சிறப்புக் களம்

பணம் பண்ண ப்ளான் B - 6: கடன் வாங்குவது நல்லதுதான்... எதற்கு, எப்படி, எப்போது?

பணம் பண்ண ப்ளான் B - 6: கடன் வாங்குவது நல்லதுதான்... எதற்கு, எப்படி, எப்போது?

webteam

இந்தியாவில் கடன் குறித்து பல தவறான புரிதல்கள் உள்ளன. 'கடன் வாங்காமல் வாழ்வதே சிறந்த வாழ்வு' என்னும் கற்பிதம் இருக்கிறது. ஆனால், இந்தக் கொடுப்பினை பலருக்கும் இருப்பதில்லை. அதேசமயம் 'கடன் வாங்காமல் இருக்க வேண்டும்' என்னும் கொள்கைக்காக பல வாய்ப்புகளை இழப்பதற்கும் பலர் தயாராக இருக்கின்றனர்.

'வாய்ப்பு இழப்பு' (Opportunity Lost) என்பது தொழிலதிபர்கள், பிசினஸ் செய்பவர்களுக்கு மட்டுமல்ல; தனிநபர்களுக்கும் பொருந்தும். சில சமயங்களில் இழந்த வாய்ப்பினை பிற்காலத்தில் பெறமுடியும். ஆனால், சில இழந்த வாய்ப்புகளை எதிர்காலத்தில் பெறவே முடியாது என்னும் சூழல் இருக்கிறது.

அதனால், 'கடன் வாங்க வேண்டாம்' என நினைப்பது முற்றிலும் சரி அல்ல. உதாரணத்துக்கு, வீட்டுக்கடன் மற்றும் கல்விக்கடன் இவை இரண்டும் செலவுக்கான கடன் அல்ல. முன்னேற்றத்துக்கான கடன் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்

17 வயது மாணவருக்கு கல்வி ஓரளவுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கிறது. ஆனால், கடன் வாங்க கூடாது என்னும் கொள்கைக்காக கல்லூரிப் படிப்பை தேர்ந்தெடுக்காவிட்டால், இழந்த வாய்ப்பை ஒருபோதும் அடையவே முடியாது. படிக்காமல் தொழில் புரியலாம், பெரும் பணம் சம்பாதிக்கலாம் என்னும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. ஆனால் அதெல்லாம் ஃபான்டஸி கதைகள். மிகச் சிலருக்கு மட்டும்தான் நடக்கும். பலருக்கு நடக்காது. ஆனால், படித்து முடித்த பிறகு வேலை கிடைக்கும். அந்த வேலையில் புதிய வாய்ப்புகள் உருவாகும். ஒரு மிகப் பெரிய இன்னிங்ஸ் இருக்க முடியும். ஆனால், படிக்காமல் கிடைத்த வேலையை செய்யும் மாணவர் கடைசி வரைக்கும் புளூகாலர் என்னும் நிலைமையில் இருந்து மாறும் வாய்ப்பு குறைவு.

அடுத்தது வீட்டுக்கடன்... கெவின்கேர் நிறுவனத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதன் குறிப்பிட்ட அளவுக்கு நிறுவனம் வளரும் வரை வீடு வாங்கவில்லை. கிடைத்த பணத்தில் மீண்டும் தொழிலில் முதலீடு செய்து தொழிலை வளர்த்தார்.

தைரோகேர் வேலுமணி குறிப்பிடும்போது 'சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்னும் ஆசை இருப்பவர்கள் வீடு வாங்குவதை குறித்து திட்டமிட வேண்டாம். காரணம், வீட்டுக்க்கடன் உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கை சுழற்சியை மொத்தமாக மாற்றிவிடும்' என்று சொல்வார்.

ஆனால், மேலே சொன்ன இரு கூற்றுகளும் தொழிலில் இருப்பவர்கள் மற்றும் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மிகச் சிலர் தொழில் தொடங்க வேண்டும் என ஆண்டுக்கணக்கில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அது தொழில் தொடங்க வேண்டும் என்னும் எண்ணத்தில் இல்லை; இருக்கும் வேலையில் உள்ள சிக்கல், நிலையற்றத்தன்மை, பிடிக்காமை போன்றவற்றால் மட்டுமே.

