விசயத்தைப் பார்போம்.. ஒய்.எஸ்.ஆர் ஆட்சியில் மக்களுக்கு கோபம் இருந்தது. அதுதான் சந்திரபாபு நாயுடுவுக்கு கை கொடுத்தது. 2014 காங்கிரஸின் தோல்வி ராகுல் காந்திக்கு ஒரு புதிய போக்கை அமைத்துக் கொடுத்துள்ளது. ஆனால் ராகுல்காந்தியால் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை. ஒய்எஸ்ஆர் விசயத்தைப் போலவே மோடி அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் வரை ராகுல்காந்தி பொறுமையாக தான் இருக்க வேண்டும்.
தற்போது பாஜக அதன் சித்தாந்தத்தில் வேரூன்றிய வலுவான கேடர் தளத்தைக் கொண்டுள்ள. அதை எப்படி எதிர்கொள்வது எனக் காங்கிரஸ் தவிக்கிறது. எனவே தான் ராகுல்காந்தி மதச்சார்பின்மையில் தஞ்சம் அடைகிறார். கூடவே தற்போது பாஜக ஏற்படுத்தியுள்ளது நெருக்கடி மிகவும் பெரியது. இதிலிருந்து பாரத் ஜோடோ வெற்றி பெறுவது சவலான காரியம்’’ என்றுள்ளார் கிலானி.
Source - India Today