தொழில் தொடங்க வேண்டும், ஏற்கெனவே குடும்பத்துக்காக வாங்கிய கடன்கள் இருக்கிறது, வேறு சில பொறுப்புகள் இருக்கிறது என்பதற்காக வீடு வாங்காவிட்டால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், நல்ல சம்பளத்தில் இருந்துகொண்டு, எந்தவிதமான பெரிய பொறுப்புகளும் இல்லாதவர்கள் கூட வீடு வாங்குவதை குறித்து திட்டமிடுவதில்லை. வீடு வாங்குவது என்பது சொத்தை உருவாக்குவதற்கு மட்டுமல்ல. கிடைக்கும் சம்பளத்தை சரியாக பயன்படுத்தவும் வீடு உதவியாக இருக்கும்.

இப்போது ஏன்?

டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் குறைந்திருப்பதை போலவே வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதமும் குறைந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை இலக்கத்தில் வீட்டுக்கடன் வட்டி சதவீதம் இருந்தது. ஆனால், தற்போது குறைந்தபட்ச வட்டி விகிதம் என்பது 6.5 சதவீதமாக இருக்கிறது. முக்கியமான தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் வீட்டுக்கடனுக்கான வட்டி என்பது 7 சதவீதத்துக்குள்தான் இருக்கிறது. இதனை விட வீட்டுக்கடன் வாங்குவதற்கு சரியான சூழல் இருக்காது.

சொந்த தேவைக்கு வாங்குபவர்களுக்கு வாடகை மீதமாகும். கொஞ்சம் கூடுதல் தொகையை செலுத்தினால் போதுமானது. குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு வீட்டின் மதிப்பும் உயரும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வீட்டினை முதலீட்டாக பார்க்க வேண்டாம் என கருதும் சூழல் இருந்தது. அதாவது, வீட்டு வாடகை வருமானம் என்பது ஒப்பிட்டளவில் மிகவும் குறைவாக இருந்தது. ஒரு கோடி ரூபாயை வீட்டில் முதலீடு செய்தால் கிடைக்கும் வருமானத்தை விட ஃபிக்ஸட் டெபாசிட்டில் செய்தால் கிடைக்கும் வருமானம் அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது வீட்டின் வாடகையில் சரிவு இல்லை. ஆனால், வங்கி பிக்ஸட் டெபாசிட்டில் பெரும் சரிவு இருப்பதால் முதலீட்டுக்காக வீடு / அபார்ட்மென்ட் வாங்குபவர்களின் எண்ணிக்கை உயரந்திருக்கிறது. தவிர, நீண்ட காலத்தில் வீட்டின் மதிப்பு உயர்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்பதால் குறைந்த வட்டியை பயன்படுத்தி முதலீட்டுக்கான வாங்குபவர்களும் உயர்ந்திருக்கிறார்கள்.

இந்த அத்தியாயத்தைப் படித்த பிறகு 'கடன் நல்லது, கடன் வாங்க வேண்டும்' என்னும் தட்டையான புரிதலை வளர்த்துக்கொள்ள வேண்டாம். தேவையான கடனை மட்டும் வாங்கவும். கடன் வாங்கி சுற்றுலா செல்வது, ஆடம்பர தேவையைகாக கடன் வாங்குவது போன்றவற்றை மறுபரிசீலனை செய்யலாம்.

ஒருவருடைய 'டேக் ஹோம்' சம்பளத்தில் 35 சதவீதம் வரை கடனுக்கான தவணை செலுத்தலாம். அதுவரை இருக்கும் பட்சத்தில் அவருடைய நிதி நிலைமை நன்றாக இருக்கிறது. இதனை தாண்டும்பட்சத்தில் கடன்களை மறுபரிசீலனை செய்வது அவசியம். இதுவரை வீடு வாங்காதவர்கள் தற்போதைய குறைந்த வட்டி விகிதத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.